Articles

பெண்களும் சிறுவர்களும் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

By  | 

ஊரடங்கின்போது அதிகரித்துவரும் குடும்ப வன்முறைகள்

 வைரஸ் தொற்றுப்பரவலை   கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பல   மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம்   முன்னெடுக்கப்பட்டுவரும் இக்குறுகிய   காலப்பகுதியில், பெண்கள் மற்றும்   சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளும்   துஷ்பிரயோகங்களும் சில குடும்பங்களில்   கட்டவிழ்க்கப்பட்டு வருகின்றமை   அதிர்ச்சியளிக்கிறது.

  மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த நாட்களை விட அவர்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள தற்போதைய சூழலில்தான் குடும்ப வன்முறை சம்பவங்கள் தெருவுக்குத்தெரு நடந்தேறுகின்றன.

ஊரடங்கு சட்டம் போடப்படுவதற்கு முன் நம்மில் பலர் வெளியிடங்களுக்கு சென்று வீடு திரும்பும் நேரம் போக மற்ற பொழுதுகளில் ஓய்வையே அதிகம் நாடினர். அதனால் வம்புச்சண்டை பேர்­வழிகளாக இருப்பினும் அவர்கள் வீடுகளுக்குள்ளோ வெளியிடங்களிலோ வாக்குவாதம், அடிதடி, கைத்தகராறுகளில் ஈடுபடுவது சற்று குறைவாக இருந்தது.

ஆனால், தற்போது வெளியே செல்ல நாட்டில் தடை விதித்திருப்பதால் சிலரின் ஆட்டமும் ஆர்ப்பாட்டமும் வீடுகளுக்குள்ளேயே இடம்பெற்று வருகின்றன. இதனால் பெரும்பாலான வீடுகளில் அந்தந்த குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் பிள்ளைகள் வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

வீட்டுக்குள் வேண்டுமென்ற காரணம் கண்டுபிடித்து மனைவி, பெற்றோருடன் வாக்குவாதம் புரிந்து, சண்டையிடும் சில ஆண்களால் அவர்களின் பிள்ளைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவதோடு பிள்ளைகளும் அத்தகைய ஆண்களால் தாக்கப்படுவது, பெண்பிள்ளைகள்  பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவது போன்ற தகவல்கள் எமக்கு மிகுந்த வேதனை­யளிக்கின்றன.

கடந்த மார்ச் 20ஆம் திகதி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து, நாளொன்றுக்கு 40 சிறுவர் தொடர்பான முறைப்பாடுகள், அவற்றில் 10 சதவீதம் துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்டவை… முதல் 7 நாட்களிலேயே 111 சிறுவர்கள் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்று வருகின்றன.

இயல்பான நாட்களை விட ஊரடங்கு நாட்களில் சிறுவர் துஷ்பிரயோகம் 33 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் இதனூடாக அறியப்படுகின்றது.

மார்ச் மாதம் கடந்து ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் நீடித்துவருகிற நிலையில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மேலும் அதிகரித்தே காணப்படுகின்றன.

‘வன்முறையைக் கையாளும் நபரும் பாதிப்புக்குள்ளாகுபவரும் ஒரே வீட்டுக்குள் இருப்பதால் இக்குற்றச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. சிறுவர்களை நோய்த்தாக்கத்திலிருந்து காக்கும் பொறுப்பு இந்த இக்கட்டான நாட்களில் பெற்றோருக்கே அதிகமுண்டு. சிறுவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு பெற்றோர்கள் செயற்படவேண்டும்… தற்போது எமக்கு கிடைத்துவரும் முறைப்பாடுகளுக்கு உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்…” என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரண அண்மையில் தெரிவித்திருந்தார்.

நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு உலக மக்களிடத்தில் ஏற்படுத்தப்பட்டு அனைவரும் தம்மை தற்காத்துக்கொள்வதில் ஈடுபாடு காட்டுகிறார்கள். பல நாடுகளில் குறிப்பிட்ட சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. பலர் சுய தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர்.

இந்நிலையில் அதிகளவு பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் தங்கள் குடும்பத்தவர்களாலேயே வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என வேதனையோடு தெரிவிக்கிறார் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ்.

இதுபற்றி அவர் தொடர்ந்து உரையாற்று­கையில், ‘கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக ஊரடங்கு சட்டமும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில் பெண்களுக்கு எந்த இடம் பாதுகாப்பாக இருக்கவேண்டுமோ அத்தகைய சொந்த வீடுகளிலேயே பெண்கள் மீது வன்முறையை பிரயோகிக்கிறார்கள்.

கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுகிற அதேவேளை நாட்டிலுள்ள பெண்களின் பாதுகாப்புக்கும் அந்நாடுகளின் அரசுகள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். உலகமெங்கும் உள்ள வீடுகளில் அமைதியும் சமாதானமும் நிலவ வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன்…” என்றார்.

மேலும், தற்போது பெண்களிடம் அதிகரித்துள்ள அழுத்தங்கள் குறித்து ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர் அமினா மொஹமட் இவ்வாறு தெரிவிக்கிறார்.

‘சாதாரண வாழ்க்கையிலிருந்து விலகி, பாரியதொரு மாற்றத்தால் பொருளாதார மற்றும் சமூக அழுத்தங்கள் ஏற்பட்டு தற்போது இன்னும் அதிகமாக துன்பங்களை அனுபவித்துவரும் உலகிலுள்ள அனைத்துப் பெண்களே இன்று எனது கவனத்துக்குரியவர்கள் ஆகிறார்கள்… அவர்கள் வன்முறைகளையும் எதிர்கொள்கிறார்கள்.

ஊரடங்கின்போது பெண்களும் பெண்பிள்ளைகளும் வசிக்கும் வீட்டில் அதே குடும்பத்தை சேர்ந்த துஷ்பிரயோகியும் வசிக்கிறார். இதனால் அவர்களுக்கு முன்பை விட ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது….

இது ஒரு நாட்டுக்கு அல்லது ஒரு பிரதேசத்துக்கு மட்டுமான எழுச்சியல்ல. ஆர்ஜென்டினா தொடங்கி சீனா, ஜெர்மனி, துருக்கி, ஹொண்டுரஸ், தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் வரை கவனிக்கத்தக்கது.

பாதிக்கப்பட்ட பெண்கள் அவசர அழைப்பெடுப்பது மிகவும் அதிகரித்து­விட்டது. மலேசியாவில் அழைப்பெடுப்பது இருமடங்காகிவிட்டது. பிரான்ஸில் 32 வீதத்துக்கு மேலான அழைப்புகள் வருகின்றன.

லெபனானிலிருந்தும் பெண்களின் அவசர அழைப்புகள் கடந்த மார்ச் மாதம் இருமடங்கு பெருகிவிட்டது. அங்குள்ள பெண்களின் நிலை கடந்த வருடமும் இதே மாதம் இதேயளவில்தான் இருந்தது….

வீடுகளுக்குள் தனித்திருக்கவேண்டிய சமூக சூழ்நிலையில் பெண்களால் வேறிடங்களுக்கு செல்ல முடியாது, வெளியாட்களிடம் சென்று உதவி தேடமுடியாது என்பதை வன்முறையாளர்கள் அறிந்து­வைத்துள்ளனர். அது அவர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது….

இந்நிலையில் உலகிலுள்ள வறுமையான மற்றும் வசதியற்ற சில பகுதிகளையும் உள்ளடக்கி ஐ.நா. மனிதாபிமான ரீதியில் ஆதரவளித்து வருவதோடு பெண்களுக்கான பாதுகாப்பு சேவைகளுக்கும் முன்னுரிமை வழங்கிவருகிறது…”

சமூகத்தில் பல இடர்ப்பாடுகள் ஏற்பட்டுள்ள வேளையில் சமூகப் பார்வையுடன் பலர் செயற்பட்டுவந்தாலும் குடும்ப வன்முறைகள் நடந்தேறுவதை தடுக்க­முடியாதுள்ளது என்பதே இன்றைக்கு பல குடும்பங்களின் நிலைப்பாடாக உள்ளது.

-உருத்திரா

 

 

You must be logged in to post a comment Login