Stories

மனைவியின் அன்பு…

By  | 

நிசப்த அதிகாலை வேளை. மல்லிகை மொட்டுக்கள் விரிந்து ஊரே கமகமவென மணம் பரப்பிக்கொண்டிருந்த வேளை அந்த குடிசைக்குள் மட்டும் ஏதோ விரும்பத்தகாத வாசம் வீசிக்கொண்டிருந்தது.

தூங்கிக் கொண்டிருக்கும் ஜொஹராவின் நாசித் துவாரரங்களுக்கூடாக அவளது உடல் முழுவதும் பரவி வயிற்றைக் குமட்டிக் கொண்டு வருகையில் தூக்கம் விழித்தவளாக தன் கணவனின் நிலையை புரிந்துகொண்டு குருட்டு வெளிச்சத்தில் டாச் லைட்டை சுவரில் செலுத்தி கடிகாரத்தின் முட்களை நோக்கினாள். நேரம் 4 மணி 05 நிமிடமென்பதை சொல்லி டிக்….டிக்..என்ற ஓசை கொண்டு ஜொஹராவை பார்த்து நகைத்தன கடிகார முட்கள்.

இரு அறைகள் கொண்ட அந்தக் குடிசைக்குள் நீரிழிவு நோயால் வாடிப்போன அவளது மூட்டுச் சிற்கள் தேய்ந்த கால்களை சிரமப்பட்டு மடக்கி தன் பக்கத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை பிடித்து மிகக் கஷ்டப்பட்டு எழுந்து நின்றாள். துலையில் பல யோசனைகள் ஊசலாடிக் கொண்டிருக்க ஒவ்வொரு விடியலும் அவளுக்கு போர்க்களமாகவே விடிந்தது.

ஊர் தூக்கம் விழிக்க முன் தன் கணவனுக்குரிய சகல பணிவிடைகளையும் செய்தாக வேண்டிய கட்டாயம் அவளுக்கு. தன் கணவன் அறைக்குள் காலடி எடுத்து வைக்கிறாள். அந்த அறையை வியாபித்திருந்த இருட்டை ஓர் குருட்டு விளக்கு துரத்தியடிக்க மிகவும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த மங்கலான வெளிச்சத்தில் ஓர் தூர்ந்துபோன மரக்கட்டில். அதிலொரு காய்ந்துபோன, பல இடங்களில் ஓட்டைப்போட்டு தைக்கப்பட்ட மெத்தை. அதிலொரு மெலிந்து கறுத்த எலும்புகள் ஒன்றோடொன்று ஒட்டி விலா என்புகள் திருத்திக் கொண்டிருக்கும் உருவம். சுருட்டிக் கொண்டு தவழ்ந்து கொண்டிருக்கிறது.

அவ்வுருவம் தன் கணவனான கமால் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை. கட்டுமஸ்தான அழகன் அவன் ஓர் காலத்தில். ஒவ்வொரு விடியலும் இருசொட்டு கண்ணீரை தன் கணவனுக்கு காணிக்கையாக செலுத்த அவள் தவறியதில்லை. தன் கணவன் மலசலம் கழித்து அதனை சுயநினைவின்றி தன் உள்ளங்கைகள், கால்கள் மற்றும் ஆடையிலும் பூசிக்கொண்டும் தவழ்ந்து கொண்டும் தன்பாட்டில் ஏதோதோ பேசிக்கொண்டும் இருப்பதை அவள் ஒவ்வொரு விடியலும் காணும். அவளது இதயத்தை கசக்கிப் பிழியும் துயர காட்சியாகும்.

ஜொஹராவுக்கு இக்காட்சியைக் காணும்போதெல்லாம் மனது பழைய காட்சிகளை மனக்கண் முன் கொண்டுவரும்.

தாய், தந்தை இல்லாத ஜொஹராவை வளர்த்து ஆளாக்கியவர் அவளது பாட்டி. செல்லம் கொடுத்து வளர்த்தாள்.

ஜொஹராவும் வயதுக்கு மீறிய உடல்வாகுடன் பேரழகியாக வளர்ந்தாள். சின்னச்சின்ன சேட்டைகளை தன் நண்பிகளுடன் செய்தாலும் நல்லது எது? கெட்டது எது? என்பதை பாட்டி சொல்லி வளர்க்க தவறியதில்லை அவளுக்கு. அவளும் மானம், மரியாதைகளில் கண்டிப்பானவள்.

தன்னை வழிமறித்து சேட்டை செய்த ஒருத்தனை செருப்பை கழற்றி அடித்து விரட்டிய பயமறியா வீரப்பெண்மணி அவள். பலரும் அவளை அடைந்துகொள்ள விரும்பினாலும் அவள் கமாலின் குணநலன்கள் மீது ஈர்ப்புக் கொண்டாள். கமால் வேறு யாருமல்ல. தாய் மாமனின் மகன்தான் அவளுக்கு. பேரழிகியான அவளை கட்டுமஸ்தான உடல், சுருட்டை முடி, சிவந்த முகம், மென்மையான உள்ளம் கொண்ட கமாலும் விரும்பி மணந்துகொண்டான்.

சந்தோஷமாக வாழ்நத இவர்களது வாழ்க்கையில் உறவுகளின் சதிகள் தொடர்ந்ததால் மனைவி, பிள்ளைகளை வெறுத்தொதுக்க ஆரம்பித்தான் கமால். தாய், தந்தை, சகோதர உறவுகளை முன்னிலைப்படுத்தியும் மனைவி, பிள்ளைகள் மீதான வெறுப்பையும் உமிழ்ந்தான். தொடர்ச்சியான அடி உதைகளுக்கு ஆளானாள் ஜொஹரா. உழைப்பாளியான கமால் தனது உழைப்பையெல்லாம் தன் உறவுகளுக்காகவே செலவிட்டான். எனினும் மனைவி பிள்ளைகளுக்கு ஏச்சையும் பேச்சையும் அடியையும் உதையையுமே  மிச்சப்படுத்தினான். இக் கொடுமைகளை அக்கம் பக்கத்தவர்கள் பார்த்தும் கேட்டும் மிகவும் வேதனைப்பட்டவர்களாக ஜொஹராவிடம் கமாலை பொலிசிடம் ஒப்படைக்குமாறும் அப்போதுதான் அவனுக்கு புத்திவரும் என்று கூறியும் ஜொஹரா அதை மறுத்தாள். நிராகரித்தாள். பொறுமையோடு இருந்தாள். பொறுமைக்கு கூலியுண்டு என நம்பினாள். காலம் வேகமாக ஓடி மறைந்தது.

உழைப்புக்காகவும் காசுக்காவும் சிவப்பு கம்பளம் விரித்து கவனித்த கமாலின் உறவுகள் கமால் தொழிலில் நஷ்டமடைந்து வீட்டில் குந்தியதும் என்ன? ஏது? என்று கூட கேட்க தனது பாசமான சகோதர உறவுகள் வரவில்லையே எனவும் உறவுகளை தேடிச்சென்ற கணம் உறவுள் முகம் கொடுக்காததும், தன் மனைவி, பிள்ளைகள் தன்னை கவனித்துக்கொள்வதை நினைத்தும் தான் செய்த பாவத்திற்கு என்ன கைம்மாறு? என்று பல நாட்களாக யோசித்தும் அழுதும் சுயநினைவின்றியே போனான்.

பழையதை நினைத்து யோசனையில் ஆழ்ந்து நின்று கொண்டிருந்த ஜொஹரா, கமால் தட்டிவிட்ட தட்டு கீழே விழுந்து கணீரென ஒலியெழுப்பியதும் திடுக்கிட்டாள். சுயநினைவுக்கு வந்தவளாக கட்டிலிலிருந்து விழப்போன கணவனை கட்டியணைத்தவளாக மெதுவாக கட்டிலை விட்டு கீழிறிக்கி தன்னியலாத கைகளால் கமாலின் ஆடைகளை களைந்து கமாலை கைத்தாங்கலாக முற்றத்துக்கு அழைத்து வந்து கதிரையொன்றில் அமரச் செய்தாள். நீர்க்குழாயிலிருந்து வடியும் நீர் நிரப்ப ஒரு வாளியை வைத்து நீர் நிரப்பி கமாலின் தலையில் கொட்டினாள்.

ஜில்லென்ற தண்ணீர் தலையில் பட்டதும் சிலிர்த்துப்போனான் கமால். தன் நொந்துபோன கைகளால் தன் கணவனின் கைகள், கால்களில் இருந்த மலத்தை தேய்த்து கழற்றினாள். நல்ல வாசனை சவர்க்காரமிட்டு கணவனை குளிப்பாட்டினாள். குளித்து முடித்த அவனை எழுப்ப முயன்றதும் கமாலின் வாயிலிருந்து வெளிப்பட்ட தூசண வார்த்தைகளைக் கேட்டு சிரித்தவளாக அவனை அணைத்து அழைத்துச் சென்று அவனுக்கு ஆடை அணிவித்தாள்.

பின்னர் கமாலை வெளியில் அழைத்து வந்து கதிரையில் அமர வைத்துவிட்டு கணவனின் அறையை நீரூற்றி கழுவினாள்.

சுபஹ_த் தொழுகைக்கான பாங்கு ஒலிப்பதை கேட்டதும் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு தொழுகைக்காக ஆயத்தமாகியவள் கமாலின் நிலை கண்டு கண்ணீர் சிந்தியவளாக இறைவனிடம் இரு கரமேந்தி ‘இவரைப் பார்க்க யாருமில்ல. நான் கண்மூட்ரதுக்கு முதல்ல இவரு கண்ண மூடிரனும்’ என அழுத கண்ணீர் கமாலின் முகத்திலும் வழிந்தோடியது.

– ஓட்டமாவடி அல்ஸாத்.

You must be logged in to post a comment Login