Articles

பெண் மறப்பதே இல்லை!

By  | 

பெண்ணுக்கு பிறந்த வீட்டின் நினைவு என்பது அவளுடைய உயிர் பிரியும் காலம் வரையிலும் அவளிடமிருந்து அகல்வதில்லை. மேலும், ஒரு பெண்ணுக்கு பிறந்த வீட்டின் நினைவு பதிந்திருக்கும் விதத்தில் ஆணுக்குப் பதிந்திருப்பதில்லை. ஆணின் இடப்பெயர்வு என்பது அவனுக்கு பால்யகாலம் முதல் அவனுடைய தொழில் சார்ந்தது என்கிற கருத்தினால் உருவாக்கப்பட்டிருக்கிறான். பெண்ணின் இடப்பெயர்வு என்பது உறவுகள் சார்ந்து அமைந்திருக்கிறது.

பெண்ணுக்கு, அவளுடைய அம்மா வீடு என்பது “வீடு மட்டும் இல்லை” என்று அனைத்துப் பெண்களுமே சொல்வதற்குக் காரணம், ஒருநாள் அவள், அம்மா வீட்டை விட்டு சட்டென தன்னை விலக்கிக்கொள்கிறாள். உரிமையோடு வாழ்ந்த ஒரு வீட்டிலிருந்து முற்றிலுமாக தன்னை விலக்கிக்கொள்வது என்பது பெண்ணுக்கே சாத்தியமும் ஆகிறது.

உடலளவிலும் வீட்டின் உரிமை என்ற அளவிலும் தன்னை அந்த வீட்டிலிருந்து விலக்கிக்கொள்கிற பெண், மனதளவில் மிக நெருங்கியவளாகவே எப்போதும் இருக்கிறாள். அதன் பின்பு அவள் வாழ்கிற எந்த வீட்டிலும் அம்மாவின் வீட்டையே ஒப்பீடு செய்து பார்க்கிறாள். அம்மா வீட்டின் நினைவுகளாலேயே அவள் வாழ்கிற வீட்டின் வெற்றிடத்தினை நிரப்புகிறாள்.

எழுத்தாளர்கள், கவிஞர்கள், அரசியல் தலைவர்களின் வீடு போன்றவற்றை நினைவுச் சின்னமாக மாற்றுவது வழியாக அவர்கள் பற்றிய நினைவைப் பத்திரப்படுத்த நினைக்கிறோம். பல நேரங்களில் இப்படியான நினைவு இல்லங்களில் அது சார்ந்த நினைவினை நினைவு கொள்ளாமல் கடந்து செல்வது மிகவும் வேதனைக்குரிய செயலாக இருக்கிறது. அதைவிடக் கொடுமையானது, அப்படியான நினைவு இல்லங்களைப் பராமரிக்கிறேன் பேர்வழி எனச் செயற்படுகிற சாதிச் சங்கங்கள், அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் அதனுடைய உண்மையான நினைவு மங்கலாகிவிடுகிறது.

நினைவு தெரிந்த நாளாய்

என்வீடு மாறவில்லை

ஆங்காங்கே அழுக்குச் சுவர்களும்

வாசலில் வெற்றிலைச் சுண்ணாம்பு

தடவிய தூண்களும்,

பாசி படர்ந்த கிணற்றடியும்,

சிவப்புப் பூ பூக்கும் அரளியும்

“அப்பனே முருகா” என

வாழ்க்கையை அவனுக்குத்

தாரை வார்த்துக் கொடுத்துவிட்ட அம்மாவும்

மண்ணில் இருந்து இரண்டடி மேலே

கனவுகளோடு வாழ்ந்த அப்பாவும்

யாருமே மாறவில்லை.

வேலை கிடைத்து மாற்றல் வந்து

வேற்று மாநிலத்தில் சோற்றுக்குத் திண்டாடி,

கல்யாணமாகி, குழந்தை பிறந்து,

வீட்டிற்கு சிமென்டு பூசி, வெள்ளையடித்து

குரோட்டன்ஸ் வைத்து பார்த்தபோது

அதே காரைபோன சுவரும் தூண்களும்

என் மூதாதையரின் தாம்பூலப் பதிவுகளும்

அழியாமலே இருந்தன.

ஊரோடு உறவுகள் நீர்த்துப்போய்,

என் ஊர் வாசனையே தெரியாத

ஒரு தூர தேசத்தின்,

தீப்பெட்டிச் சொர்க்கத்தில்

செருகிக்கொண்டபோதும்,

தன் இளம் இருட்டுச்சுவர்களுக்குள்

என்னைப் பத்திரமாய்ச் சீராட்டிய வீடு,

அம்மாவின் பழைய சேலையைப் போல

மெத்தென்று மனதைத் தழுவும்…

– கனிமொழியின் “என் வீடு” என்ற தலைப்பிலுள்ள கவிதை இது.

ஓர் இடம் அல்லது வீடு போன்ற உயிரற்ற பொருட்கள் பலதும் அழியாத உணர்வுகளாக இருப்பது என்பது அது சார்ந்த மனிதர்களாலேயே உருவாக்கப்படுகிறது. பாரம்பரியமான வீடு என்கிற சொல் மிக ஆடம்பரமான ஆயிரம் ஜன்னல் வைத்த மாளிகைக்கு மட்டும் சம்பந்தமில்லை. பாரம்பரியம் என்பதில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என இப்படி எத்தனையோ முந்தைய தலைமுறையினரின் நினைவுகள், சொற்களாகப் பரவிக்கிடக்கும் சின்னஞ்சிறிய வீடடுக்கும் கூட பொருந்தும்.

நினைவு என்பது செல்வத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுவதில்லை. உறவுகளுக்கிடையே இருந்த நெருக்கம், நெருக்கமின்மை சார்ந்த ஒன்றாக எப்போதும் இருக்கிறது. ஒரு உறவு தொடங்கி வாழ்ந்த இடமும், அந்த உறவு தன்னை நிறைவு செய்துகொண்ட இடமும் மிக முக்கியமாகிப் போவது என்பது வாழ்ந்து மறைந்த மனிதரோடு உயிரோடு இருப்பவர்களின் உணர்வுகளின் வழியாகவே முடிவு செய்யப்படுகிறது.

முதல் சந்திப்பு நிகழும் இடம் என்பது நட்புகளிலும் உறவுகளிலும் கூட முக்கியமானது என்றாலும் காதலுக்கு மட்டும் எப்போதும் தனியிடம் உண்டு. காதலின் வளர்நிலைக்கு சூழலும் இடமும் மிக முக்கிய பங்கு வகிப்பவை. முதல் சந்திப்பு நிகழ்ந்த பொழுதினையும் இடத்தையும் சொல்லிச் சொல்லி மகிழ்வடையும் விதமாகவே காதலர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு அவர்களின் தொடக்கக் காலம் என்பது அவர்களைத் தூண்டுதல் அடையச் செய்கிற ஒன்றாகவே இறுதிக் காலத்திலும் இருக்கும் அல்லது அப்படி இருக்கும்படியான வாழ்வினை வாழ்ந்து நிறைதலே அவர்களின் அன்பினை நிறைவு செய்வதாக இருக்கமுடியும்.

காதலர்களின் முதல் சந்திப்பின் இடம் என்பது ஆண்களை விடவும் பெண்களுக்கே மிக ஆழமாகப் பதிந்திருக்கும். அப்போது அவளும் அவனும் அணிந்திருந்த உடை, அந்த உடையில் பதிந்திருந்த சிறிய சுருக்கம், அவள் சூடியிருந்த பூ, அருகிலிருந்த மரம், அதிலிருந்து அசைந்துகொண்டிருந்த காற்று, காற்றில் கலந்திருந்த வாசனை என எதுவுமே பெண் மறப்பதேயில்லை.

காதலனின், கணவனின் முதல் சந்திப்பு என்றாலும் அது அவளுக்கு அம்மா வீடு போல எப்போதும் வெதுவெதுப்பாக அவளுடைய நினைவிலிருந்து அகற்ற இயலாததாக இருக்கும்.

மொத்தத்தில் பெண் எதையும் எப்போதும் மறப்பதேயில்லை!

You must be logged in to post a comment Login