Antharangam

மச்சத்தினால் வந்த கஷ்டம்!

By  | 

கேள்வி:
எனக்கு வயது 21. நான் ஒரு பெண். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன். எனது கீழ் உதட்டில் இரண்டு மச்சங்களும் அதற்கு நேர் மேல் உதட்டுக்கு மேல் ஒரு மச்சமும் இருக்கிறது. இது அழகாகத் தெரிந்தாலும் இதனால் நான் பட்ட, படும் அவஸ்தைகள் ஏராளம். நண்பனாகப் பழகிய ஒருவருடன் முச்சக்கரவண்டியில் தனியாக வீடு திரும்ப வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சகஜமாகக் கதைத்துக்கொண்டு வந்த அவர், திடீரென்று ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, சந்தர்ப்ப சூழ்நிலையைப் பயன்படுத்தி என்னை முத்தமிட்டு விட்டார். பிறகு அது குறித்து அவர் மன்னிப்புக் கேட்டாலும் அதற்குக் காரணம் எனது மச்சம்தான் என்று சொன்னார். அத்துடன் அந்த வேலையை விட்டுவிட்டு வேறொரு வேலைக்குச் சென்றேன். அங்கும் இதுபோலவே சில பிரச்சினைகள். இப்போது வீட்டிலேயே இருந்து படிக்கிறேன். வெளியே செல்வதில்லை. ஆனால் இப்படியே இருந்துவிட முடியாது. வீட்டாருக்கு இந்த விடயம் தெரியாது. நான் எப்படி இந்தப் பிரச்சினையை விட்டு வெளியே வருவது?

பதில்:
வேலைக்குச் செல்வதாகச் சொல்கிறீர்கள், படிப்பதாகவும் சொல்கிறீர்கள்… சரி… அது எதுவாகவும் இருக்கட்டும்.

அழகாக இருப்பது உங்கள் தவறல்ல. அந்த அழகை, தான் அனுபவிக்க வேண்டும் என்று ஆண்கள் விரும்புவதுதான் தவறு. அதற்காக, நீங்கள் உங்கள் பணியையோ, கல்வியையோ கைவிட்டுவிடத் தேவையில்லை.

இப்போது ஊரெங்கும் கொவிட் பிரச்சினை தலைதூக்கியிருக்கிறது. எனவே, இந்நேரத்தில் நீங்கள் எங்கேயும் வெளியே போகாமல் இருப்பது நல்லதே!

நீங்கள் படிக்க விரும்பினாலும் வேலை செய்ய விரும்பினாலும் உங்கள் குடும்பத்தினரின் துணையைப் பெற்றுக்கொள்ளலாமே…?

உதாரணமாக, நீங்கள் வகுப்புக்கோ, வேலைக்கோ செல்லும்போதும் வீடு திரும்பும்போதும் உங்கள் தந்தையையோ, தாயையோ, சகோதரனையோ துணையாக அழைத்துச் செல்லலாமே? இப்படிச் செய்தால், யார்தான் அருகே வந்துவிட முடியும்?

மேலும் உங்கள் முழுமையான கடிதத்தைப் பார்க்கும்போது நீங்கள் உங்கள் அழகு குறித்து அதிகம் பெருமைப்படுபவர் என்பதையும் அந்த அழகை மற்றவர்கள் ஆராதிக்க வேண்டும் என்று விரும்புபவர் என்பதையும் மற்றவர்களது உணர்ச்சிகளைத் தூண்டி அதன்மூலம் குளிர்காய விரும்புபவர் என்பதும் அப்பட்டமாகத் தெரிகிறது.

உதாரணத்துக்கு, உங்கள் நண்பரும் நீங்களும் முச்சக்கரவண்டியில் தனியாக வரும்போது, சகஜமாகக் கதைத்துக்கொண்டு வந்ததாகக் கூறியிருக்கிறீர்கள். ஆனால், ஏதோவொரு தருணத்தில், நீங்கள் ‘தாராள’ மனப்பான்மை உடையவர் என்பதை அறிந்தோ, அறியாமலோ நீங்கள் அவர் மனதில் ஏற்படுத்தியிருக்கலாம். அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுதான் அவர் உங்களை முத்தமிட்டிருப்பார்.

இந்தக் கருத்தை நீங்கள் ஒத்துக்கொள்ள மறுக்கலாம். ஆனாலும் சற்று நிதானமாக யோசித்தால் கசப்பான இந்த உண்மையை நீங்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வீர்கள்.

தனது அழகை மற்றவர்கள் இரசிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் இதுபோன்ற சிக்கல்களில் எளிதில் மாட்டிக்கொள்வார்கள் என்பதையே உங்கள் கடிதம் நிரூபிக்கிறது.

அப்படியே இல்லாவிட்டாலும் கூட, உங்கள் கடிதம் 100 சதவீதம் உண்மையானது என்பதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. என்றாலும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் வேறு பலரும் இருக்கலாம் என்ற எண்ணத்திலேயே இதற்கான பதில் தரப்பட்டிருக்கிறது.

You must be logged in to post a comment Login