Articles

பெண் சுதந்திரம் வீடுகளில் அரங்கேறட்டும்!

By  | 

“பெண்கள் அமைப்புக்கள் பல உருவாக்கப்பட வேண்டும். உருவாக்கப்படும் அமைப்புக்கள், வெளிப் படைத்தன்மையுடன் தங்கள் செயற்பாடுகள் தொடர்பாக அறிவித்து இயங்குமானால், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சாதுர்யமாகத் தீர்த்துக் கொள்ளமுடியும்” என்கிறார், இலங்கை சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவி நிவேதிதா சிவசோதி.

அவரிடம் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள் பற்றி கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“தற்போதைய காலத்தில் அழுகையும் அச்சமும் சேர்ந்த நிலைதான் காணப்படுகின்றது. இந்த இரண்டுமே இல்லாதுபோகும் போது ஒரு மனிதன் முழுமையான சுதந்திரத்தை அடைகின்றான்.

அதிலும் பெண்களுக்கு இவையிரண்டுமே அதிகம் உள்ளன. இதை மாற்றுவது எப்படி?

பெண்கள் எதிர்நோக்கும் முதலாவது பிரச்சினை பாலியல் கொடுமை.

வேலைத்தளம், வீதி, வீடு எந்த இடத்திலும் பாலியல் கொடுமை நடந்துகொண்டேதான் இருக்கிறது. இது காலகாலமாக பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பாலியல் கொடுமைகள் பேசப்பட்டு வருகின்றன. இதைப்பற்றி நாமும் கால நெடுகிலும் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம். தீர்வுகாண முயல்கிறோம். நிவாரணங்களை சமூகத்திடம் கோருகின்றோம். ஆனால், எதையும் பெற்றுக் கொள்ளமுடியவில்லை.

உரிமைகள் என்பது நாங்களாக எடுத்துக்கொள்கின்ற விடயம்.

இதுபோன்ற பாலியல் கொடுமைகள், வன்முறைகளை ஒழிப்பதற்கான செயற்பாடுகளை நாங்கள் குடும்ப மட்டத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

எந்த மாற்றமும் உடனே நடந்துவிடாது. அதற்கு பல நடவடிக்கைகளை முன்னெடுத்தே தீர்வை பெறமுடியும்.

சமூகத்தில் ஒரு தாய் நினைத்திருந்தால் எப்போதோ பாலியல் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளியிட்டிருக்கலாம். இப்போதும் இதற்கான தீர்வு, ஒரு தாயின் கையிலேயே உள்ளது. ஆகவே, அதற்கான செயற்பாடுகள் வீடுகளிலி ருந்தே ஆரம்பமாகிறது.

ஒரு தாயின், பிள்ளை வளர்ப்புமுறையில்தான் அனைத்தும் தங்கியுள்ளது என்பதே எனது கருத்து.

அடுத்து, நுண்கடன் பிரச்சினை….

நுண்நிதி நிறுவனங்கள் பெண்களை மையப்படுத்தியே ஆரம்பிக்கப்படுகின்றன. இவற்றின் மூலமும் பெண்கள் சில பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

குடும்பத்தை தன் கண்காணிப்பில் வைத்திருக்கும் பெண்ணை எடுத்துக்கொண்டால், போதைப் பழக்கத்துக்கு அடிமையான கணவரோடு வாழ்பவ ளாக இருக்கலாம்… கணவரால் கைவிடப்பட்டு அல்லது கணவரை இழந்து தனித்து வாழ்பவளாக இருக்கலாம்… இத்தகையவர்கள் நுண்கடன் உதவிகளை அதிகமாக நாடுபவர்களாக உள்ளனர். இதிலும் பல பிரச்சினைகள் உருவாகின்றன. அவற்றை தீர்க்க வேண்டியது மிக அவசியம்.

நுண்கடன் முறையை நீக்கலாம், அதற்குப் பதிலாக வங்கிகள் சிறு சிறு கடன் உதவிகளை உருவாக்கலாம். இவை பல பெண்களின் வாழ்வாதாரத்துக்கும் தொழிலுக்கும் பேருதவியாக இருக்கும்.

அடுத்த விடயம், பொருளாதாரத்தில் சுதந்திரம்….

ஒருவருக்கு பொருளாதாரத்தில் சுதந்திரம் இருக்குமாயின், அவர்கள் தங்களை எந்த நிலையில் இருந்தும் காப்பாற்றிக்கொள்ள முடியும். இதற்கு பெண்களை எப்படி முன்நகர்த்துவது என்பது பற்றி பார்ப்போம்.

வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில், முதல்நிலைப் பட்டதாரிகள் பலர் இருக்கின்றனர். இக்காலத்தில் படிப்பும் அறிவும் கட்டாயமானது என்கிற புரிதல் அனைவரிடத்திலும் உண்டு.

அதேபோல தொழிலும் இன்றியமையாதது. பெண்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதும் தொழில் முயற்சிகளுக்கு பெண்களை உள்வாங்கிக்கொள்வதும் நம் தலையாய கடமை. மேலும், நிறைய பெண்கள்சார் அமைப்புக்களும் வல்லமை சூரியா இயக்கம் போன்ற அமைப்புக்களும் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றன. அவற்றோடு பெண்கள் மற்றும் சமூக நோக்குடைய அமைப்புகள் இன்னும் உருவாக வேண்டும்.

பெண்களுக்கான கல்வி, தொழில் குறித்து ஆலோசனைகளை வழங்குவதில் இவ்வமைப்புக்கள் முன்னிற்க வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

அமைப்புக்கள் இயங்கிவந்தாலும் அவற்றின் செயற்றிட்டங்களையும் உதவிகளையும் பெண்கள் நாடிச் செல்வது குறைவாகவே உள்ளது. காரணம், பெண் பற்றிய ஆண்களின் கருத்துக்களும் கனவும் மாறுபட்டு நிற்பதேயாகும்.

உடலளவில் பெண்ணை கீழ்மைப்படுத்திவிட்டால் அவளின் முன்னேற்றத்தை தடுத்துவிடலாம் என எண்ணும் ஒரு சமூகம் உள்ள வரை பெண்களின் முன்னேற்றம் கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.

பெரும்பாலும், பெண் என்பவள் எல்லா விடயங்களையும் கடந்து வருவதற்குத் தயாராக இருக்கின்றாள். ஆனால், அவளது உடல் மற்றும் நடத்தை சார்ந்து ஒரு விமர்சனம் எழுந்தவண்ணம் உள்ளன. அதிலிருந்து மீண்டு வெளியேறுவதற்கே அவள் சமூகத்தில் நிறைய பிரச்சினைகளை சந்திக்கவேண்டியுள்ளது.

இது போன்ற சவால்களை எதிர்கொள்ள பெண்களுக்கு மனத்துணிவும் அடிப்படை அறிவும் தேவை. இந்த அறிவு என்பது கல்வி மட்டுமல்ல, சமூகத்தை பற்றிய தெளிவும்கூட.

ஒரு பெண் எந்தவொரு விடயத்திலும் முன்னோக்கிச் செல்கையில், சமூகம் அவளுக்கு உதவிகளை செய்ய வேண்டும்.

இதில் ஆண்களை மட்டும் நாம் குறை கூறிவிட முடியாது. ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை தடுக்கும் சக்தியாக இன்னொரு பெண்ணே இருக்கிறாள் என்பதே உண்மை.

குறிப்பாக, அலுவலகத்தை எடுத்துக்கொள்வோம்… அங்கே ஒரு பெண்ணுக்கு ஆணொருவரால் நிகழ்த்தப்படும் கொடுமைகளை விட பெண்களால் அனுபவிக்கும் கொடுமைகளே அதிகம்.

எந்தப் பெண்ணும் இன்னொரு பெண்ணை பாராட்டுவதற்குத் தயாராக இல்லை. ஆனால், ஒரு பெண் சக பெண்ணை தட்டிக் கொடுக்கும்போது, அவளுக்காக பரிந்து நிற்கும்போது அந்த இடத்தில் பெண்களுக்கு பலம் மேலோங்கியிருக்கும்.

ஆக, பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க, பெண்களே உதவ முன்வர வேண்டும்.

இவற்றை விடவும் சில சவால்கள் பெண்களுக்கு உண்டு. குறிப்பாக, தனியாக பெண்கள் இரவில் வெளியே நடமாடமுடியாது. ஒரு நிகழ்வுக்கு தனித்து செல்ல முடியாது.

ஆடை சுதந்திரத்திலும் முரண்பாடுகள்… பெண்களின் உடைகளில் ஒழுக்கத்தைத் தேடும் சமுதாயத்தில் ஆண், பெண் சமத்துவத்தை உருவாக்க முடியாது.

எனவே, மாற்றங்களை குடும்பங்களிலேயே முதலில் கொண்டுவர வேண்டும்.

பெண் மற்றும் ஆண் பிள்ளைகள் உள்ள ஒரு வீட்டில் பெண்பிள்ளை மட்டும் வீட்டுவேலைகளை செய்யச் சொல்லி பணிக்கப்படுவதை காண்கிறோம். இதனால் ஆண் பிள்ளை, ‘பெண்களை எவ்வளவு வேண்டுமானாலும் வேலை வாங்கலாம்’ என்ற நிலையில் சிந்திக்கிறான்.

தாய் ஒரு வேலையை இருவருக்கும் ஆண், பெண் என இரு பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுத்தால், அவர்கள் வளரும்போது, ‘இது பெண்களுக்கான வேலை, இது ஆண்களுக்கான வேலை’ என்ற பிரிவினைக்கு உட்படமாட்டார்கள். யாரும் எந்த வேலையையும் செய்யலாம் என்கிற பொது சிந்தனை தோன்றிவிடும்.

இதுபோன்ற பண்புகளை நமது சமூகத்தில் விதைத்தால் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும்.

அடுத்து, தொழில்நுட்பத்துறையை பாருங்கள். இணையத்தள குற்றங்கள் (சைபர் க்ரைம்), தேவையில்லாத அழைப்புக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படங்களை வைத்து மிரட்டுவது, புகைப்படங்களை அனுப்பும்படி கேட்டு தொல்லை கொடுப்பது, தொலைப்பேசி அழைப்புக்களை ஒட்டுக்கேட்பது, இணையத்தளங்களை ஊடுருவுவது (ஹெக் செய்வது) என்பது போன்ற செயற்பாடுகள் நிலவுகின்றன.

இவற்றால் பாதிப்பு ஏற்படுவதாக இருப்பினும் அதிலிருந்து விலகி, பிரச்சினைக்கு தீர்வு காண பல வழிகள் உள்ளன என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

இவ்வாறான இணையத்தள விவகாரங்களிலிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காகவே இயங்கும் சேட் அமைப்பு இணைய தாக்கத்திலிருந்தும், சிக்கலிலிருந்தும் மீள்வதற்கான தீர்வுகளை உடனடியாக பெற்றுக் கொடுக்கின்றது.

இல்லாவிடில், காவல் துறை, இணையத்தள ஊடுருவல் தொடர்பான பிரிவை நாடலாம். அது தவிர, பெண்கள் அமைப்புக்களை அணுகியும் உதவிகளை பெறமுடியும். ஆகவே, எதற்கும் பயம்கொள்ளத் தேவையில்லை. உங்கள் துணிவே உங்களை காப்பாற்றும்.

அழுகையும் அச்சமும் தீர்ந்த நிலைதான் சுதந்திரம். என்றைக்கு அழுகையும் அச்சமும் இல்லாதொழி கின்றதோ அன்றைக்கு நிச்சயமாக, சமத்துவமிக்க ஒரு உலகத்தை காணமுடியும்.

அதற்கான முக்கிய தேவை, பொருளாதாரம். பொருளாதாரத்தை எப்படி பெருக்கிக்கொள்ளப்போகின்றோம்? அதற்கு கல்வி தேவை. அந்தக் கல்வியை தாண்டிய அறிவும், துணிவும் தேவை. இந்த தகைமைகளை ஒரு பெண்ணுக்கு அவளது குடும்பம் கொடுத்தாலே மிகப் பெரிய மாற்றங்கள் சாத்தியப்படும்….” என்கிறார்.

– எம். நியூட்டன்

You must be logged in to post a comment Login