Articles

பெண்களை சோதிக்கும் ‘ஸூம் கோல்’

By  | 

பெருந்தொற்று, வீட்டிற்கே அலுவலகத்தைக் கொண்டு வந்து ஓராண்டு ஆகிவிட்டது. ‘ஸூம்’ செயலி மூலம் அலுவலக சகாக்கள் கூட்டங்கள் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. கூடவே, ஸூம் கோல்கள் தரும் தொந்தரவுகளும் பரவலாகி வருகின்றன.

அதில் ஒன்று தான் ‘ஸூம் பாட்டிக்’ எனப்படும் ஸூம் சோர்வு. இது குறித்து அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். அவர்களது கண்டுபிடிப்புகளில் ஒன்று, ஸூம் சோர்வால் ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கான காரணத்தையும் ஸ்டான்போர்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்களே உருவாக்கிய, ‘ஜெப் ஸ்கேல்’ எனப்படும், ‘ஸூம் அசதி மற்றும் சோர்வு அளவீடு’களை வைத்து, 10 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தினர்.

ஆய்வில், தினமும் சில முறை நீண்ட ஸூம் காணொலி கூட்டங்களில் பங்கேற்ற, 20 ஆண்களில் ஒருவர் மிகவும் சோர்வடைவதாகத் தெரிவித்தார். ஆனால் பெண்களில், ஏழு பேரில் ஒருவர் மிகவும் சோர்வடைவதாக தெரிவித்தார்.

ஸூம் திரையில் அலுவலக சகாக்களின் தோற்றம் சிறு கட்டங்களில் தெரியும். உரையாடும் பெண்ணின் தோற்றத்தையும் அவரே திரையில் பார்க்க முடியும். இது தான் பிரச்சினைக்குக் காரணம். தன் தோற்றத்தை, தொடர்ந்து ஒருவர் பார்க்கையில், ‘கண்ணாடித் தோற்றப் பதற்றம்’ ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஒரு நாளுக்கு பல ஸூம் சந்திப்புகளை நடத்துவது, ஒரு ஸூம் சந்திப்பு வெகு நேரம் இழுப்பது போன்றவற்றை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும். மாறாக, ஸூம் கூட்டங்களை வெகுவாக குறைப்பதும், கூட்டங்களின் நீளத்தைச் சுருக்குவதும் உதவும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

You must be logged in to post a comment Login