Women Achievers

பெண் வெறும் மண்ணல்ல!

By  | 

பெண்கள் பூவைப் போன்று மென்மையானவர்கள், பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்வதெல்லாம் ஏதோவொரு வகையில் உண்மைதான் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், அந்தப் பெண்ணுக்குள்ளும் அளவு கடந்த நம்பிக்கையும் கட்டுப்படுத்த முடியாத அளவு துணிவும் இருக்கிறதென்பதை பலரும் ஏற்றுக்கொள்ள முன்வருவதில்லை.

அந்தக் காலத்தில் தான் ஏட்டுக் கல்வி பெண்ணுக்கு தேவையில்லை என்று வீட்டுக்குள் பூட்டிவைத்தனர். ஆனால், இந்தக் காலத்தில் அப்படியல்லவே. எவ்வளவோ சாதனைகளை நாளுக்கு நாள் பெண்கள் செய்துகொண்டுதான் இருக்கின்றனர்.

பெண்கள் இல்லாத ஒரு துறையே தற்போது இல்லை எனலாம். எல்லாவற்றிலும் அவர்களின் பங்களிப்பு முக்கியமாகக் காணப்படுகிறது.

ஆணுக்கு நிகரான கல்வியையும் திறமையையும் பெண் கொண்டிருக்கிறாள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இருப்பினும், பெண் என்பதால் அவள் ஒரு மட்டுப்படுத்தப்பட்டவளாக இருக்கவேண்டும் என்பதே பலரின் கூற்றாக இருக்கிறது.

உண்மையில், பெண்ணுக்கு இருக்கும் மனவலிமை ஆணின்  உடல் வலிமையை விட பன்மடங்கு பெரிது என்றும் கூறலாம். இதிகாசங்களை எடுத்துக்கொண்டால், அதன் திருப்புமுனைக்கு பெண்ணே காரணமாக இருந்திருக்கிறாள்.

பெண்கள் எக்காலத்திலும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் அடிமைகளாகவும் இருக்கவேண்டும், எப்போதும் பயத்துடனேயே வாழவேண்டும் என பலர் விரும்புகின்றனர். சில பெண்களே கூட இக்கருத்தையே கொண்டுள்ளனர். இதனாலேயே பெண்ணானவள் தன்னால் முடிந்த விடயங்களைக் கூட செய்ய முன்வரத் தயங்குகிறாள். தனக்குள் இருக்கும் திறமை, ஆசை என்பவற்றை ஒரு பெரிய பூட்டு போட்டு பூட்டிவிடுகிறாள்.

பெண்ணுக்கு முன்னுரிமை வழங்கவும் பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை. முன்னுரிமை இல்லாவிட்டாலும் சம உரிமை நிச்சயம் வழங்கப்படவேண்டுமல்லவா!

பெண்ணுக்கு சம உரிமை வழங்கப்பட்டுவிட்டது என்று நினைக்கலாம். ஆனால், அது வெறும் பேச்சளவில்தான் பல இடங்களில் இருக்கிறது என்பது உண்மையான விடயமே.

வீட்டு வேலைகளை செய்வதற்கு, பாத்திரங்கள் கழுவுவதற்கு, பிள்ளைகளை பராமரிப்பதற்கு, சமைப்பதற்கு, வீட்டிலிருப்பவர்களுக்கு சேவை செய்வதற்கு என மாத்திரம் பெண் படைக்கப்படவில்லை. பெண்ணானவள் ஓர் அற்புதப் படைப்பு. மதித்துப் போற்றத்தக்கவள். அவளது திறமைகளுக்கும் அவளது தேவைகளுக்கும் சரியான அங்கீகாரம் கிடைக்கவேண்டும். குடும்பத்தையும்  தனது தொழிலையும் ஒரே நேரத்தில் சரிசமமாய் வழிநடத்தக்கூடியவள் பெண்.

பெண்ணின் மென்மைக்கும் அன்புக்கும் அன்னை தெரேசாவை எவ்வாறு உதாரணமாகக் கூறுகிறோமோ, அதேபோல் பெண்ணின் வீரத்துக்கு வேலு நாச்சியார், ஜான்சி ராணி போன்றவர்களை உதாரணமாகக் கூறலாம்.

இவர்கள் மாத்திரமல்ல, ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் வீரமும், தனக்கானதை அடையும் சாமர்த்தியமும் அடங்கியிருக்கிறது. பெண் பலவீனமானவள் என்று நினைப்பவர்கள்தான் பலவீனமானவர்கள்.

தலைகுனிந்து நடந்த பெண் எப்பொழுதும் தலைகுனிந்தே நடக்கவேண்டும் என்று எண்ணுவது தவறாகும். பெண் என்று புத்தகத்தை எடுத்து பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தாலோ அன்றே, அவள் தலைநிமிர்ந்துவிட்டாள்.

பெண் இல்லாத வீடு எவ்வாறு வீடாக இருக்காதோ அதேபோல் பெண்ணின் தலையீடு இல்லாத நாடும் அப்படித்தான்.

பெண் என்பதால் அவளை பின்தள்ளிவிடலாம் என ஒருபோதும் நினைக்கக்கூடாது. அமைதியாக இருக்கும் பெண்ணிடம்தான் தனது இடத்தை அடைய அடம்பிடிக்கும் குணமும் வைராக்கியமும் இருக்கும். பெண்ணை மென்மையானவற்றுடன் ஒப்பிட்டுப் பேசும் வழக்கம் இருந்துவருவதால், அவளுக்குள் இருக்கும் வீரம் மற்றும் போராட்ட குணங்கள் பலருக்கு தெரியாமலே போய்விடுகிறது.

எனவே, பெண்ணை கண்ணாக பார்க்காவிட்டாலும் பரவாயில்லை… வெறும் மண்ணாக பார்க்காமல் இருந்தாலே போதும்.

து.சிந்துஜா

You must be logged in to post a comment Login