Articles

பொதுமக்கள் 4 பேர் விண்வெளிக்கு சுற்றுலா சென்று சாதனை

By  | 

ஸ்பேஸ் எக்ஸ்… அமெரிக்காவை சேர்ந்த எலன் மாஸ்க் என்பவருக்கு சொந்தமான தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம். இந்த நிறுவனம் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு விண்வெளி வீரர்களையும் பொருட்களையும் அனுப்பும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் லட்சியத் திட்டம், பொது மக்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகும்.

தற்போது அத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

 

தொழில்முறை விண்வெளி வீரர்கள் அல்லாத பொது மக்கள் 4 பேரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியுள்ளமை, வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவின் ‘ஷிப்ட் 4 பேமென்ட்ஸ்’ நிறுவனத்தின் தலைவரும் பெரும் கோடீஸ்வரருமான ஜாரிட் ஐசக்மேன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு பயணம் செய்துள்ளனர். இந்த பயணத் திட்டத்துக்கு ‘இன்ஸ்பிரேஷன்-4’ என பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணம் கேப் கெனவெரல் நகரில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்திலிருந்து இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 5.32 மணியளவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ரொக்கெட் சுற்றுலா பயணிகள் 4 பேரை சுமந்து செல்லும் விண்கலத்துடன் விண்ணில் சீறிப் பாய்ந்தது.

ரொக்கெட் விண்ணை அடைந்த 12 நிமிடங்களில் அதன் 2வது அடுக்கு தனியாகப் பிரிந்து, வெற்றிகரமாக புவியின் நீள்வட்டப்பாதைக்குள் விண்கலம் நுழைந்தது. இந்த விண்கலம் அடுத்த 3 நாட்களுக்கு பூமியிலிருந்து 575 கி.மீ., உயரத்தில் சுற்றி வரும் என கூறப்பட்டுள்ளது.

3 நாட்கள் விண்வெளி பயணத்துக்கு பிறகு அட்லாண்டிக் கடலில் பால்கான் ரொக்கெட் வெற்றிகரமாக தரையிறங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login