Articles

மனம் செம்மையானால்…

By  | 

நாம் ஒவ்வொருவரும் இப்பிரபஞ்சத்தின் அம்சங்கள் என்பதையும் தாண்டி, நம் ஆழ்மனம் எப்போதும் பிரபஞ்சத்துடன் பிணைக்கப்பட்டிருக்கின்றது. எதை சிந்திக்கின்றோமோ, எதை நோக்கி எமது தேடல் அமைகிறதோ, நிச்சயமாக அதுவே நாமாகின்றோம். எம் ஆழ்மனதில் உலவித்திரியும் அத்தனையையும் நாம் அறிவதில்லை. ஆக, வெளிமனம் தோற்றுவிக்கும் மாயப்பீடைகளால் நாம் பீடிக்கப்பட்டிருக்கின்றோம். நாம் நாளாந்த வாழ்வியலில் சந்திக்கும் அம்சங்களை பற்றிய விம்பம் ஒன்றை எமக்குள் பதியச்செய்யும்போது நாமும் அதே வெளிப்பாடுகளை வெளிப்படுத்துகின்றோம்.

எப்போதும் வறுமை, துன்பம், கவலை, கண்ணீர்,அவலம் போன்றவற்றை பற்றியே மீண்டும் மீண்டும் சிந்தித்துக்கொண்டும், குறைகூறிக்கொண்டும் இருப்போமேயானால், எம் வாழ்வில் அதுவே நிரந்தரமாகிறது. எம்மாலும் இயலும், நிச்சயமாக மகிழ்ச்சி சேரும் என்று எம் மனதை நாமே நம்பவைத்து, அதனை உணரும் போது நிச்சயமாக ஏதோ ஒருவகையில் செல்வம், மகிழ்ச்சி, திருப்தி எம்மை வந்து சேரும். இவ்வளவு ஏன் எம் உடலியல் சார் பிரச்சினைகள், சிக்கல்களை கூட எம் மனதினால் சீர் செய்ய இயலும். எதற்கு முன் நல்லவற்றையும் நேரான மகிழ்ச்சிகரமான கருத்துக்களையும் எம் ஆழ்மனதில் நாம் பதியச் செய்தல் வேண்டும்.

துயரமோ மனச்சோர்வோ திருப்தியற்ற நிலையோ எம்மை நெருங்கும்போது எம் மனதுக்குள் சாந்தமான நிலையை பொருத்திக்கொண்டு ‘எம்மால் இயலும்… எம் இயலுமைகளை தாண்டி வேறொன்றும் பெரிதில்லை…’ என்று மனதுக்குள் கூறிக்கொள்ளுங்கள்.

எதிர்மறையான அம்சங்கள் எம்மை பீடிக்கின்றது என்றால், அதனை எம்முள் அனுமதித்தவர்களும் நாமேதான். புற உலகம் என்னவும் செய்யட்டும், எப்படியும் அணுகட்டும். ஆனால், தங்களது அக உலகம் ஆழமானது, மிகவும் பலம் மிக்கது, யாராலும் தங்கள் அனுமதியின்றி எதிர்மறையாக செயற்பட அறியாதது. ஆக, தங்களது அக மனதின் ஆரோக்கியம் புறஉலக புலம்பல்களிலிருந்து தங்களை மீட்டெடுக்கக் கூடியது.

ஒரு தனிமனிதன் தன் வாழ்வியலில் அனுபவபூர்வமாக உணரும் அம்சங்களே அவரவர் ஆழ்மனதுக்கு நம்பக ஆதாரம். ஆக, தங்களது ஆழ்மனதுக்கும் வெளிமனதுக்கும் இணக்கமான சூழலை தங்களுக்குள் பொருத்திக்கொள்ள முயன்று உணர்தல் சிறப்பு. ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்துகொண்டிருக்கும் ஆழ்மன ஆற்றல்களை வெளிக்கொண்டுவர  முயலுங்கள். பிரச்சினைகள் நெருங்கும்போது தான் நம்மையும் மீறிய பிரபஞ்ச சக்திகளை பிரார்த்தனை செய்ய முயல்கின்றோம். ஆனால், பிறப்பிலிருந்தே எம்மோடு பயணிக்கும் எம் அக உள்ள சக்திகளை பற்றி அறிய மறுக்கின்றோம். பிரார்த்தனைகள் நிச்சயமாக சக்தி மிக்கவை,ஒருவன் பிரபந்த சக்திகளை ஆழமாக பிரார்த்திக்கும்போது அவனை அறியாமலே அவன் அவனது ஆழ்மனதை நம்பிக்கை சூழலுக்குள் பொருத்திக்கொள்கின்றான். அச்சூழல் அவனுக்கு வேண்டியதை அவனிடத்தில் சேர்க்கும்.

நடைமுறையில் நம்மால் சுலபமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நம்பிக்கை விதிகளை முயற்சிப்போம். ‘என்னால் இது இயலும். இதுவே எனக்கானது, நான் நம்பிக்கையுடன் பயணிக்கிறேன், நான் நல்லதையே நினைக்கின்றேன், நான் தெளிவாக இருக்கிறேன்’ என்று எம் ஆழ்மனதுடன் நட்பு ரீதியான ஆரோக்கியமான கருத்துக்களை பகிரும்போது நமக்குள் பிரசவிக்கும் உத்வேகம் நம்மை வழிநடத்தும்.

நீங்கள் நேரான கருத்துக்களையும் சிந்தனைகளையும் பிரார்த்தனைகளையும் வளர்த்துக்கொண்ட போதிலும், உங்களுக்கான விளைவு திருப்திகரமானதாகவோ அல்லது முற்றாக எதிர்மறையாகவோ இட்டும்போது, அங்கு நீங்கள் உங்களுக்கான நல்லதை முழுமையாக நம்பவில்லை என்றே பொருள்.

எதன் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்களோ, அதனை பொறுத்தே விளைவுகள் அமையும் என்பதை விட, தங்களது ஆழ்மனம் மற்றும் வெளிமனம் இரண்டும் எப்போது சிந்தனைகள், காட்சிகளின்படி ஒருமித்து செயலாற்றுகிறதோ, அப்போதுதான் எதிர்பார்த்ததை பெறுவீர்கள்.

‘என்னால் இயலும்’ என்று வெளிமனதில் வார்த்தைகளால் கூறிக்கொண்டு மனதின் அடி ஆழத்தில் ‘என்னால் இது இயலுமா’ என்ற சந்தேகக்குறி எழுமேயானால், எவ்வாறு எதிர்பார்த்த நிறைவை அடைய இயலும். நம்பிக்கை விதியே வாழ்க்கைக்கான வழி என்று உணரவேண்டும்.

ஆரோக்கியம், மகிழ்ச்சி, பாதுகாப்பான சூழல், உள நிம்மதியையே உலகில் உள்ள அத்தனை பேரும் விரும்புகின்றோம். ஆனால், அவற்றை எல்லாம் நம்மில் எத்தனை பேர் அடைகிறோம். எம்முடைய மனதை வெகு ஆரோக்கியமாகவும் துடிப்புள்ளதாகவும் வகுத்துக்கொள்ளும்போது தான் இவற்றை அடைய இயலும்.

உங்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வு உங்களிடமே தான் இருக்கின்றது. உங்களது எண்ணங்களின் விளைவே உங்கள் சூழ்நிலைகளாக இருக்கின்றன. எதிர்மறையாக பேசுவதும், எதிர்மறையாக சிந்திப்பதும் எதிர்மறையான விளைவுகளை தேடித்தரும்.

ஆக, நேரிய மனப்பாங்குடன் நிகழ்த்துகைகளை அணுகுங்கள். தங்களை பாதிக்கும்  எதிர்மறையான அம்சங்களுக்கு உங்கள் சிந்தையினால் உயிர் கொடுக்காதீர்கள். இவ்வளவு கடினமாக முயற்சிப்பது வீண் என்றோ, இதனால் நன்மை பயக்க பேசுவதில்லை என்றோ, நாளுக்கு நாள் அனைத்தும் பின்தங்குகின்றன என்றோ, புறத்தூண்டுதல்களை உங்களுக்கு நீங்களே கொடுக்காதீர்கள். இவ்வகையான எதிர்மறை தூண்டுதல்களை ஏற்றுக்கொள்ளும்போது இவற்றை உண்மையாக்குவதில் நீங்களும் பங்களிக்கின்றீர்கள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

இவைதவிர ஒரு நிகழ்தல் நிகழும்போது வெறும் 10% மட்டுமே அந்நிகழ்தலுக்கான காரணத்தில் தங்கியுள்ளது. அதேநேரம் மீதி 90%, அக்காரணம் தொடர்பான எமது துலங்கலில் தான் தங்கியுள்ளது. ஆக, ஆக்கபூர்வமான தூண்டுதலுக்கு வாய்ப்பளியுங்கள்.

ஒவ்வொரு நற்பண்பும் போற்றுதலுக்குரியது, அன்பு போற்றுதலுக்குரியது என்று உங்களுக்குள் கூறிக்கொள்ளுங்கள். நல்லவற்றை சிந்திக்கும் நொடிகளில் நல்லவை பெருகுவதை போலவே தீயவற்றை சிந்தித்தால் தீயவையே பெருகும். உங்களை நீங்களே உருவாக்குகிறீர்கள் என்பது நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை.

பிரச்சினைகளுக்கான தீர்வினை எட்டும் முன்பே நற்தீர்வை ஏற்றுக்கொள்ளுங்கள். அத்தோடு பெரிதும் உங்களது சிந்தனைகள் உங்களுக்கு மட்டுமல்ல, உங்களை சுற்றி இருப்போருக்கும் நன்மை பயப்பவையாக இருக்குமாறு நல்லவற்றை மனதார நம்பிக்கொள்ளுதல் நன்று. வாழ்வின் அனைத்து பக்கங்களும் அனுபவங்களால் நிரம்பி வழிபவை.

வாழ்தல் இனிதென்று உணர்ந்து உன்னத வாழ்வை உலகுக்கு காண்பிக்க முயல்வோம்!

டினோஜா நவரட்ணராஜா,
காரைநகர்.

 

You must be logged in to post a comment Login