Q&A

பெண்ணுக்கு பேசுவதில்தான் சந்தோஷம்!

By  | 

கேள்வி:
நானும் என் மனைவியும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். ஏழு வருடங்கள் காதலித்து, இரு வீடுகளிலும் வந்த பலத்த எதிர்ப்புகளையும் மீறி திருமணம் செய்துகொண்டோம். அப்போது எனக்கு அதிக வருமானம் இல்லை. இருந்தபோதும் என் மனைவி என்னை நம்பி வந்தாள். அவளும் என் பிஸினஸில் உதவி செய்தாள். இன்று ஓரளவுக்கு வருமானம் வருகிறது. சந்தோஷமாக இருந்தோம்.

அவள் மிகவும் வெளிப்படையானவள். மிகவும் அன்பானவள். ‘கஷ்டப்படுகிறேன்’ என்று யார் சொன்னாலும் உடனே ஓடி ஓடி உதவி செய்வாள். என் மீதும் குழந்தையின் மீதும் மிகுந்த அன்பு கொண்டவள். என்னுடன் சண்டை போட்டால் ஒரு மணிநேரத்துக்குப் பின்பு அவளே வந்து பேசுவாள்.

வீட்டுக்குப் போக கொஞ்ச நேரம் ஆனாலும் உடனே பத்து முறை ஃபோன் பண்ணுவாள்.  எங்களைப் பார்த்து பொறாமைப்படாதவர்களே கிடையாது.

நான் ஒரு விடயத்தை எதற்காக செய்கிறேன், ஏன் செய்கிறேன் என்று நான் சொல்லாமலேயே புரிந்துகொள்வாள். என் மேல் உயிராய் இருந்த என் மனைவி, இப்போது வழிமாறிப் போகிறாளோ என்று தோன்றுகிறது. ஆனால், அதை அவளிடம் கேட்கவும் தயக்கமாக இருக்கிறது.

இன்னொரு புறம், நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்தால், அவள் மனம் வேதனையடையுமோ என்று நினைத்து இதைப் பற்றி கேட்கவில்லை. ஆனால், என் மனம் அதை பற்றியே நினைத்து கவலைப்படுகிறது.

தினமும் யாருக்கோ மொபைல் ஃபோனில் வட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிக்கொண்டு இருக்கிறாள். அதில் சில நேரம் இரவு பத்து மணிக்கு மேல் கூட மெசேஜ் அனுப்புகிறாள். அதில் என்ன இருக்கிறது என்றெல்லாம் நான் பார்த்தது கிடையாது. ஆனால், ஒரே ஒரு முறை அவள் வட்ஸ் அப்பை ஓப்பன் செய்துவிட்டு அப்படியே போட்டுவிட்டு போனபோது, அதில் வந்த மெசேஜ் என் கண்ணில் பட்டது. அதில் ஒரு கணவனும் மனைவியும் அந்தரங்க விடயங்களையெல்லாம் பேசியிருக்கிறார்கள் என்பது அந்த ஒரு மெசேஜில் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், எதையும் என் மனைவியிடம் கேட்க முடியவில்லை.

ஒரு வேளை அவள் செய்யக்கூடாத தவறை செய்துவிட்டால், என்ன செய்வது என்ற பயமே என்னை கொன்றுவிடும் போல் இருக்கிறது. என்ன செய்வது? எப்படி இந்த சிக்கலில் இருந்து அவளை மீட்டு நானும் மீள்வது?

Single lonesome man checking mobile phone on the couch

பதில்:
காதலித்து, பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டவர்கள் நீங்கள். உங்கள் மேல் அதிக அன்புடனும் காதலுடனும் இருந்த மனைவி இன்று வேறொருவரோடு தவறாக பழகுகிறாரோ என்கிற சந்தேகம் வதைக்கிறது. ஒரு சராசரி கணவனாக இருந்தால், இந்நேரம் இந்த பிரச்சினையை எப்படியெல்லாம் பெரிதுபடுத்தி துன்பப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு துன்பப்படுத்தியிருப்பார்கள். ஆனால், நீங்கள் பொறுமையாக இருப்பது உங்கள் மனைவி மேல் கொண்டுள்ள காதலைக் காட்டுகிறது.

ஒரு பெண் எல்லா ஆண்களிடமும் நெருங்கிப் பழகமாட்டாள். தன் மனதும் புத்தியும் ஒருசேர யாரை நம்புகிறதோ, அவனைத்தான் நம்புவாள். அவனிடத்தில்தான் எல்லா விடயங்களையும் பேசுவாள்.

இப்படி இன்னொரு ஆணைத் தேடிப் போகவேண்டிய அவசியம் உங்கள் மனைவிக்கு ஏன் ஏற்பட்டது என்று யோசியுங்கள். உங்கள் மனைவியிடம் அதிக நேரம் செலவழிக்கத் தவறினீர்களா அல்லது அவரிடம் முகம் கொடுத்து, அன்பாக பேசி எத்தனை நாட்கள் ஆனது என்பது பற்றியும் யோசியுங்கள்.

காரணம், ஒரு பெண்ணுக்கு தான் பேசுவதை அக்கறையுடன் காது கொடுத்து கேட்க ஆள் தேவை. அப்படிப்பட்ட ஆளாக கணவன் இல்லாதபோது சில பெண்களின் மனம் தடம் மாறுகிறது. வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவது மட்டும் ஒரு கணவனின் கடமை கிடையாது. அதோடு ஒரு கணவனின் கடமை முடிந்துவிடாது. ஒரு பெண்ணை உடலாலும் மனதாலும் திருப்திப்படுத்தக்கூடியவராக கணவன் இருக்க வேண்டும்.

பெரும்பாலான கணவன்மார்கள், ‘எப்ப பாரு லொடலொடன்னு எதையாவது பேசிட்டே இரு” என்று மனைவியை அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். ஆனால், பெண்ணுக்கு பேசுவது மிகவும் சந்தோஷம் தரக்கூடியது. அந்த இடத்தை நிரப்ப ஆள் இல்லாத போதுதான் உறவு சிக்கல்கள் நிறைய வருகின்றன.

நீங்கள் எப்படிப்பட்ட கணவர் என்பதை யோசித்துப் பாருங்கள். உங்கள் மனைவியிடம் அதிக நேரத்தை செலவழிக்க முயற்சி செய்யுங்கள்.

முதலில் உங்கள் மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு சில நாட்கள் சுற்றுலா போல் சென்று வாருங்கள். அங்கு உங்கள் மனைவியிடம் அன்பாக இருங்கள். அந்த அன்புடன் எப்போதும் இருங்கள். ஒரு வேளை அவர் தடம் மாறும் முதல் படியில் இருந்தால்… அவரே மனம் மாறி திரும்ப வந்துவிடுவார். அன்பும் அக்கறையும்தான் எப்போதும் இணை பிரியாமல் வாழும் வாழ்க்கைக்கு நல்ல மருந்து.

You must be logged in to post a comment Login