Articles

பெண்களின் வாயை பூட்டும் கடிவாளம்!

By  | 

நாம் கடிவாளம் பார்த்திருக்கிறோம். குதிரையின் முகம், தலைப்பகுதி, தாடைகள், நெற்றி, மூக்கு, தொண்டை, வாய் ஆகியவற்றை கடிவாளம் பல பட்டைகளைக் கொண்டு இணைக்கிறது. பல்வேறு வடிவங்களில், வெவ்வேறு பெயர்களுடன் இவை உலகமெங்கும் பயன்படுத்தப்படுகின்றன.

அனைத்தின் நோக்கமும் ஒன்றுதான். குதிரையின் மெல்லிய முகத் தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அதன் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

கடிவாளம் பொருத்தப்பட்ட குதிரையை நம் போக்கில் திருப்புவதும் நாம் விரும்பும் வழியில் இயக்குவதும் சுலபம். இத்தகைய ஒரு கருவியைப் பெண்களுக்கென்றே பிரத்தியேகமாகத் தயாரித்த பெருமை ஸ்கொட்லாந்தையே சேரும்.

பிரிடில் அல்லது பிரிங்ஸ் என அதனை அழைக்கிறார்கள். நான்கு வளைந்த கம்பிகளைக் கொண்ட முட்டை வடிவ இரும்புக்கூண்டு அது. முன் பகுதியில் மூக்கு போன்ற சற்றே உப்பிய ஒரு பகுதி இருக்கும். கீழ்ப்புறத்தில் ஒருவருடைய தாடையைப் பொருத்தக்கூடிய அளவுக்கு இடமிருக்கும். உணவு, நீர் உள்ளே செல்வதற்கு வசதியாக சில துளைகள் போடப்பட்டிருக்கும்.

இந்த பிரிடிலை ஒருவருடைய முகத்தில் பொருத்திவிட்டு அழுத்தமாக முடுக்கிவிட்டால் போதும். சம்பந்தப்பட்ட நபர் சிறைப்பட்டுவிடுவார். குதிரையைப் போல அவருடைய முக தசைகள் இறுகி, இயல்பான இயக்கம் செயலிழக்கும். வாயருகே உள்ள துளை வழியாக ரொட்டியோ நீரோ கொடுக்கலாம்.

இதை உருவாக்கியது ஸ்கொட்லாந்து என்றாலும், பிரிட்டனிலும் இது பிரபலம்.

16ஆம் நூற்றாண்டளவில் ஸ்கொட்லாந்திலும், ஒரு நூற்றாண்டு கழிந்து பிரிட்டனிலும் இது பயன்படுத்தப்பட்டிருக்கும். கடைசியாக 1824ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு வந்துள்ளது. வேறு பல நாடுகளுக்கும் இது வேகமாகப் பரவியது.

சரி, எதற்காக இந்த பிரிடில்?

பிடிபடும் குற்றவாளிகளை வதைப்பதற்காக உருவாக்கப்பட்ட பல்வேறு உபகரணங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள். பிரேசிலில் கைதிகள் பலருக்கு இந்த பிரிடிலைப் பொருத்தியிருக்கிறார்கள். ஒரு சங்கிலியையும் அத்துடன் பொருத்திவிட்டால், கைதிகளை வெளியிலும் அழைத்துச் செல்லமுடியும். உடையாது, சட்டென்று அகற்றிவிட முடியாது என்பதால் பாதுகாப்பானதும்கூட.

பிரிடில் பொருத்தப்பட்ட கைதிகள் வீதிகளைச் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்கின்றன குறிப்புகள். மேலும் சிலர் மூட்டை முடிச்சுகளை இறக்கி, ஏற்றுவது போன்ற கடினமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அவ்வப்போது வேலையை நிறுத்தி ஆகாரம், குடிநீர் கொடுத்துவிட்டு மீண்டும் வேலை செய்யுமாறு உத்தரவிடுவார்கள்.

கைதிகள், மனம் வெறுத்து நஞ்சு உட்கொள்வதைத் தடுப்பதற்கும் மற்ற சிவிலியன்களை அவர்களிடமிருந்து பாதுகாக்கவும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆபத்தானவர்கள் என்று கருதப்பட்ட கைதிகளின் முகம் முழுக்கவே மூடப்பட்டிருக்கும். கண் தெரியவும் சுவாசிக்கவும் உண்ணவும் மட்டுமே துளைகள் இருக்கும். ஆபிரிக்க அடிமைகளைக் கட்டுப்படுத்தவும் இதையே பயன்படுத்தியிருக்கிறார்கள். சிலருடைய கடிவாளம் கழுத்துப் பகுதியையும் சேர்த்தே மூடியிருக்கும்.

இவற்றையெல்லாம் உருவாக்குவதற்கென்றே நிபுணர்கள் சிலர் இருந்தனர். உபயோகத்துக்குத் தக்கவாறு சிறுசிறு மாற்றங்களுடன் அவர்கள் புதிய கடிவாளங்களை இரும்பில் உருவாக்கித் தந்தார்கள்.

ஸ்கால்ட்ஸ் பிரிடில் என்னும் கடிவாளம் முழுக்க முழுக்க பெண்களுக்காகவே உருவாக்கப்பட்டவை. தேவையற்றதைப் பேசும் பெண்ணைக் குறிக்கும் சொல்லாக ‘ஸ்கால்ட்’ இருந்திருக்கக்கூடும். அதிகம் பேசும் பெண்களை, வம்பு செய்யும் பெண்களை, சண்டையிடுபவர்களை, கணவனின் பணிகளுக்குக் குறுக்கீடு செய்பவர்களைத் தண்டிக்கவும் சிறைப்படுத்தவும் இந்தக் கடிவாளம் பயன்படுத்தப்பட்டது.

குற்றவாளிகளுக்கான கடிவாளங்களை காவலாளிகளும் அரசு அதிகாரிகளும் பயன்படுத்தினார்கள் என்றால், பிந்தையதைக் கணவர்கள் வீட்டு உபயோகத்துக்காக சுதந்திரமாகப் பயன்படுத்தினார்கள். குதிரைக் கடிவாளங்களைப் போலவே!

“அடிக்கடி என் மனைவி பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டையிடுகிறார், அவள் அருகில் இருக்கும்போது என்னால் வேலை செய்ய முடியவில்லை” போன்ற காரணங்களே இந்தக் கடிவாளப் பயன்பாட்டுக்கு போதுமாக இருந்தன. “புறம் பேசுகிறார், வம்படிக்கிறார், நீள நீளமாகப் பேசுகிறார், வசைச் சொற்களைப் பயன்படுத்துகிறார்” போன்றவை இன்னபிற காரணங்கள். ஸ்கால்ட்ஸ் பிரிடிலின் உட்புறத்தில் ஒரு கூர்மையான கம்பி நீண்டிருக்கும். இதை ஒரு பெண்ணின் முகத்தில் பொருத்தும்போது அந்தக் கம்பி உட்புறமாக அவளுடைய வாயில் மிகச் சரியாக புகுந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும். கடிவாளத்தை ஆட்டவோ அசைக்கவோ முடியாது. தண்ணீர் அருந்தலாம். உணவு மென்று உண்ணலாம். சுவாசிக்கலாம். உயிருக்கு உத்தரவாதம் இருக்கும். ஆனால், அவளால் ‘தொந்தரவுகள்” உண்டாகாது. முக்கியமாக, தன் நாக்கை அவளால் அசைக்கவே முடியாது. அப்படி அசைக்க முயன்றால் முள் குத்தும். ஒரு சொல்கூட பேச முடியாது. நோக்கமும் அதுதான்.

ஒரு பெண்ணின், இருப்பதிலேயே ஆபத்தான உடல் பாகமான நாக்கைக் கட்டுப்படுத்தும் கலையை ஆண்கள் முழுமையாகக் கற்றுணர்ந்ததன் அடையாளமாக, இன்றும் இந்தக் கடிவாளம் பிரிட்டிஷ் அருங்காட்சியகங்களில் இருக்கிறது. சங்கிலி இணைக்கப்பட்ட கடிவாளங்களைப் பெண்களுக்கும் பயன்படுத்தியிருக்கிறார்கள். வெளியில் அழைத்துச்செல்ல நேரும்போது இந்த வசதி அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கும். தவிரவும், வீட்டிலேயே ஓரிடத்தில் நிற்க வைத்து கட்டிப்போடவும் இது பயன்பட்டது.

பேச்சு மட்டுமல்ல, ஒரு பெண்ணின் நடமாட்டம்கூட ஆண்களை எரிச்சலடைய வைத்ததால் இந்த ஏற்பாடு. சில நேரம் சின்ன மணிகளும் கடிவாளத்தில் இணைக்கப்பட்டன. பிரச்சினைக்கு உரிய ஒரு பெண் அருகில் வந்துகொண்டிருக்கிறாள் என்பதைச் சிணுங்கும் மணிகள் ஒருவருக்கு உணர்த்திவிடும். “குதிரையின் வாயை ஏன் பூட்டி வைத்திருக்கிறாய்” என்று எப்படி ஒருவரைப் பார்த்து உரிமையுடன் கேட்க முடியாதோ, அவ்வாறே, “ஏன் உன் மனைவியை பிரிடிலுக்குள் சிறைப்படுத்தியிருக்கிறாய்” என்றும் ஓர் ஆணைக் கேட்க முடியாது. அது அவன் உரிமை. எப்போது ஒரு பெண்ணின் நாக்கைக் கட்டுப்படுத்தவேண்டும், எவ்வளவு காலம் இந்தக் கட்டுப்பாடு நீடிக்கவேண்டும் என்பதை அவனே முடிவு செய்வான். விடுவிக்கும் உரிமையும் அவனுக்கே உண்டு.

கணவன் போக, பல நேரங்களில், உள்ளுர் நீதிமன்றமும் பெண்களுக்கு பிரிடில் தண்டனை அளித்திருக்கிறது. குற்றவாளியைப் போல பிரிடில் அணிந்த பெண்ணைப் பொது வீதிகளில் சங்கிலி போட்டு அலைய வைத்து, அவளை அவமானப்படுத்தும் செயலையும் சட்டப்படியே செய்திருக்கிறார்கள்.

சில ஆண்கள் இரக்கமுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். உனக்கு என்ன வண்ணம் பிடிக்கும் என்று கேட்டு, அந்த வண்ணத்தை பிரிடிலுக்குத் தீட்டி அணிவித்தவர்கள் இருந்திருக்கிறார்கள். தங்க முலாம் போடப்பட்ட கடிவாளங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

சரி, இப்போது பிரிடில்கள் இல்லை என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?

நாகரிக வளர்ச்சி அடைந்துவிட்டதால், இதெல்லாம் தவறு என்பதை ஆண்கள் உணர்ந்துவிட்டார்கள் என்றா? அல்லது கண்களுக்குத் தெரியாத கடிவாளங்களை அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றா?

You must be logged in to post a comment Login