Stories

பூ ஒன்று தீயானது!

By  | 

இந்த உலகம் இயற்கையானது. இயற்கை இலவசமானது. இங்கு வாழும் ஒவ்வொரு உயிர்க்கும் அதற்கு தேவையானவற்றை இந்த இயற்கை இலவசமாகவே கொடுக்கிறது. மூச்சுக்காற்று தொடங்கி தண்ணீர், உணவு இருப்பிடம் எல்லாமே இலவசம்தான். அவை இயற்கையின் வசம்தான் என்றாலும் ஓர் உயிர் வாழ்வதற்கான எல்லா அத்தியாவசிய தேவைகளும் ஓரிடத்திலேயே கிடைத்துவிடுவதில்லை. அதுதான் இந்த உலகில் உயிர்கள் ஓரிடத்தில் நிலைத்திருக்காது, இன்னோர் இடத்துக்கு மாறி மாறி போய்க்கொண்டே இருக்கிறது, தன் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக.

இந்த இடத்தில் தான் தன்னிடத்தில் தனக்கு தேவையான ஒன்று தேவைக்கு அதிகமாக இருக்கும்போது அதை தன்னிடம் இல்லாத ஒன்றுக்கு நிகராக தன்னிடமுள்ளதை கொடுத்து பெற்றுக்கொள்ள தொடங்குகிறது.

உண்மையில், இன்று உலகின் அத்தனை பிரச்சினைகளுக்கும் முழு முதற்காரணம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.

பண்டமாற்றின் வளர்ச்சி இன்று பணம் மாற்றாக வளர்ந்து, இந்த உலகில் இலவசமான இயற்கையை கொண்டு வாழவேண்டிய உயிர்கள் இலவசத்துக்கு கட்டணமின்றி அனுதினமும் செத்துக்கொண்டிருக்கின்றன. இந்த பண்டமாற்றின் வளர்ச்சியில் பாதிக்கப்பட்ட எத்தனையோ உயிர்களில் சங்கீதாவும் ஒருத்தி. எப்போது உயிர்களும் ஒரு பண்டமாக பார்க்கப்பட்டதோ அன்று தொடங்கியது, கற்பு என்ற ஒன்றும் ஒரு பண்டமாக பறிமாற….

இதில் என்னவொரு பரிதாபமென்றால், கற்பை பெண்பாலுக்கு மட்டுமே மட்டுப்படுத்தியதுதான் ஆணாதிக்க அசிங்கங்களின் உச்சம்.

தனக்கு தேவையான ஒன்று இன்னொருவரிடம் இருந்தால், அதற்கு ஈடாய் தன்னிடமுள்ள அவருக்கு தேவையானதை கொடுத்து, தனக்கு தேவையானதை பெறுவதுதான் ஆரம்பகால பண்டமாற்றாக இருந்தது.

இன்று அதுதான் விபச்சாரம் என்ற ஒன்றின் ஆரம்பப் புள்ளியாக முளைத்து வளர்ந்திருக்கிறது. விபச்சாரம் தன்னிடமுள்ள ஆண்மையை அல்லது பெண்மையை தன்னிடம் உள்ள உடல் சூட்டை அந்த சூடு தேவைப்படும் ஆண்மை அல்லது பெண்மையோடு பகிர்ந்துகொள்கிற பண்டமாற்று உயிர்களின் உணர்வு தேவைகளுக்காக கூடுமிடம் தான் காமமாகும். அது உலகில் தோன்றிய எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகும். தனக்கு தேவையான ஒன்று அது பிறரிடம் இருந்தால், தன்னிடமுள்ள ஒன்றை அதற்கு ஈடாக கொடுத்து பண்டமாற்றும் வழக்கத்தின் முதற்புள்ளியாக காமமே இருந்திருக்கவேண்டும்.

வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தின் மூத்தவள் சங்கீதா. மூத்த பிள்ளையாக பிறந்தாலே பெரும்பாடுதான். அதிலும் பெண்ணாக பிறந்தால் சொல்லவும் வேண்டுமா?

விபத்தொன்றில் இரு கால்களையும் இழந்து வீட்டிலேயே முடங்கிப்போன அப்பா, பருவ வயதை தாண்டி பள்ளிக்கூடம் போகும் இரண்டு தங்கைகள்…

ஆஸ்துமா நோயோடு அம்மா மட்டுமே கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றிக்கொண்டிருந்த வேளை குடும்பச்சுமை காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்கு செல்கிறாள், சங்கீதா.

வாழ்க்கை இவளுக்கு எவ்வளவு நிறைய வறுமையை கொடுத்திருக்கிறதோ, அவ்வளவு நிறைய அழகை கொடுத்துள்ளது. பொது நிறம் என்றாலும் நல்ல லட்சணமானவள். துடிதுடிப்பும் நல்ல பண்பும் கொண்டவள். ஊரில் மட்டுமல்ல, வேலைத்தளத்திலும் எல்லோரும் இவளிடம் இலகுவில் அணுகக்கூடியவாறு இருந்தாள்.

பலசரக்கு மொத்த வியாபார கடையில் பொதி செய்யும் வேலை. அவள் வேலை செய்யும் அந்த கடை முதலாளியின் மகனுக்கு சங்கீதா மீது எப்போதும் தீராத மோகம்தான்.

பொதுவாகவே எதிர்ப்பால் மீது ஒருவித ஈர்ப்பு வருவது இரு பாலாருக்கும் இருக்கிற பொதுவான தன்மை என்றாலும், ஆண்களுக்கு பெண்கள் மீது ‘அது’ அதிகமாக இருப்பது சற்று முரண் தான். இது இன்னும் ஒருபடி மேலே போய் வயது, உருவ வித்தியாசம் இன்றி பெண் குழந்தைகள், மூதாட்டிகள் வரை ஈர்ப்பு அதிகரிக்கிறது. இதற்கு பாசம், அன்பு, காதல், காமம் என எத்தனையோ உள்ளர்த்தங்கள் உள்ளதை பெண்கள் அறிய வாய்ப்பில்லாமல், பொதுவான அன்பாகவே அதனை எடுத்துக் கொள்வதுதான் பல பெண்கள் ஆண்களிடம் சிக்கிக்கொள்ள காரணமாகிறது.

பெண்கள் விடயத்தில் படு கிள்ளாடியான முதலாளி மகனை எல்லோருக்கும் நன்றாக தெரியும். வேலைக்கு சேரும்பொழுதே அவளுக்கு அது பலரால் அறிவுறுத்தப்பட்டது. ஆரம்பத்தில் காதலிப்பதாக சொல்லி அவளை நெருங்கியவனை சங்கீதா தனது குடும்ப நிலையையும், அவனுக்கும் தனக்குமான சமூக, குடும்ப அந்தஸ்து பேதத்தையும் காரணம் சொல்லி காதலிக்க மறுத்தாலும், அவனோடு நல்ல நட்பாகவே இருந்தாள். தான் வேலை செய்யும் முதலாளியின் மகனல்லவா!

இது ஒரு மனிதன் சக மனிதனோடு ஒன்றிப்போகும் சாதாரண குணமல்ல. இது ஒருவித அடிமைத்தனம் என்றே சொல்லலாம். போகப் போக அவனது வற்புறுத்தல்கள் அதிகரித்தது. வேலை இடத்தில் அவளுக்கான சித்திரவதைகளை கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேற்றினான்.

முன்பெல்லாம் காதலிக்க சம்மதம் கேட்டு தொல்லை செய்தவனின் இப்போதைய கோரிக்கை எல்லாம், ஒரே ஒரு தடவை தன்னோடு உல்லாசமாய் இருக்கவேண்டும்… அதற்கு ஈடாய் அவள் கேட்கும் தொகையை தருவதாக பண்டமாற்று விபச்சாரத்தை நாகரிகமான வியாபாரமாக பேசிக்கொண்டிருந்தான்.

எந்தவொரு பெண்ணும் தனக்கு பிடிக்காத ஒருவனோடு அல்லது தனது வாழ்க்கைக்கு துணையாக தான் நினைக்காத ஒருவனோடு அல்லது தனக்கு பாதுகாப்பு இல்லையென உணரும் ஒருவனோடு அந்தரங்கத்தை பகிர்ந்துகொள்ள மாட்டாள் என அந்த வாலிபனுக்கு புரிய வயதோ அனுபவமோ இல்லைதான். என்றாலும் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக காமத்தை பகிர்ந்துகொள்ள கேட்கும் அளவுக்கு இன்றைய ஆண்களின் நாகரிகம் வளர்ந்துள்ளது. இதுவே ஒரு பெண் இதுபோல தனக்கான பாலியல் உள்ளிட்ட தேவைகளை வெட்ட வெளிச்சமாக பகிர்ந்துகொண்டால் எதிர்ப்பதம், இல்லாத விபச்சாரி பட்டம் தானே கொடுக்கும்?

காமத்தை இத்தனை வெட்டவெளியில் பேசும் ஆண்கள் எத்தனை பேர் தன் மனைவி, பிள்ளைக்கு மாதவிடாய் காலத்தில் கடைக்கு போய் வாங்கிக் கொடுக்கிறார்கள்? அந்த அளவுக்கு மனித நேயம், மனித மாண்பு  இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறானா மனிதன் என சிந்திக்கிற சங்கீதாவுக்கு பொங்கி எழும் ரௌத்திரத்தை தனக்குள்ளே அடக்கிக்கொள்ள காரணமாயிருப்பது அவளது சூழல். இதுவே ஒரு பணக்கார பெண்ணிடமோ அல்லது பாதுகாப்புக்கு ஆள் இருக்கிற பெண்ணிடமோ இத்தனை வெட்ட வெளிச்சமாய் தனக்கான உடல் சார்ந்த தேவைகளுக்கு சம்மதம் கேட்பானா? அங்கே கேட்டால் அடிதடி, வழக்கு வம்புகளை கொண்டு வரும். ஆனால், பாதுகாப்புக்கு ஆள் இல்லாதவர்களை, ஏழ்மையானவர்களை இலகுவாக அணுகுவதன் காரணம், பின்னால் தனக்கு எந்த பிரச்சினையும் வராது என்பதாலேயே.

அவள் காதலிக்க மறுத்தபோது, அவளை ஒரு நாள் மட்டும் படுக்கைக்கு அழைத்தபோது தான் அவளுக்கொன்று தெளிவாக புரிந்தது… ‘இவ்வளவு நாள் அவன் காதல் என்ற பெயரில் நாகரிகமாக படுக்கைக்கு என்னை தயார்ப்படுத்தி இருக்கிறான்…’ இப்போதைய காதல் விண்ணப்பங்கள் எல்லாம் காமத்துக்கான மறைமுகமான அழைப்பிதழ்தானே…

இயலாமையினால் இயன்ற காரியம் ஒன்று உண்டென்றால், அது இயலாத இடத்தை விட்டு இயன்ற இடத்துக்கு இடம் மாறுவது. அப்படித்தான் சங்கீதாவும் காலம் செல்ல இப்போது அவள் வேறு ஓர் இடத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தாள். ஆனால், தினமும் அவளை பின்தொடர்ந்தவன் ஒரு நாள் அவளை அடைந்தே தீருவேன் எனவும், அதற்கு முன் நீயே சம்மதித்தால் சேதாரம் குறைவு எனவும் சொல்லும்போதெல்லாம் அவள்,

‘தான் உடலால் பெண் தானே தவிர, ஓர் ஆணுக்கு எந்த விதத்திலும் கீழானவள் அல்ல… அவளுக்கு வருகிற கோபத்தில் ஓங்கி கன்னத்தில் அறையணும் அல்லது கத்தியெடுத்து அவன் நாக்கை அறுக்கணும் அல்லது அவனது ஆண் எனும் அகந்தையை ஒழிக்கணும்’ என துடித்தாலும், பொதுவாக இப்படியான ஆண்கள் உடலளவில் மட்டுமே ஆண்கள்… மனதளவில் அவன் பைத்தியக்காரன் என்றே உணர்ந்தாள்.

சுயமாக சிந்திக்கத் தெரியாதவனையே  பைத்தியக்காரன் என்கிறோம். அப்படி இவனும் சுயமாக சிந்திப்பானென்றால், நிச்சயம் அவளிடம் இப்படி நடந்துகொள்ள மாட்டான். பொதுவாக எல்லோருக்கும் எல்லா விதமான ஆசைகளும் வருவது இயற்கை. ஆனால், அதனை சுயகட்டுப்பாடு செய்யத் தெரியாதவனே பைத்தியக்காரன் ஆகிறான்.

இன்று உலகில் பல பேர் இப்படித்தான் சுயகட்டுப்பாடு இன்றி, பைத்தியக்காரனாக தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணராமலேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

பலமானவன், பலவீனமானவனை அடக்கி ஆழ தெரிந்தவர் மட்டுமே இன்றைய உலகில் நன்றாக வாழத் தெரிந்தவனாக இருக்கிறான். தவிர உண்மையான பலம் என்பது பலவீனத்தை காப்பதே என தெரியாமலே வாழ்ந்துவிடுகிறான். சங்கீதாவின் வாழ்விலும் பலம், பலவீனத்தை ஆண்டது. ஆம். வேலை முடித்து வீடு திரும்பியவளை அவள் எதிர்பாரா நேரம் அவளை அவனது வாகனத்தில் கடத்தி கற்பழித்தான்…

வெளியில் சொன்னால் உன் குடும்பத்தை கூண்டோடு அழித்துவிடுவதாக சொன்னதோடு கூரிய ஆயுதங்களை காட்டியும் மிரட்டினான். இதனை வெளியில் சொன்னால் அவமானம் உனக்குத்தான் என பாடம் சொல்லி, பயமுறுத்தி இருந்தான். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் எல்லாம் நடந்து முடிந்ததை அவளால் அத்தனை எளிதில் நம்ப முடியவில்லை. நடந்ததை கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை.

ஒரு பெண் வேலை விட்டு, உடல் களைத்து பசியோடு வீட்டுக்கு போகிறபோது, உடல், உள்ளம் பலவீனமான நேரம் தான் எதிர்பாராத அசம்பாவிதம் நடந்தால் மனதில் தானாக ஒரு பயம் ஒட்டிக்கொள்ளுமல்லவா? அந்த பயம் சங்கீதாவை முற்று முழுதாக ஒட்டிக் கொண்டிருந்தது. தினந்தோறும் கற்பழிப்பு பற்றிய செய்திகள் வரும்போது நாம் அதை வாசிப்பதோடு சரி, அதனை கடந்துவிடுகிறோம். ஆனால், ஒரு கற்பழிக்கப்பட்ட பெண் உடல், உள அளவில் எவ்வளவு ரணங்களை அனுபவிக்கிறாள் என்பதை உள்ளூற உணர நீங்கள், நான், நாம் ஒவ்வொருவரும் கற்பழிக்கப்படவேண்டும். அன்றி இன்னும் எத்தனை கற்பழிப்புகள் நடந்தாலும் அதனை தடுக்க இந்த சமூகம் முன்வராது. ஆயிரத்தில் ஒரு செய்தியாகவே அதனை கடந்து செல்லும்…

தன் கையிலிருக்கும் ஒரு சொக்லேட்டை வழியில் போனவன் பறித்துச் செல்வது அந்த குழந்தைக்கு இழைக்கப்பட்ட எத்தனை பெரிய கொடுமை தெரியுமா? உங்களுக்கு சொந்தமான எல்லா உடைமைகளையும் ஒருவன் பறித்து செல்லும் வரை அதனை உங்களால் முழுமையாய் உணரமுடியாது.

தன் உடலை தனது அனுமதி இல்லாமல் ஒருவன் ஆளும்போது, தன்னுடலை தன் கட்டளையை மீறி ஆளும்போது உடல் தன் முழு பலத்தையும் பிரயோகிக்கும்.

தன் உடல் முழுவதும் ஒருவனால் கட்டுப்படுத்தப்பட்டபோது அவளது அந்த முழு பலமும் கைகொடுக்கவில்லை.

மிருக வகையை சேர்ந்த மனிதன் மனித வடிவில் வாழ்கிறானே தவிர, மனிதனாக வாழவில்லை. வேட்டையாடி உண்ணும் பழக்கம் உடைய மிருகங்களின் கோர முகத்தை அவன் தன்னை பலாத்காரத்துக்கு முயற்சித்த பொழுதில் உணர்ந்தாள். பிற உயிரினங்களாவது வேட்டையில் தன் முழு உயிரையும் இழக்கிறது. ஆனால், மனித வேட்டையில் மட்டும் தான் சதையை வேட்டையாடி உயிரை மட்டும் விட்டு விடுகிறது. சில நேரங்களில் அதையும் கூடவே எடுத்துவிடுகிறான்.

கைகளிரண்டையும் பலமாக முறித்து, அவள் முதுகுபுறத்தில் ஒருசேர இணைத்தவன் தன் ஆடைகளை கலைகையில், கையாளாகாத பொழுதுகளில் கடவுளைத்தானே தஞ்சடையும் மனசு. அவள் வேண்டாத கடவுள் இல்லை. ஒரு தெய்வமும் காப்பாற்றவில்லை. அப்போது தான் அவளுக்கு புரிந்தது, கோவில், குளம் கட்டி உந்த பார்ப்பணர்கள் கடவுள் இருப்பதாக சொல்லி பிழைப்பு நடத்துகிறார்கள் என. கேட்டால், ‘எல்லாம் அவன் செயல்’ என சொல்லும் எவரிடமும் பதிலிருக்காது, ‘அவள் கற்பழிக்கப்பட்டதும் ஆண்டவன் செயலா’ என கேட்டால்.

கதறக் கதற வேட்டையாடியவனின் தேவை எல்லாம் அந்த சூடு தணிக்கும் தேவை ஒன்றே. அதன் பின்னரான எந்த பாதிப்பும் அவனுக்கு அனாவசியமானதாகவே அவனுக்கு இருந்திருக்கும். வாய்க்குள் அடைத்திருந்த துணிகளை வெளியே எடுத்து, ‘சத்தம் போடாதே’ என கட்டளை இட்டவன், ஆடைகளை சரிசெய்யச் சொன்னான். வழிந்திருந்த குருதியை துடைக்கச் சொன்னான். தலை முடியை சரிசெய்ய வைத்தான். முகத்தை கழுவிக் கொள்ள வைத்தான். கொஞ்சமேனும் குற்ற மனமே இல்லாமல் மறுபடியும் அதே வாகனத்தில் கொண்டு வீட்டில் விட்டான்.

ஊமைக்கனவானது அவளது நிலைமை. நாலைந்து நாட்கள் அவள் வெளியே வரவில்லை வீட்டை விட்டு.

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் ஒரு தீர்மானம் எடுக்க தடுமாறிய பொழுதுகளில் எல்லாம் குடும்பத்தாரின் நிலைமை அவளை வாழ உந்தியது. கண்ணீரை துடைத்துக்கொண்டு எழுந்தாள். மீண்டும் வேலைக்கு புறப்பட்டாள். பழையபடி வாழ்க்கை ஓடியது. அவளுக்கு நடத்திய கொடுமையின் பிரதிபலன் எதுவும் அவனால் அவதானிக்கப்படாதபோது அவன் மீண்டும் உஷார் ஆனான். அடிக்கடி அவளை மிரட்டினான். அவளோடு உறவு கொண்டான்.

எதற்காக இவள் இப்படி அமைதியாக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. நம் முன்னே நடக்கிற சம்பவங்கள் எல்லாம் பெரும்பாலும் வாழ்க்கை நமக்கு கொடுக்கும் எச்சரிக்கைதானே.

இன்று இது அவனுக்கு… நாளை இது உனக்கு நடக்கலாம் என்பதுதானே அதன் பொருள். அப்படித்தான் அவளால் அதை நினைக்க முடிகிறது. ஆம். அவளுக்கு தெரிந்த பெண்ணொருத்தி இதுபோல பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அதனை பொலிஸில் முறையிடப்போய், அவள் அனுபவித்தவை அவளுக்கு நன்றாக தெரியும்.

பொலிஸ் முதல் கோர்ட் வரை அவர்கள் கேட்கும் கேள்விகள்… அதற்கு அந்த கற்பழிப்பையே மறந்துவிடலாம் போல இருக்கும். கற்பழிப்பு சம்பவத்தை ஒவ்வொன்றாய் விளக்கிச் சொல்ல கேட்கும்போது வெட்கிக் கூனி குறுகி போகிற போதான வேதனைகள் இன்னொரு கழ்பழிப்புதான்.

அதன் பின் நீதிமன்றம், வழக்கு என அவள் பட்ட துன்பங்கள் பல கற்பழிப்புகளுக்கு நிகரானவை. குற்றவாளி குற்றம் நிரூபிக்கப்படாமலே வெளியில் உலாவினான். சில நாட்கள் செல்ல அவளை மன நோயாளி ஆக்கி அவள் பித்துப் பிடித்து, இறுதியில் மன நோயாளியாகவே ஆகிவிட்டாள். அந்த நிலைமை தனக்கு வந்தால் தன் குடும்பத்தால் அதை ஜீரணிக்க இயலாது. அவளுக்காக இல்லாவிட்டாலும் அவளது குடும்பத்துக்காக அவள் வேண்டும் என எல்லாவற்றையும் கடந்து கொண்டிருந்தாள்.

அன்றும் அப்படித்தான். பணத்தை கொடுத்து அவளை உறவுக்கு அழைத்திருந்தான் வலுக்கட்டாயமாக…

சில நேரங்களில் நம்மை மீறி நடக்கிற செயல்களுக்கு நாம் பொறுப்பாக முடியாது. அது அவளை கற்பழித்தானே அவனுக்கும் சாரும். ஒருவேளை அவளை அவன் அவனை அறியாமலே கற்பழித்திருந்தால் அதற்கான தண்டனையை அவளை அறியாமலே அவள் கொடுக்கும்போது அவனால் அதனை கடந்துவிட முடியாது. அப்படித்தான் நடந்தது.

அன்று அவளை போதையின் அறை மயக்கத்தில் நெருங்கிய வேளை அந்த அறை கண்ணாடியை உடைத்து அவனது ஆணுறுப்பை அறுத்து எறிந்த சம்பவமும்.

பூவொன்று தீயாகும் தருணத்தை அத்தனை இலகுவில் யாராலும் கணித்துவிட முடிவதில்லை.

ப.கனகேஸ்வரன் (கேஜி),
பொகவந்தலாவை.

You must be logged in to post a comment Login