Articles

மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 50: நடிகையின் கதை

By  | 

“கிட்டத்தட்ட என்னுடைய குழந்தைப் பருவமும் அவருடைய குழந்தைப் பருவமும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கு. அவரும் குடும்பத்துக்காக நிறைய தியாகங்களைச் செய்திருக்கிறார். நானும் அதேபோலத்தான். அம்மாவுடைய அன்புக்காக இரண்டு பேருமே ஏங்கியிருக்கோம். அதனாலோ என்னவோ அவங்களுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அவருடைய ஒவ்வொரு காலகட்டத்திலும் அவருடன் இருந்திருக்கேன்.” என்று நடிகை சச்சு, தோழி ஜெயலலிதாவைப் பற்றி பேசி பெருமிதப்படுகிறார்.

எத்தனையோ திரைப்படங்களில் தோழியாகவும் உறவுக்காரராகவும் அவருடன் இணைந்து நடித்த சச்சு நிஜ வாழ்க்கையிலும் அதே நட்பை தொடர்ந்தார்.

ஜெயாவின் அம்மாவுடன் நடித்த காலத்திலேயே வீட்டில் அமைதியாக படித்துக் கொண்டிருந்த அம்முவை சச்சு பார்க்கும்போதெல்லாம், தன்னை விட இரண்டு வயது குறைந்தவருடன் சினிமாவில் சக தோழி அந்தஸ்தைப் பெற்று நடிக்கும் காலம் வரும் என்றெல்லாம் எண்ணவில்லை.

முதன்முதலில் இருவரும் தோழிகளாக இணைந்த படம் ‘மோட்டார் சுந்தரம்பிள்ளை’. அதன் பிறகு இன்னும் சில படங்களில் ஜெயாவுடன் நடித்தார்.

படப்பிடிப்புத் தளத்துக்கு அம்மாவுடன் ஜெயா போகும்போது அவர்களுடன் மிக நெருக்கமாக பழகி வந்தார்; குடும்பத்தில் ஒருவரைப் போலவும் சச்சு மதிக்கப்பட்டார்.

பிரேசிலிலிருந்து தரமான கோப்பித்தூளை வரவழைத்து சூட்டிங் ஸ்பொட்டில் மற்ற நடிகர்களுக்கு பகிர்ந்து கொடுத்து தானும் குடித்து மகிழ்ந்த ஜெயாவை, சச்சு இன்றும் மறக்கவில்லை.

**

1971இல் வெளியான ‘குமரிக்கோட்டம்’, ‘சுமதி என் சுந்தரி’ முதலிய படங்கள் வௌியாகின.

சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சச்சு, தங்கவேலு, நாகேஷ் முதலிய பலரின் நடிப்பில் வெளியான ‘சுமதி என் சுந்தரி’ஐ சி.வி. ராஜேந்திரன் இயக்கினார்.

படத்தின் டைட்டில் இசைப் பின்னணிக் காட்சிகளில், அறைகுறை ஆடைகளுடன் மொடல் நடிகையரின் வண்ணப்படங்கள் அழகிய வடிவமைப்புகளுடன் நகர்ந்தன. கதாநாயகியின் புறத்தோற்றமும் இப்படித்தான் இருக்கும் என்பது ரசிகர்களின் ஊகம்.

டைட்டில் இசை முடிந்து முதல் காட்சி ஆரம்பமானது. ‘ஆலயமாகும் மங்கை மனது….” என்ற பி.சுசீலாவின் குரலில் ஜெயா பாடுகிறார்.

துளசி மாடத்தை பார்த்தபடி கைகளை குவித்து குடும்பப் பாங்கான தோற்றத்தில் இருந்த ஜெயாவை பார்த்ததும் கதாநாயகி பற்றி ரசிகர்கள் போட்ட கணக்கு பிழைத்துப் போனது.

பாடலுக்காக ஒரெஞ்ச் நிறத்தில் சேலை அணிந்திருந்த ஜெயா,

‘என்னென்னவோ நிறங்களில் சேலைகள் இருக்கின்ற போது ஒரெஞ்ச் நிறத்தை ஏன் தெரிவு செய்தீர்கள்?” என்று இயக்குநரிடம் கேட்டார்.

‘மஞ்சள் நிறம் மங்களகரமானது என்று அர்த்தம். சிவப்பு நிறம் கோபத்தை குறிக்கும். மஞ்சளும் சிவப்பும் சேர்ந்தது தானே ஒரெஞ்ச். பெண் என்பவள் மங்களகரமான சாந்த சொரூபியாக இருப்பாள். அதே சமயம் காளி போல் ஆக்ரோஷம் கொண்டவளாகவும் இருப்பாள். அதனால் தான் உங்கள் குடும்பப் பெண் கேரக்டருக்கு ஒரெஞ்ச் நிற சேலையை சிம்போலிக்காக தேர்ந்தெடுத்தேன்” என்று இயக்குநர் விளக்கம் சொன்னதும் சிரித்துக் கொண்டே ‘ம்… வெரி குட்” என்றார்.

முதல் பாடலில் ஜெயா, சுதர்சன் என்ற வேறொரு நடிகருக்கு மனைவியாக வருகிறாரே… அப்படியானால் சிவாஜி கதாநாயகன் இல்லையா… என முதல் தடவையாக படம் பார்த்தவர்களுக்கு ஒரே குழப்பம். அடுத்த ஓரிரு நிமிடங்களில் ஒரு திருப்பம்.

பாடல் ஒலி(ளி)த்துக் கொண்டிருக்கும் போது

‘தேவனின் சந்நிதி தேவியின் நிம்மதி

ஆலயமாகும் மங்கை மனது

அதை அன்றாடம் கொண்டாடும்” என்று பாடி நடந்து வரும்போது கதவு நிலைப்படியில் கால் தடக்கி தடுமாறுவார். பாடல் நின்றுவிடும்… உடனே Sorry என்று ஜெயா சொல்வார். விட்ட இடத்திலிருந்து மீண்டும் பாடல் ஒலிக்க பழையபடி நடந்து வருவார்.

என்ன நடக்கிறது என்று தெரியாமல் திகைத்த போது பாடல் முடிவில் லோங் ஷூட்டில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதைப் போல் காட்டி ஒளிப்பதிவு செய்திருப்பார்கள்.

நடந்தது ஷூட்டிங்கா… அப்பாடா! ரசிகர்கள் பெருமூச்சு விட்டுக் கொண்டனர்.

ஒரு நடிகையின் கதையையே திரைக்கதையாக்கிய படம் ‘சுமதி என் சுந்தரி’. அதில் நடிகை சுமதியாக ஜெயாவும் மதுவாக சிவாஜியும் சச்சுவாக சச்சுவும் நடித்துள்ளனர்.

பிரபலமான நடிகர்களுடன் நடிக்கும் ஜெயாவிடம் “இந்தப் படத்தில் சுதர்ஷன் என்ற புதிய நடிகருடன் ஒரு பாடலுக்கு நீங்கள் நடிக்க வேண்டும். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே…” என்று கேட்டதற்கு “எந்த நடிகரையும் நான் தாழ்வாக நினைப்பதில்லை. அவருடன் நடிப்பதிலும் தயக்கமில்லை” என்று கூறினார்.

கதைப்படி,

கதாநாயகி, ஒரு நடிகையாகவே இருந்தாலும், சாதாரண பெண்ணுக்குள்ள ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் தான் அவளுக்குள்ளும் இருக்கிறது. காதல், திருமணம், தாய்மை… என அனைத்தையும் உணர்வுபூர்வமாக அனுபவிக்க ஏங்குவாள். எளிமையான குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புவாள்.

ஆயினும் அவள் நடிகை என்பதால் பல இடையூறுகள் உள் நுழையும். இறுதியில் எளிய வாழ்க்கை வாழும் கதாநாயகனுடன் (சிவாஜி) இணைவதைப் போல் கதையை முடித்திருப்பார் இயக்குநர்.

இந்த முடிவு ஜெயாவுக்கு படத்தில் தான் சாத்தியம்; நிஜத்தில் அல்ல.

(தொடரும்…)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

You must be logged in to post a comment Login