Articles

மனதில் உறுதி வேண்டும்

By  | 

‘சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண் ஆபிரிக்காவின் தென்பகுதியில் ஒரு மலைச்சரிவில் நடந்துசென்றாள். மலைக்கு அடிவாரத்தில் கடல்! கடற்கரையை நோக்கி அவள் நடந்து சென்றிருக்கவேண்டும். கடலோரமாக செத்துக்கிடந்த பிராணி அவள் பார்வையில் பட்டிருக்கவேண்டும். அதை சாப்பிடு­வதற்காக மலைச்சரிவில் இருந்து இறங்கி­யிருக்க­லாம். அல்லது வெறுமனே அங்கே சிறிதுநேரம் அமர்ந்து இளைப்பாறி கடலை வெறித்துப் பார்த்துக்­கொண்டிருந்திருக்கலாம். அவள் மனதில் என்ன ஓடியதோ யாருக்குத் தெரியும்?”

(கி.மு., கி.பி.: பக்கம் 15)

இதையேன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால், உலகில் முதல் தோன்றியது ஆண் அல்ல பெண் என்பதை அந்தக் காலடி சுவடை வைத்து தொல்பொருளாய்வாளர்கள் கண்டு­பிடித்தார்கள். அவள் பிறப்பால் சர்வ வல்லமை பெற்றிருந்தாள் என்பதையும் அந்தக் காலடி சுவடை வைத்து தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டு­பிடித்தனர். அந்த காலடிச்சுவட்டில் ஒரு விசேட ஜீன் இருந்தது. மீட்டோகாண்ட்ரியல்டி என்.ஏ என்கின்ற ஜீன் அது. இந்த உலகத்தில் தோன்றிய அத்தனை மனிதர்களையும் உருவாக்கிய ஆதாரமாக அந்தப் பெண் இருந்தாள் என கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி எல்லாம் இருக்க முடியுமா என்கிறவர்களுக்கு  அஃபிட்ஸ் என்கின்ற ஈ வகையை உதாரண­மாகச் சொல்ல­முடியும். தாய் – மகள், தாய் -மகள் என அதனுடைய இன விருத்தி அப்படித்­தான் நிகழ்கிறது.

அடிப்படையில் இந்த உலகின் நிலைத்­த­லுக்கு ஆதாரமான பெண்கள் எப்படி அடிமையாக்கப்பட்டார்கள் என்ப­தைப் பற்றி எவ்வளவோ பேசியாயிற்று. இன்னும் பேசிக்கொண்டே இருக்கி­றோம் என்றால் என்ன அர்த்தம்?

அவள் அவளுடைய சாதாரண வாழ்வை வாழவே போராடிக்கொண்டி­ருக்கின்றாள் என்பதுதான். பெண்களுக்கான அநீதிகள் வரலாறு நெடுகிலும் நிறைந்­திருக்கி­றது. அது எமது சமூகத்தின் மனநிலையோடு ஒன்றித்துப் போயிருக்கிறது. அதற்காக பெண்கள் இன்னும் பின்னோக்கிப் போகவேண்டுமா என்றால், ‘இல்லை’ என்பேன்.

பெண்கள் எப்படியெல்லாம் நிராகரிக்கப்படுகிறார்­களோ, அங்கெல்லாம் நிராகரிக்க முடியாத சக்தியாக அவர்கள் உருவெடுக்கவேண்டும். சக பெண்களையும் சேர்த்து வளர்ச்சியடைகிற மனநிலையே தேவை. என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பெண்ணும் தனித்துவமானவள், தன்னிகர் அற்றவள். அவள் தேவையெல்லாம் அடிமைப்படுத்துகிற அவர்களை வன்முறைக்கு உட்படுத்துகின்றவற்றை அடையாளம் கண்டு அதை அழிப்பதே.

தாயாய், மனைவியாய், மகளாய், சகோதரியாய், தோழியாய், ஒரு நிர்வாகியாய் அவளால் மாபெரும் அற்புதங்களை நிகழ்த்தமுடியும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தாங்கள் யார் என்பதை உணர வேண்டும். கவிதாயினி மாயா ஏஞ்சலோ சொல்வதைப் போல…

“If you’re always

Trying to be normal

You will never know

How amazing you can be”

ஒவ்வொரு பெண்ணையும் மாயா சொல்வதைப் போல ‘How amazing you canbe’ என்றே நான் பார்க்கின்றேன்.

வெறும் எண்கள் சார்ந்த அழகுக் குறிப்புக்குள் அடங்க மறுக்கிற, தன்னை நேசிக்கிற, கொண்டாடுகிற பெண்களையே நான் மிகவும் நேசிக்கிறேன். சதா சர்வகாலமும் யாரையேனும் சார்ந்திருப்பதை விட்டு பெண்கள் தனித்து பயணப் படவேண்டும், கனவு காணவேண்டும், அதை நோக்கி முன் செல்லவேண்டும். வழியில் எத்தனை வீழ்ச்சிகள், தோல்விகள், ஏமாற்றங்களைப் பார்த்தாலும் மனம் தளராது முன்னோக்கிச் செல்கிற பெண்கள், சக பெண்களையும் சேர்த்துக்கொண்டு பயணப்படுகிற பெண்களால்தான் இந்த சமூகத்தில் பெரிய மாறுதல்கள் நடக்கும்.

தன் மீதும், தனது சமூகத்தின் மீதும், சக பெண்ணின் மீதும் அக்கறை கொண்ட பெண்களால் ஒரு சமூகம் நிறைகிறபோதே அவரவர்க்கு உள்ள வாழ்வை சிறப்பாக வாழக்கூடிய சூழல் உருவாகும் என நினைக்கின்றேன்.

எங்கள் பெண்களுக்கு தேவையாய் இருப்பது தெளிந்த பார்வையும்; மனதில் உறுதியும்தான்.

-நர்மி

 

You must be logged in to post a comment Login