Articles

பேராசிரியர் சோ. சந்திரசேகரம் பற்றிய நினைவுப்பகிர்தல்

By  | 

றைந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களின் நினைவுப்பகிர்தல் நிகழ்வொன்று கடந்த 8ஆம் திகதி, கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் உள்ள சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.

கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவரும் சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் தலைமையேற்று, நிகழ்வாம்சங்களை தொகுத்து வழங்கியிருந்தார்.

ஆரம்ப நிகழ்வாக பேராசிரியர் சோ. சந்திரசேகரத்தின் உருவப்படத்துக்கு அவரது மகனான திரு. தயாளன் சந்திரசேகரன் பூமாலை அணிவித்து, தீபமேற்றி, மலர் தூவி வணங்கியதை தொடர்ந்து, சபையினரும் மரியாதை செலுத்தினர். அடுத்து, இந்துக் கல்லூரி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.

அடுத்து நிகழ்வுக்கு வருகை தந்திருந்த பேராசிரியர் வி.டி. தமிழ்மாறன் (முன்னாள் பீடாதிபதி – கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடம்), முனைவர் உ.நவரத்தினம் (ஓய்வுநிலை பணிப்பாளர் – தேசிய கல்வி நிறுவகம்), பேராசிரியர் திரு. குறிஞ்சி வேந்தன் (தமிழ்நாடு, இந்தியா) திரு. மா. கணபதிப்பிள்ளை (ஓய்வுநிலை பிரதி அதிபர் – றோயல் கல்லூரி), தவத்திரு சக்திவேல் அடிகளார் (சமூக செயற்பாட்டாளர்), திரு. எம்.எஸ்.எம். முகூதார் (ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் – மேல் மாகாணம்), பேராசிரியர் இராஜலட்சுமி சேனாதிராஜா (கொழும்பு பல்கலைக்கழகம்), திரு. தெ. மதுசூதனன் (கல்விசார் இதழாசிரியர்) ஆகியோர் பேராசிரியர் பற்றிய தமது நினைவலைகளை கருத்துரைகளாக பகிர்ந்துகொண்டனர்.

பேராசிரியர் சபா ஜெயராசா (தகைசால் ஓய்வுநிலைப் பேராசிரியர் – யாழ்ப்பாண பல்கலைக்கழகம்) மற்றும் மூத்த ஊடகவியலாளரும் முன்னாள் தினக்குரல் நாளிதழ் ஆசிரியருமான திரு. வீ. தனபாலசிங்கம் ஆகியோரும் நிகழ்வில் கருத்துரை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும் இருவரும் நிகழ்வுக்கு சமுகமளிக்கவில்லை.

எனினும், சபா ஜெயராசா அனுப்பிவைத்த தனது கருத்துரை பிரதியானது, முதலாவது கருத்துரையாக தொகுப்பாளரால் சபையினர் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆற்றப்பட்ட கருத்துரைகளில் முத்தாய்ப்பாக இருந்தது, தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த முனைவர் இரா. குறிஞ்சி வேந்தனின் உரை.

“2015இல் நான் இலங்கை வந்துவிட்டு இந்தியாவுக்கு திரும்புகையில், எனக்கு பொன்னுத்துரை ஐயா சில சஞ்சிகைகளை கொடுத்தார்.

விமானப் பயணத்தின்போது நான் அதை வாசித்தேன். அதில் ஒரு கட்டுரை, கற்பவர்களின் சிரமங்களை காட்டுவதாக அமைந்திருந்தது. மிக வித்தியாசமான பார்வையில் அக்கட்டுரையை எழுதியவர் பேராசிரியர் சந்திரசேகரம். அவரைப் பற்றி அப்போது எனக்கு தெரியாது.

மீண்டும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் சிலைதிறப்பு விழாவுக்கு வந்திருந்தபோதே அவரை சந்தித்தேன்.

பண்புமிக்க பேராசிரியர் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார் என்பதையிட்டு நமக்கு பெருமையே.

ஒரு பேராசிரியருக்கு, அவரிடத்தில் கல்வி பயின்றவர்கள் அவர் விதைத்த விதையை காலம் முழுக்க கடத்திச் செல்கிற பண்பை இலங்கையில் மட்டுமே நான் காண்கிறேன். தமிழ்நாட்டிலும் இந்த மரபு இல்லை….

லிபியா நாட்டின் முடிசூடா மன்னனாக வாழ்ந்த கடாபியின் மறுபக்கத்தை தமிழுலகுக்கு அறியத்தந்தவர் சோ. சந்திரசேகரம்… அந்நூலை லிபிய மொழியிலிருந்தே தமிழில் அவர் மொழிபெயர்த்திருக்க வேண்டும்.

அடுத்து, ‘இலங்கை இந்திய வரலாறு’ எனும் நூல்…. இந்திய தமிழர்களுடைய வரலாற்றை யாரும் இதுவரை எழுதியதில்லை. எந்த தமிழரும் செய்யாத சாதனை இது…” என்றார்.

பேராசிரியரின் ‘இலங்கை இந்திய வரலாறு’ எனும் நூலின் கடைசிப் பந்தியை வாசித்துக்காட்டிய சக்திவேல் அடிகளார், இந்திய வம்சாவளித் தமிழர்களின் உரிமைகளை மேற்கோள் காட்டியதோடு,

“கல்விதான் சமூக மாற்றத்துக்கு காரணமாக இருக்க முடியும் என எழுதியவர் பேராசிரியர். நாட்டு மக்கள் கௌரவத்தோடு வாழ, அவர்கள் அரசியல் அறிவு மற்றும் கல்வியறிவை கொண்டிருக்க வேண்டும் என்ற அவரது நோக்கத்தை, கனவை நாம் எவ்வாறு நிறைவேற்றப் போகிறோம்?” என்றும் கேள்வி எழுப்பினார்.

திரு. எம்.எஸ்.எம். முகூதார், 1968இல் தனக்கும் பேராசிரியருக்குமான முதல் சந்திப்பை பகிர்ந்திருந்தார். அப்போது பேராதனை பல்கலைக்கழகத்தில் சோ. சந்திரசேகரம் விரிவுரையாளராகவும் தான் மாணவராகவும் இருந்ததை பற்றி சொன்னார்.

பேராசிரியர் முத்துலிங்கத்தின் மறுசாயல் சோ. சந்திரசேகரம்… என்றும் அந்நாளில் அவரது நெருங்கிய நண்பராக இருந்த பேராசிரியர் உசைமியா குறித்தும் பழைய நினைவுகளை மீட்டிருந்தார்.

பல்கலைக்கழக பீடங்கள் – பல்வேறு துறைகள் – மாணவர்கள் – விரிவுரையாளர்கள் மத்தியில் இருந்த அந்தஸ்து பேதம், குறிப்பாக, ‘லோ டேபிள்’ – ‘ஹை டேபிள்’ பற்றிய பிரிவினைகளின்போது சோ. சந்திரசேகரம் செயலாற்றிய விதத்தை தனது அனுபவத்தினூடாக கொட்டித் தீர்த்தார், பேராசிரியர் வி.ரி. தமிழ்மாறன்.

அடுத்து, ராஜலச்சுமி சேனாதிராஜா தனக்குப் பிடித்த ‘உழைப்பால் கல்வியில் உயர்வோர்’ என்ற பேராசிரியரின் மொழிபெயர்ப்பு நூலை பற்றி கூறுகையில், ஆங்கில நூலை தழுவி எழுதப்பட்ட இத்தமிழ் நூலை வாசிக்கிறபோது ஆங்கில நூல்வாசிப்பின்போது அடைந்த அதே உணர்வு, எந்த வித்தியாசமும் இன்றி ஏற்பட்டிருந்ததாக பூரிப்படைந்தார்.

பொதுவாக கட்டுரைகளில் ‘நான்’ என்பதை தவிர்த்து ‘நாம்’ என எழுதும் பேராசிரியரின் இயல்பை தெ. மதுசூதனன் விபரித்ததோடு, பேராசிரியர் காசிநாதனுக்கும் சோ. சந்திரசேகரத்துக்கும் இடையே இருந்த குரு – சீட உறவை கொஞ்சம் நகைச்சுவையாக வெளிப்படுத்தினார்.

ஒரு சுதந்திர ஊடகராக மாற்றுச் சிந்தனை எழுத்துக்களை தாங்கி நிற்கும் குழாமில் இயங்கிக்கொண்டிருந்த காலத்தில், சந்திரசேகரம் புனைபெயரில் எழுதிக் கொடுத்த இந்திரபாலாவின் ஆய்வு நெறிமுறை குறித்த மூன்று கட்டுரைகளை தான் பிரசுரித்த அனுபவத்தை பற்றி கூறினார்.

அதுமட்டுமன்றி, “கடைசியாக, முஸ்லிம் கல்வி தொடர்பான கட்டுரைகளை பேராசிரியர் எழுதி முடித்துவிட்டுச் சென்றுள்ளார். அதனை நூலாக்கம் செய்வதொன்றே நமது அடுத்த வேலை….” என பேராசிரியரோடு நல்லுறவு பேணிய இலக்கியவாதிகள், கல்வியியலாளர்களின் கடமையை உணர்த்தியிருந்தார்.

பேராசிரியரின் ஒப்பீட்டு கல்விமுறை சார்ந்து பேசிய உ.நவரத்தினம், கொரோனா தொற்று காலத்தில் தனிமைப்படுத்தலில் தான் வாட்டமுற்றிருந்த போது தினமும் சந்திரசேகரமும் அவரது மனைவியும் தனது இல்லத்துக்கு வந்து, மனிதாபிமானத்தோடு உணவு வழங்கிச் சென்றதை நினைவுகூர்ந்தார்.

பேராசிரியரின் மாணவரான மா.கணபதிப்பிள்ளை, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபம் திறந்தபோது அதன் தலைவராக பேராசிரியர் இருந்ததையும், அக்காலகட்டத்தில் வெளியான சங்கரப்பிள்ளை பற்றிய நூலுக்கு அவர் அணிந்துரை எழுதியிருந்ததையும் நினைவுபடுத்தினார்.

இவர்கள் அனைவரும் தமது கருத்துரைகளில் பொதுவாக குறிப்பிட்ட விடயம், மலையகத்துக்கென ஒரு பல்கலைக்கழகம் இல்லாதது குறித்த சந்திரசேகரத்தின் ஆதங்கமும், இலங்கை கல்விநிலையில் தாம் எதிர்பார்க்கும் சில மாற்றங்களையுமே ஆகும்.

இந்நினைவுப்பகிர்தல்களை தொடர்ந்து கொழும்புத் தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர் திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியின் நன்றியுரையோடு நிகழ்வு நிறைபெற்றது.

– மா. உஷாநந்தினி

(படங்கள்: எஸ்.எம். சுரேந்திரன்)

You must be logged in to post a comment Login