Women Achievers

பெண்களுக்கு சம உரிமை என்பது…

By  | 

இந்த இருபத்தோராவது நூற்றாண்டில் விண்வெளியில் வீடு கட்ட செப்பனிட்டுக்கொண்டிருக்கும் விஞ்ஞான யுகத்திலும் அடுப்படியே தஞ்சமென வாழும் அனேக பெண்கள் இல்லாமல் இல்லை.

தன் குடும்பம் அல்லது சமூகம் சார்ந்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தகர்த்திடாமல் தன்னை சுற்றி வட்டமிட்டு, வட்டத்தினுள் கோடு கீறி, வாழ்க்கை நடத்தும் பெண்கள் பெரும்பாலும் பொது வெளிகளிலோ சமூக வலைத்தளங்களிலோ தன் முகம் மறைத்து கண்ணாடிக்கு பின்னாலிருந்தே தமது அலங்காரங்களை ரசிப்பவர்களாக இருப்பார்கள்.

 

இதனால் இவர்கள்:

* நாகரிகம் தெரியாதவர்கள்

* நாட்டு நடப்பு அறியாதவர்கள்

* உலகத்தோடு ஒட்டி வாழ பழகாதவர்கள்

* படிப்பறிவற்றவர்கள்

* பண்பாடு கலாசாரம் புரிதலற்றவர்கள்

* நவீன உலகத்தை விரும்பாதவர்கள்

என நாமாகவே தப்புக்கணக்கை போடுவது நமது அறியாமையேயன்றி, அவர்கள் இதில் எவ்வித பங்கும் வகிக்கவில்லை. மாறாக, அவர்கள் அவர்களாகவும், அடுத்தவரின் விமர்சனங்கள் மற்றும் இடையூறுகளுக்கு  அப்பாற்பட்டவர்களுமாகவே வாழும் நல்லொழுக்கம் கற்றுத் தெளிந்த நல்ல மங்கையர்கள் என பெருமை கூறுவதில் தவறேதுமில்லை.

இன்றைய நாகரிக பெண்கள் உலகளாவிய ரீதியில் அனைத்து பதவிகள் மற்றும் துறைகளிலும் ஆணுக்கு நிகராக அங்கம் வகிக்கின்றார்கள் என்றால், உண்மையில் இவ்வுலகம்,

* பெண்களுக்கு விடுதலை சுதந்திரம் அளித்திருக்கிறது.

* அவர்களுக்கும் சம உரிமைகள் கொடுத்து அழகு பார்க்கிறது.

* அவர்களின் திறமைகளை மெச்சுகிறது

* அவர்களின் கருத்துக்களை வரவேற்கிறது

* அவர்களின் முடிவுகளை ஏற்கிறது.

* மொத்தத்தில் பெண்களையும் மதிக்கிறது, கௌரவிக்கிறது…

* பெண்களும் ஆளுமையை வெளிப்படுத்தி சுதந்திரமாக வாழ இடமளிக்கிறது என்றுதானே அர்த்தம்?

ஆனால், திறமைகள் இருந்தும் வசதியின்மை, சுதந்திரமின்மை, பணப்பிரச்சினை போன்ற காரணங்களால் இத்தகைய வாய்ப்புக்கள், கௌரவிப்புக்கள் கிடைக்காமல் மூலையில் முடங்கிவிடுகின்றனர், பல பெண்கள்.

அந்த பெண்களை விட திறமைகள் குறைவாக இருந்தும், தமக்கு அளிக்கப்படும் சுதந்திரத்தால் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளும் பெண்கள் தேர்ந்தெடுக்கும் பாதைகள் சரியானதுதானா என பார்த்தால், அவை ஐம்பது வீதம் சமூகத்துக்கு முன்னுதாரணமாக அமைவதற்கு பதிலாக, சில நிகழ்வுகள் அல்லது அந்த பெண்கள் நடந்துகொள்ளும் விதங்கள் எம்மை முகம் சுழிக்கத்தான் வைக்கின்றன.

குறிப்பாக, ஆடை சுதந்திரம், பேச்சு சுதந்திரம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

ஆடை சுதந்திரத்தை பற்றி பேசுவோமானால், இன்றும் சரி, பல நூறு வருடங்களுக்கு முன்னரும் சரி, சமூகத்தில் ஒரு பெண்ணை ஒழுக்கத்தின் அடிப்படையில் கணிப்பதற்காக கவனிக்கும் முதல் விடயம், அவளது ஆடைதான்.

அவ்வாறிருக்கையில், இன்றைய பெண்கள் தனியறையில் இருப்பது போன்ற உணர்வில் பொதுவெளியில் தங்கள் ஆடை சுதந்திரத்தை தடையின்றி, தாராளமாக்கிக்கொள்கின்றார்கள். அதேபோன்று அலுவலகம், வைத்தியசாலை போன்ற மக்கள் நடமாட்டம் அதிகமான, கௌரவமான இடங்களிலும் ஆடையின் அளவை குறைத்தே திரிகிறார்கள், ஃபெஷன் எனும் பெயரில்.

அடுத்ததாக, பேச்சு சுதந்திரம்…

பொதுவெளிகள், மேடைகள், கூட்டங்கள் போன்றவற்றில் தைரியமாக பேசும் பெண்களை நாம் மனதார வாழ்த்தி வரவேற்கத்தான் வேண்டும். ஏனெனில், பெண்கள் கூச்ச சுபாவமுடையவர்கள் என்கிற பார்வை சமூகத்தில் உண்டு.

இருவர், மூவர் இருக்கும் இடங்களில் கூட பேச சங்கடப்படுபவர்கள் தைரியமாக ஓரிடத்தில் நின்று பேசுவதென்பது நல்ல மாற்றம்தான்.

ஆனால், பேசத் தெரியும் என்பதற்காக அருவருக்கத்தக்க விடயங்களையும் ஆபாசமான பேச்சுக்களையும் பேசுவது உண்மையில் வேதனைதான். இதனால் இவர்கள் சமூகத்துக்கு எந்த கருத்தினையும் சொல்ல வரவில்லை. மாறாக ~பெண்ணா இவள்!| எனும் அவப்பெயரையே சம்பாதித்துக்கொள்கிறார்கள்.

இவ்வாறான ஒரு சிலரின் தவறான நடத்தைகள், பேச்சுக்களால் ஒட்டுமொத்த பெண் சமூகத்துக்கும் அவதூறு ஏற்படுவதுதான் வேதனையான விடயம். இவர்களால் சாதிக்கத்துடிக்கும் ஏனைய பெண்களும் சேர்ந்தே முடக்கப்படுகிறார்கள். அவர்களின் சுதந்திரமும் பறிக்கப்படுகிறது.

எனவே, சமத்துவம் வேண்டி நிற்கும் பெண்களாகிய நாம், நமக்காக வரையறுக்கப்பட்ட விதிகளுக்குள் வாழ்ந்து, நமது சந்ததிகளையும் சிறப்பான ஓர் எதிர்காலத்துக்கு வழிநடத்துவதே எமது கடமையாகும்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற குணாதிசயங்கள் பெண்களுக்கு மட்டுமே உரித்தானது. அவற்றை ஆண்களுக்கு ஒப்பிடமுடியாது.

அதேபோல் கருப்பை எனும் உயிர் வளர்க்கும் புனிதமான இடம் பெண்களிடமே உண்டு. அதனால்தான் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என பெரியவர்கள் எமக்கான வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கின்றார்கள். அதன்படி, நாமும் நடந்து, நம்மையும் நம்வழி வருபவர்களையும் பாதுகாத்து, ஒழுக்கத்துடன் வாழ்வோமானால் நிச்சயம் இவ்வுலகில் நாம் சமவுரிமை உடையர்களே…

– பெரியசாமி நிர்மலா

You must be logged in to post a comment Login