Articles

பெண் விவேகம்

By  | 

ரசன் – அமைச்சர்… இவர்களில் நீங்கள் யாராக இருக்க வேண்டும் என பலரையும் கேட்டால், அனேகமானோர் சிறிதும் சிந்திக்காமல் ‘அரசன்’ என்று கூறுவர். எனினும் பகுத்தறிவாளர்களின் தெரிவு ‘அமைச்சர்’ என்பதாகத்தான் இருக்கும்.

அரசன் என்பவன் நாட்டுக்கு தலைவனாகவும் வேகமுள்ளவனாகவும் இருக்கலாம். எப்பேற்பட்ட எதிரி நாட்டுப் படையையும் ஒரு கணத்தில் வீழ்த்தக்கூடியவனாக இருக்கலாம்.

ஆனால், எந்த வீராதி வீர அரசனும், தனக்கு தக்க தருணத்தில் தகுந்த ஆலோசனை கூறும் மதிநுட்பம் மிக்க அமைச்சர் ஒருவரை அருகில் வைத்திருப்பார்.

அரசன் ‘வேகம்’ என்றால், அமைச்சர் ‘விவேகம்’. வேகமும் விவேகமும் சேர்ந்தால் தான் நாடே முன்னேறும்.

ஒரு நாடு எப்படியோ, அப்படித்தான் குடும்பமும்.

அந்த குடும்பத்தை கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து முன்னேற்றுவதே இல்லற வாழ்க்கையின் வெற்றியாக கருதப்படுகிறது.

கணவன் ‘அரசன்’ என்றால், மனைவி ‘அமைச்சர்’. கணவன் ‘வேகம்’ எனில், மனைவி ‘விவேகம்’.

என்னதான் குடும்பத் தலைவன் அங்குமிங்கும் ஓடி உழைத்து சம்பாதித்தாலும், அதை பக்குவமாய் சேமித்து வரவு செலவுகளை கவனிக்க வேண்டியவர்கள் இல்லத்தரசிகளே.

குடும்பத்தில் பொருளாதார நிலையை சமப்படுத்துவது மட்டுமல்ல, அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகள், முரண்பாடான விடயங்களையும் தீர்த்து வைக்கக்கூடிய பொறுப்பும் தகைமையும் பெண்களுக்கே உண்டு.

தொழிலுக்குச் செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி, வீட்டிலிருந்து குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, பெண்கள் எந்த நிலையிலும் ஆண்களுக்கு ஆலோசனை வழங்கும் அமைச்சர்களாகவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கூறும் நீதிபதிகளாகவும் இருக்க வேண்டும்.

இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டாலே ஆண்களும் பெண்களும் பலதரப்பட்ட சவால்களை சந்தித்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது.

பொருளாதாரம், வீட்டுத் தேவைகள், முக்கிய நிகழ்வுகள், உறவுகள், சமூகம், குடும்ப கௌரவம்… இப்படி பல விடயங்களை உள்ளடக்கிய குடும்பத்தில் சுமுகமான தருணங்களும் சங்கடமான சம்பவங்களும் மாறி மாறி நடக்கலாம்.

பொருளாதாரத்தில் பிரச்சினையென்றால், அதை எப்படி சமநிலைக்கு கொண்டு வருவது என்பதை பற்றி அந்த வீட்டுப் பெண், தன் கணவனுடன் கலந்தாலோசிக்க வேண்டும். கருத்துச் சுதந்திரம் பெண்களுக்கும் உண்டல்லவா!

எனினும், சில பெண்கள் இல்லத்தரசிகளாக இருந்தும், எதிலும் பொறுப்போ அக்கறையோ காட்டாமல், எனக்கென்ன என்றிருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் வாழும் குடும்பத்தில் தான் பிரச்சினைகளும் அதிகமாகவே இருக்கும்.

குடும்பத்தில் ஏற்படும் பொருளாதார பிரச்சினைகளை தொழிலுக்குச் செல்லும் பெண்கள் உழைத்து, சம்பாதித்து சமாளிக்க முயற்சிக்கலாம்.

தொழிலின்றி வீட்டிலிருக்கும் பெண்கள் சேமிப்பில் ஈடுபடலாம். அல்லது வீட்டிலிருந்தபடி சுய தொழிலை ஆரம்பித்து முன்னேறலாம்.

சேமிப்பு எனும்போது வீட்டில் உணவுத் தேவைக்காக பயன்படுத்தும் பொருட்களில் சிறிதளவை அன்றன்று சேர்த்து வைத்தால், உணவுக்கு தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பங்களில், முன்னதாக சேர்த்த பொருள், பசி தீர்க்கக்கூடும்.

இன்றும் வயதான சில பெண்மணிகள் சோறு சமைக்க அளந்தெடுக்கும் அரிசியிலிருந்து ஒரு பிடியை எடுத்து, வேறாக ஒரு பையில் சேமித்து வைக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

என்றேனும், அரிசி வாங்க வழியில்லாத அல்லது பற்றாக்குறை ஏற்படும் நாட்களில், சிறுக சிறுக சேர்த்து வைத்த அந்த அரிசி, தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

இந்த மதிநுட்பத்தை நாம் அனைவரும் பின்பற்றினாலே, வரப் போகிற உணவுப் பஞ்சத்திலிருந்து ஓரளவு விடுபடலாம்.

எந்தப் பொருளை பார்த்தாலும் வாங்க வேண்டும் என்ற ஆசையை பெண்களிடமிருந்து பிரிக்க முடியாதுதான்.

ஆனாலும், ஆடம்பர செலவுகளை தவிர்த்து, அதற்காக செலவழிக்கப் போகும் பணத்தை உண்டியலிலோ வங்கியிலோ சேமித்து வந்தால், என்றேனும் ஒரு நாள் அந்த பணத்தினை பயனுள்ள வகையில் உபயோகிக்க முடியும் என்பதை பெண்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

உண்மைதான். சில குடும்பங்களில் உறவுகளுக்குள் சண்டை, வாக்குவாதங்கள் முற்றிப்போக பெண்களே காரணமாகிவிடுகிறார்கள்.

தகராறை உண்டாக்குவது இலகு என்றாலும், அதை முடிவுக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியமல்ல. இல்லத்தரசிகள் எப்போதும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பவர்களாக இருக்க வேண்டுமே தவிர, மொத்த குழப்பத்துக்கும் காரணகர்த்தாவாக இருக்கக்கூடாது.

சிறு பொறியை ஊதிப் பெரிதாக்கி, கொடுந்தீயை பரப்பும் வேண்டாத வேலை, குடும்பத்தை காக்கும் பொறுப்பை ஏற்றுள்ள பெண்களுக்கு எதற்கு?

ஆண்கள் என்னதான் பொறுமைசாலிகளாக இருந்தாலும், கோபம் என வந்துவிட்டால் சிந்திக்கும் குணத்தை இழந்துவிடுவார்கள்.

அதுவே ஒரு பெண் நினைத்தால், சலசலப்பு தணிந்து, காணாமல் போய்விடும்.

பேச்சால் எதையும் சாதிப்பவர்கள் பெண்கள் தானே!

ஆனால், எத்தனைப் பெண்கள் அவ்வாறு விவேகத்தோடு செயற்படுகிறார்கள்?

பெண்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள். ஆனாலும் ஆண்களை விட திறமையானவர்கள்… புத்தி சாதுர்யம் மிக்கவர்கள் என ஆய்வாளர்கள் கூறுவது பொய்யில்லை.

துக்கம் நிகழும்போது வாய்விட்டு அழுது தீர்ப்பதும் இன்பமான தருணங்களில் சிரித்துக் கும்மாளமடிப்பதும் பெண்களின் இயல்பு. எனினும், திட்டமிட்டு காரியம் சாதிப்பதில் (கடமைகளை நிறைவேற்றுவதில்) வல்லவர்கள்.

குடும்பத்தில் பெற்றோர், மாமனார் – மாமியார், கணவன், மைத்துனன், மைத்துனி, சகோதரர்கள், பிள்ளைகள்… என ஒவ்வொருவர் தேவைகளையும் அறிந்து, கணவனின் மூலமாகவோ அல்லது சுய முயற்சியினாலோ பூர்த்தி செய்யும் ஆற்றலில் குறைவில்லாதவர்கள் பெண்கள்.

உறவுகளின் தேவைகளை நிறைவேற்றும் அதே சமயம் பொருளாதாரத்திலும் சிக்கல் ஏற்படாதவாறு திட்டமிட்டு இரண்டையும் சமாளிக்கும் திறன் பெண்களிடம் இருக்க வேண்டும்.

திருமணத்துக்கு பின்னர் பல பெண்கள் தம் பெற்றோரை பராமரிப்பதிலும், அவர்களுக்கு பண உதவிகள் செய்வதிலும் பல இடையூறுகளை சந்திக்கிறார்கள்.

தொழில் செய்யும் பெண்களும், கிடைக்கும் சம்பளத்தில் சிறு தொகையையேனும் தம் பெற்றோருக்கு வழங்கவே விரும்புகின்றனர்.

சில புகுந்த வீடுகளில் அவர்களது எண்ணம் வரவேற்கப்பட்டாலும், பல குடும்பங்களில் எதிர்ப்புகள் இருக்கிறது.

அதிலும் தொழில் இல்லாத இல்லத்தரசிகளின் நிலைமை சற்று மோசம் தான்.

திருமணத்துக்கு பின்னர் தொழிலுக்கு செல்வதா, இல்லையா என்கிற கேள்வியே, பல பெண்களை கடுமையாக சிந்திக்க வைக்கிறது.

புகுந்த வீட்டில் இருந்துகொண்டு தம் பெற்றோரையும் உடன் பிறந்தோரையும் கவனித்துக்கொள்வதைப் பற்றி எப்படி சிந்திக்க முடியும் என்றும் பல பெண்கள் கேட்கின்றனர்.

எனவே திருமணத்துக்கு முன்னரே பெண் ஆணிடமும், அவர் குடும்பத்தாரிடமும் தன் எதிர்கால நகர்வுகளை பற்றி பேசி முடிவெடுப்பது நல்லது. பேசியபடி திருமணத்துக்குப் பிறகு எந்த உறவுக்கும் பங்கம் நேரிடாமல் செயலாற்றுவதும் பெண்களின் திறமை.

பெண்கள் இல்லாத வீடு பேய்கள் வாழும் காடு என்பார்கள். குடும்பத்தின் நிம்மதி, சந்தோஷம் இரண்டும் பெண்களே. அதை சாதிக்க கொஞ்சம் விவேகம் இருந்தால் போதும்…

– மா. உஷாநந்தினி

You must be logged in to post a comment Login