Health

பெண்களின் பதவி உயர்வை பறிக்கும் மெனோபாஸ்

By  | 

பிரிட்டனில் பணிக்குச் செல்லும் மகளிரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் பங்கேற்ற 99 சதவீத பெண்கள் இயற்கையான உடல்நிலை மாற்றமான மாதவிடாய் நிற்றல் எனும் மெனோபாஸ் காலகட்டத்தில் ஏற்படும் சிக்கல்களும், பணியிடத்தில் உதவிகரமான சூழல் இல்லாமல் இருப்பதும் தங்கள் பணிவாழ்வைப் பாதிப்பதாக கூறியுள்ளனர். மெனோபாஸ் நிபுணர் மருத்துவர் லூசி நியூசன் என்பவர் நடத்தும் லாபநோக்கற்ற மருத்துவ ஆய்வு நிறுவனம் சார்பில் 3,800 பெண்களிடம் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மாதவிடாய் நிற்றல் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதே இந்தக் கருத்துக்கணிப்பின் நோக்கம்.

இதில் பங்கேற்ற பெண்களில் 59 சதவீதத்தினர் மெனோபாஸ் காலத்தில் பணியிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்வதாகவும், 18 சதவீதத்தினர் எட்டு வாரம் வரை அந்த விடுப்பு நீள்வதாகவும் தெரிவித்துள்ளனர். பணித்திறன் குறைவது, மோசமான வேலை தரம், கவனிக்கும் திறனில் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவையே இதற்கு முதன்மையான காரணங்களாக சுட்டப்பட்டிருக்கின்றன. ஐந்தில் ஒருவர் மாதவிடாய் நிற்றல் எனும் மெனோபாஸ் நிலையை அடையும்போது நிகழும் உடல்நலச் சிக்கல்களின் காரணமாகவே பதவி உயர்வு வாய்ப்பை ஏற்க மறுத்துவிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.

60 சதவீதத்தினர், தங்கள் பணியிடங்களில் மாதவிடாய் நிற்றலை எதிர்கொள்ள தேவையான ஆதரவு கிடைப்பதில்லை என்று கூறியுள்ளனர். இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகள், பணியிடங்களில் மாதவிடாய் நிற்றலுக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்தும் என்றும் நியூசன் தெரிவித்துள்ளார்.

மேலும், மாதவிடாய் நிற்றல் (மெனோபாஸ்) குறித்த ஆதாரபூர்வமான தகவல்கள் மற்றும் சிகிச்சையைப் பெற்று உடல்நலச் சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் இந்த ஆய்வு உணர்த்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login