Articles

மனம் கல்லாய்ப்போன மனிதர்கள்!

By  | 

‘விட்டுப் பிரிந்தவர்’களின் மீதான உணர்ச்சி வேகத்தினால், ‘வாழ்கின்ற’ உறவுகளையும் தம்மையும் இழந்துவிட யாரும் தயாராக இல்லை.

மீண்டுமொரு முடக்க நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், இந்நாட்களில் மிக அவதானமாகவும் தைரியமாகவும் நடைபோடுவதில் பலவித சவால்களை சந்தித்து வருகின்றோம்.

கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழப்பவர்களில் 90 வீதத்துக்கும் மேலானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்று சொல்லப்படுகிறது.

இதனாலேயே நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்னும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

‘சரி, தடுப்பூசி செலுத்திக்கொண்டாயிற்று… இனி ஏதும் நம் உடலுக்கு நேராது’ என அலட்சியமாக இருக்கலாமா?

கூடாது….

தடுப்பூசி என்பது

நோயின் தாக்கத்தை குறைப்பதற்கான ஒரு சிறு வழியே தவிர, நோய்க்கான நிரந்தர தீர்வல்ல.

ஆகவே, தடுப்பூசியை மலை போல் நம்பி, அதை செலுத்திக்கொண்ட மக்கள், தம் உடல் நலனில் அதீத நம்பிக்கை வைத்து, எங்கேயும் செல்வதோ, எவரிடத்திலும் நெருங்குவதோ அத்தனை பாதுகாப்பானது அல்ல.

இந்த லொக்டவுன் நாட்களில் பொது மக்கள், வீட்டிலிருந்து பொது போக்குவரத்தினை பயன்படுத்தி, பிரதேசம் விட்டு பிரதேசம் செல்வதும், அநாவசிய தூர பயணங்களை மேற்கொள்வதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், வீட்டை அண்மித்த இடங்களில் மக்களின் நடமாட்டத்தை தடுக்க இயலாத சூழ்நிலையே நிலவுகிறது.

பலர் வீட்டோடு தங்கியிராமல், வீட்டை அண்டியிருக்கும் கடைகளுக்கு செல்வது, அடுத்த தெருவில் உள்ள சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள் வீடுகளுக்கு நடந்தே போய்விட்டு திரும்புவது என்கிற வகையில் முற்று முழுதான பாதுகாப்பு நடைமுறை பின்பற்றப்படாதிருப்பதையும் காண முடிகிறது.

மக்கள் நோயின் தீவிரத்தை புரிந்துகொள்ளாமல் இல்லை.

எனினும், ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் அத்தியாவசிய தேவைகளை பெற்றுக்கொள்வதற்காகவும் தொழிலுக்காகவும் வெளியே செல்லவேண்டிய சந்தர்ப்பங்களை எப்படி தவிர்ப்பது?

நோய் நிலைமை குறித்து முன்பை விட மிகத் தெளிவான புரிதல் மக்களிடத்தில் தற்போது இருக்கிறது.

அதனாலேயே பல பகுதிகளில், ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே மக்கள் அதிகமாக கூடுவதை தாமாகவே தவிர்த்துக்கொண்டிருந்தனர்.

அதற்கு செய்தி ஊடக இணைய பக்கங்களிலும் சமூக ஊடகங்களிலும் பதிவான சில காணொளிப் பதிவுகளும் புகைப்படங்களுமே சான்றுகள்.

மக்களின் இந்த புரிதலும் சுய கட்டுப்பாடும் ஒரு கட்டத்துக்கு மேல் எல்லை கடந்து நிற்பதையும் அவதானிக்கிறோம்.

இதனால் வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள மிக கடுமையாக சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்கின்றனர்.

வீட்டுக்குள் ஒருவருக்கு இலேசான காய்ச்சல், தடிமல் என்றாலே தாங்களாக ஒதுங்கி, தமக்கு வேண்டியதை தனித்து செய்துகொள்ள முற்பட்டுவிட்டனர்.

வீட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானால், பி.எச்.ஐ. என்கிற சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனையை பெற்று, குறித்த தொற்றாளரை தனிமையில் இருத்தி, பாதுகாக்கின்றனர். தமக்குரிய பாதுகாப்பிலும் ஆரோக்கியத்திலும் கூட கவனம் செலுத்துகின்றனர்.

இப்போது மருத்துவமனைகளில் தொற்றாளர்களுக்கு இடப்பற்றாக்குறை நிலவுகின்றது. சில வீடுகளிலும் தொற்றாளர்களை தனித்து வைக்க இட வசதி இல்லாமல் இருக்கின்றது.

எவ்வாறாயினும், தொற்றாளராக உள்ள தம் உறவுகளை இடையூறின்றி காப்பதில் பலர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதையும் தாண்டி, அவர்களை அக்கறையோடு பராமரிப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

அவ்வாறானோரது மனங்கள் விசாலப்பட்டிருக்கும் விதத்தை உறவுகள் புரிந்துகொள்ள உருவான சந்தர்ப்பம் என்றே இந்நோய்க் காலத்தை கருதினாலும், இன்னொரு புறம், இந்த நோய் பயம் எத்தனையோ பேரின் மனங்களை அல்லவா கல்லாக்கிவிட்டிருக்கிறது!

வீதியில் ஒருவர் மயங்கிக் கிடந்தாலோ, உடல் நிலை பாதிப்பினால் கண்ணெதிரிலேயே துடிதுடித்து துன்பப்பட்டாலோ அருகில் இருப்பவர்கள் விரைந்து சென்று, பாதிப்பால் அவதிப்படுபவருக்கு உதவ முயற்சிப்பதில்லை.

பக்கத்து வீட்டில் யாரேனும் இறந்து கிடந்தால் கூட கிட்ட நெருங்கி பார்க்கவே பயப்படுகின்றனர்.

‘யாருக்கு என்ன நோய் இருக்குமோ’ என தயக்கம் கொள்கின்றனர்.

தாய்க்கே தொற்று ஏற்பட்டாலும் கூட எங்கோ தூரத்தில் வசிக்கும் பிள்ளைகளால் வந்து பார்க்கவும், அரவணைக்கவும் முடியாமல் போய்விட்டது.

சில பிள்ளைகள் தொற்று ஏற்பட்டிருப்பது தாய்க்கு அல்லது தந்தைக்கு என தெரிந்தாலும்,  உடனிருந்து கவனிக்க அஞ்சுகின்றனர்.

இன்னும் சிலர், மிக இக்கட்டான நிலையிலும் பெற்றோரை விட்டுவிட்டு எங்கேனும் தள்ளிப்போய் தங்கியிருந்து, தன் வரை தப்பித்துக்கொள்ளவே நினைக்கின்றனர்.

குடும்பத்தில் நான்கு பேர் இருந்து, நால்வருக்குமே தொற்று ஏற்பட்டுள்ளது என்றால்,

நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேரும்போது, மருத்துவமனைகளிலேயே இடப்பற்றாக்குறை நிலவும் இதுபோன்ற சூழ்நிலையில், சிகிச்சை பெறும் இடத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள சந்தர்ப்பங்கள் வாய்ப்பதில்லை.

அந்த உறவுகளில் யாரேனும் ஒருவர் சிகிச்சையின்போது உயிரிழக்க நேர்ந்தால், அந்த மரணச் செய்தி, அந்த உறவுகளுக்கு வெறும் தகவலாய் மட்டுமே போய்ச் சேர்கையில், அது எண்ணிலடங்காத, சொல்லில் அடங்காத வேதனையே!

ஒரே மருத்துவமனையில் இருந்தும், தம் உயிரான உறவை கடைசியாக ஒரு தடவை பார்க்கும் கொடுப்பினை கூட அந்த இரத்த பந்தங்களுக்கு இல்லாமல் போகிறது என்றால், அது போன்றதொரு கொடுமை, துயரம் வேறு உண்டா?

இதுபோன்ற துயரங்களும் பயங்களும் ஆபத்துக்களும் அச்சுறுத்தல்களும் தொடர்ந்து துரத்துகையில், வாழ்ந்து தீர்த்துவிடும் கட்டாயத்தில் ஓடும் மனிதர்களின் மனங்கள் மாறிவிட்டன.

போனவர்கள் போக, இருப்பவர்களை காப்பாற்றிக்கொள்ளவே துடிக்கின்றனர், மனிதர்கள்.

ஒருசில பெற்றோரையும் பிள்ளைகளையும் தவிர, ‘விட்டுப் பிரிந்தவர்’களின் மீதான உணர்ச்சி வேகத்தினால், ‘வாழ்கின்ற’ உறவுகளையும் தம்மையும் இழந்துவிட யாரும் தயாராக இல்லை.

இது நாம் முன்பு எப்போதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டாத வாழ்க்கையாகிவிட்டது.

இந்த கொடூர காலத்தை நாம் எப்போது, எப்படி கடக்கப் போகிறோம்?

நிச்சயமாக இன்னும் சொற்ப காலத்துக்குப் பின்னர் கடந்திருப்போம்….

அப்போது நம்மை விட்டு மறைந்த, நாம் விட்டுச் சென்ற, நாமாக தள்ளி நிறுத்திய உறவுகளை எண்ணிப் பார்ப்போம்… கணத்த மனதோடு!

மா. உஷாநந்தினி.

You must be logged in to post a comment Login