Articles

மறந்துவிடுங்கள்!

By  | 

மறக்கும் பழக்கம் மட்டும் மனிதர்களுக்கு இல்லாமல் இருந்திருந்தால் வாழ்க்கையை நிச்சயம் வாழ முடியாமலேயே போயிருக்கும்.

மனிதர்களுக்கு மறதி வருவது இயல்புதான். அந்த மறதியும் கொஞ்சம் தேவைதான். வாழ்க்கையில் எத்தனையோ இடைஞ்சல்களையும்  துன்பங்களையும் கடந்துதான் ஒவ்வொருவரினதும் வாழ்க்கை ஓட்டம் பிடிக்கிறது.

ஒரு ஓட்டப்பந்தயத்தில் வீட்டில் இருக்கும் பழைய தட்டுமுட்டு சாமான்களையெல்லாம் தூக்கி சுமந்துகொண்டு ஓடமுடியுமா? முடியாதல்லவா. அப்படி ஓடினால் தோல்விதான் மிஞ்சும். அதேபோல் தான் வாழ்க்கையிலும் நாம் அனுபவித்த துன்பங்களையும் அதன் நினைவுகளையும் மறந்துவிட்டு ஓடவேண்டும்.

சில மனிதர்கள் எந்நேரமும் கடந்தகால நிகழ்வுகளையும் தற்போது நடக்கும் நிகழ்வுகளையும் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களையும் எண்ணி,  எதைப் பற்றியாவது நினைத்துக்கொண்டும் புலம்பிக்கொண்டுமே இருப்பார்கள்.

ஏன் இத்தனை யோசனைகள்?

நேற்றைய நாளை நேற்றோடு மறந்துவிடுங்கள்| தற்சமயம் ஒன்றே நிரந்தரம். அதை நினைத்து கடக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக கடக்க முயற்சி செய்யுங்கள்.

அதேபோல்தான் ஒருவருடன் ஏதேனும் பகையோ அல்லது விரோதமோ ஏற்பட்டுவிட்டால், வாழ்வின் இறுதித் தருணம் வரை அவர்களுடன் சேராமல் விலகியே இருக்கும் பல பேர் எம் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஏன் இந்த விரோதம்?

வாழ்க்கை என்பது நிரந்தரமில்லாதது. அதனால் அனைத்தையும் மன்னித்துவிடுங்கள். அதற்குப் பதிலாக மறந்துவிடுங்கள்!

ஒருவரின் மீதுள்ள கோபத்தை மன்னித்துவிட்டேன் என்று சொல்வதை விட மறந்துவிட்டேன் என்று சொல்வதில் எத்தனை இன்பம் காணப்படுகிறது!

கடந்து செல்வதும், சில கெட்ட விடயங்களை மறந்து செல்வதும் தான் வாழ்க்கை.

இந்த மறதி மட்டும் இல்லாவிட்டால் உறவினர்கள் மத்தியிலும் சரி, சமூகத்தில் உள்ளவர்கள் மத்தியிலும் சரி, ஒற்றுமையாய் வாழ்வதென்பது மிகவும் கடினமாகிவிடும்.

வாழ்க்கையில் கடந்த கால அனுபவங்கள் அனைத்தையுமே மறந்துவிட வேண்டுமா?

இல்லை. மறக்கக்கூடாத, மறக்க முடியாத பல விடயங்கள் வாழ்க்கையில் அடங்கியுள்ளன. பள்ளிக்காலம், நண்பர்களுடன் சேர்ந்து நேரத்தை  செலவிட்ட தருணங்கள், வீட்டு விசேஷங்கள், குடும்பத்துடன் சென்ற பயணங்கள், சிறு வயதில் செய்த குறும்புகள், வாங்கிய அடிகள், ஆசிரியரிடம் பெற்ற தண்டனைகள், கிடைத்த பரிசுகள்… இவ்வாறு எத்தனையோ விடயங்கள் மறக்க முடியாதவையாக இருக்கின்றன.

இந்த அழகிய தருணங்களையெல்லாம் பாதியில் விட்டுவிட்டு தேவையற்ற துயரங்களை மட்டும் தோள் மேல் வைத்துக்கொண்டு பயணிக்க பழகிவிடுகின்றோம். அவ்வாறு பயணித்தால் நிம்மதியோ சந்தோஷமோ எங்கே இருக்கப் போகிறது?

பகை, பொறாமை, சண்டை, முரண்பாடு, வாக்குவாதம், பணக்கஷ்டம், வீண் தொல்லைகள், எம்மை வீழ்த்த முயற்சி செய்வோர், எம் மீது வீழ்ந்த வீண்பழிகள், எம்மை இகழ்வோர், கடுமையான சொற்கள்… இவை போன்றவற்றை மறந்துவிட்டு கடந்து செல்வதுதான் நல்லது. இவையெல்லாம் எம்மை சிதைக்க வந்தவை.

நாணயத்தின் இரு பக்கம் போல் நல்லது – தீயதை உள்ளடக்கியதுதான் வாழ்க்கை. தீயதை மறந்துவிட்டு நல்லதை மாத்திரம் கையாள பழகிக்கொண்டால் நல்லது.

ஒவ்வொரு விடியலிலும் ஒரு புதிய நாளில் காலெடுத்து வைக்கிறோம். நேற்று நடந்த கசப்பான அனுபவங்களை மறந்துவிட்டு இன்று இந்த நொடியை இனிதாக மாற்ற பழகிக்கொண்டால், நாம்தான் வாழ்க்கையை சரியாகவும் சிறப்பாகவும் வாழ்கிறோம் என்று தைரியமாக சொல்லிக்கொள்ளலாம்.

மறந்துவிடுங்கள்| அனைத்தையும் அல்ல, சில கசப்பான அனுபவங்களை, இனிப்பான இந்த நொடிக்காக!

து.சிந்துஜா

 

You must be logged in to post a comment Login