Children

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாதிப்புகளும் பாதுகாப்புகளும் !

By  | 

குழந்தைகள் பூவுக்கு ஒப்பானவர்கள்…

குழந்தைகள் தெய்வத்துக்கு ஒப்பானவர்கள்…

எனும் வர்ணனை முலாம் பூசும் இந்த உலகம் அவர்களை நிம்மதியாக, பயமின்றி வாழ வழி விடுகிறதா?

கருவுற்ற நாள் தொடங்கி கவனமாய் பாதுகாத்து, மொத்த நேசிப்பையும் சேமித்து வைத்து எதிர்பார்ப்புகளை மூட்டை மூட்டையாய் கட்டி வைத்து, பெற்றெடுக்கும் குழந்தை பெண் குழந்தை என்றாலே சற்றே பகீரென்றுதான் ஆகிவிடுகிறது, மனம்.

ஏன்? வளர்ப்பதற்கோ படிப்பிப்பதற்கோ இல்லை… எதிர்காலத்தின் தேவைகளுக்கு பணமின்றியோ கூட அல்ல…

இனி வருகின்ற காலங்களில், பிள்ளை பிறந்த நாளிலிருந்து அதற்கு எந்தவொரு அசம்பாவிதமும் நேர்ந்துவிடாமல், எவ்வாறு பாதுகாப்பு கொடுத்துவிடப் போகின்றோம் எனும் கவலைதான் காரணம்.

இந்த உலகம் புலி, சிறுத்தை, ஓநாய்கள் சூழ்ந்த ஒரு பெரும் கானகம் போன்றது.

பெண் குழந்தைகள் எந்நேரத்திலும் வேட்டையாடப்படலாம், அவர்களின் இச்சைக்கு பலியாகலாம், தீக்கிரையாகலாம். எனவே, பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களே கவனமாக இருங்கள்.

உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி, செய்கை போன்றவற்றில் அவதானம் செலுத்தவேண்டியது அவசியம்.

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள்தான் ஆசான்.

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள்தான் பாதுகாவல்.

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள்தான் பொறுப்பாளி.

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள்தான் நண்பர்.

எனவே, அவர்களின் தேவை என்ன என்பது உங்களுக்கே தெரியும்.

வழமைக்கு மாறாக ஏதேனும் சிறு மாற்றம் தெரிந்தால் கூட சாதாரணமாக விட்டுவிடாதீர்கள். அன்பெனும் ஆயுதத்தை பயன்படுத்துங்கள். ஆறுதலாய் தலை தடவுங்கள். மடியில் இருத்திக்கொள்ளுங்கள். மெதுவாக விசாரணை நடத்துங்கள்.

உங்கள் அன்பு அவர்களின் பிரச்சினைகளை கொட்டித் தீர்க்க வைக்கும்.

அவர்களது நண்பர்கள் யாவர்?

அந்த நண்பர்களின் நண்பர்கள் யாவர்?

அவர்களின் உறவுகள் யாவர்?

அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் யாவர்?

அதுமட்டுமன்றி, உங்கள் குடும்ப அங்கத்தவர்கள், அவர்கள் சார்ந்த நண்பர்கள், அயலவர்கள் என எல்லோரின் மீதும் அவர்களின் நடவடிக்கைகள் மீதும் எப்போதுமே ஒரு கண் வைத்தே இருங்கள்.

காலம் பொல்லாதது. யாரையும் நம்பி குழந்தைகளை ஒப்படைக்காதீர்கள்.

வெளியிடங்கள், கடைகள், தனியாக வசிக்கும் ஓர் ஆணின் அறை இங்கெல்லாம் துளியேனும் யாரையும் நம்பி, பிள்ளைகளை யாருடனும் அனுப்பாதீர்கள்.

சிறு குழந்தைகள் மிட்டாய், சொக்லேட், விளையாட்டுப் பொருட்கள், மேக்கப் சாதனங்கள் போன்றவற்றின் மீது எப்போதுமே ஈர்ப்புமிக்கவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

எனவே, அவற்றை கொடுப்பதன் மூலமே கயவர்கள் பிள்ளைகளை வசீகரிக்கக்கூடும்.

அப்படியான பொருட்களை உங்கள் குடும்பத்தினரே கூட பரிசளிக்கும்பட்சத்தில் அவரின் முகபாவங்களையும் செய்கைகளையும் நோட்டமிட தவறாதீர்கள்.

பெற்ற தகப்பனை கூட நம்பமுடியாத காலமிது. ஆயினும், தன் மகளை உயிராய் நினைக்கும் உத்தமர்களும் இல்லாமல் இல்லை.

எனவே, முடிந்தளவு குழந்தைகளை ஆண்களின் மடியில் உட்காரவிடுவது, படுக்கையில் இருக்கும் போது தனித்து விட்டுவிடுவது போன்ற காரியங்களை முற்றாக தவிர்த்துவிடுங்கள்.

பயம், அழுகை போன்றவற்றினால் அவர்கள் வெளிப்படுத்த அல்லது மறைக்க முயலும் விடயங்களை கொஞ்சம் உற்று நோக்குங்கள்.

தொடுகைகளை சொல்லிக் கொடுங்கள்.

இப்படி இந்த இந்த இடங்களில் ஒருவர் தொடுவதை அனுமதிக்கக்கூடாது எனும் முறையை பிஞ்சிலேயே பதித்துவிடுங்கள். பின்புறம் தட்டுதல், கட்டியணைத்தல், பின்னாலிருந்து அணைப்பது, தூக்கிக்கொள்வது போன்றவற்றின் விளைவை உணர்த்துங்கள்.

பாடசாலை கடைகள், பக்கத்து வீடுகள்… ஏன் உங்கள் வீடுகளிலேயே இருக்கும் ஆண்கள் ஒரு விடயத்தை கூறி ‘இதை அம்மாவிடம் கூறாதே… சொக்லேட் வாங்கித் தாரேன்’ என்றவாறு விளையாட்டாகவேனும் எவராவது கூறியிருப்பின், மறைக்காமல் அதை பிள்ளைகள் உங்களிடம் கூறும் பழக்கத்தையும் ஏற்படுத்திவிடுங்கள்.

பொதுவாக, ஒரு குழந்தைக்கு பாதிப்பு நடக்கிறதென்றால், திடீரென எங்கோ இருந்துவந்த ஒரு மர்ம நபர் முன்தோன்றி குழந்தையை சீரழித்துவிட்டார் என நிச்சயமாக கருதாதீர்கள்.

பல நாட்கள் பழக்கப்பட்டவராக இருப்பவர்களுக்கே உங்கள் குழந்தைகள் எந்த நேரத்தில், யாருடன் இருப்பார்கள், என்ன செய்வார்கள், அந்த பிள்ளைகளுக்கு எது பிடிக்கும் என்பது தெரியும். எனவே, அவ்வாறானவர்களாலேயே குழந்தைகள் அதிகமாக அநீதி இழைக்கப்படுகின்றார்கள்.

உங்கள் வீடு, தெரு, ஊர்களுக்கு வரும் வியாபாரிகளிடமும், குழந்தைகள் பாடசாலை செல்லும் வண்டி சாரதிகளிடமும் கவனமாக இருங்கள்.

இதே மாதிரிதான் வயதுவந்த பெண்பிள்ளைகள் மீதும் கவனம் தேவை.

இன்று ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு நிர்பந்தம் அல்லது தேவை காரணமாக இவ்வாறான தவறுகள் நடக்கும்போது மௌனமாகி விடுகிறார்கள் அல்லது தாங்களாகவே அர்ப்பணிப்பு செய்துவிடுகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் சிறுவயதில் நாம் கவனிக்காமல் விட்ட தவறேதான்.

இப்படியான தவறுகளில் ஈடுபடும் பெண் குழந்தைகள் ஒரு கட்டத்தில் எல்லை மீறி போய்விடுகிறார்கள். ஆசை வார்த்தைகள் நம்பிக்கையூட்டும் விதமாக அமையும் பட்சத்தில் யார், எவரென தெரியாத எவனோ ஒருவனை நம்பி, தன் அந்தரங்கத்தை பகிர்கிறார்கள்…

விளைவு என்ன தெரியுமா?

ஏதேனும் கோபம், சண்டைகள், மறுப்புகள் வரும் சந்தர்ப்பத்தில் அந்த அந்தரங்க விடயங்கள் பொதுவெளிக்கு வருகின்றன.

சமூக வலைத்தளங்கள் ஊடாக பதிவிடுபவருக்கு எந்த நஷ்டமுமில்லை. காரணம், அவரது உருவம் அதில் தெரிவதில்லை. தான்தான் என்ற அடையாளம் அங்கு பதியப்படுவதில்லை.

மாறாக, பெண் பிள்ளைகளே முற்று முழுதான காணொளியாக வலம் வருகிறார்கள்.

இது சமூகத்துக்கு தெரியவரும் சந்தர்ப்பத்தில் அவமானத்தால் கூனிக் குறுகி, வெளியே முகம் காட்ட முடியாமல் வேறு வழியின்றி தற்கொலை மூலம் உயிரை நிறுத்திக்கொள்கிறார்கள்.

நஷ்டம், அவமானம், மன உளைச்சல் இவையெல்லாம் அந்த குடும்பத்துக்கே தவிர பங்கு போடுவார் எவருமில்லை.

ஒருவருக்கு பகிரப்படும் செய்தி உலக எல்லை வரை பகிரப்படும் கொடூரம் சர்வ சாதாரணமாகிவிட்டது.

குழந்தையை வளர்த்து அவர்களின் கனவை, லட்சியத்தை, ஏன் உங்கள் ஆசைகளை கூட அவர்கள் மூலம் நிறைவேற்றிவிட பாடுபடும் உங்களால், கண் இமைக்கும் நேரத்தில் உங்கள் குழந்தைக்கு கொடூரமான அநியாயங்கள் நிகழப்படுவதை உங்களால் ஜீரணித்துக்கொள்ள முடியுமா?

பெண் பிள்ளைகளை பொத்தி பொத்தி வளர்ப்பது கழுகு, ஓநாயிடம் சிக்கி சின்னாபின்னமாகத்தானா? இல்லையே… அவர்கள் எதிர்காலத்தில் இவ்வுலகின் மாதாக்கள். அன்பாலும் சந்த விருத்தியாலும் இவ்வுலகை விரிவுபடுத்த காத்திருக்கும் தேவதைகள். அவர்களுக்கு அநியாயம் நடக்க விட்டுவிடாதீர்கள்.

எனவே அன்பார்ந்த பெற்றோர்களே,

உங்கள் குழந்தைகள் உங்கள் உரிமைகள்… பாதுகாத்துக்கொள்ளுங்கள்!

-பெரியசாமி நிர்மலா,
மாத்தளை.

You must be logged in to post a comment Login