Mother

முதலில் தாய் பிறகு ஆசிரியர்!

By  | 

காலை வகுப்பினுள் நுழைகிறார், ஆசிரியை சுமதி.
வழக்கம்போல வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப் பார்த்து ‘Love you all!’ என்றார்.
தான் சொல்வது பொய்யென்று அவருக்கே தெரியும்.
ஆம்! அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்க முடியவில்லை. ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல், சுட்டிக்காட்டுவதற்கு எந்தவொரு சிறப்புத்தன்மையும் இல்லாத ‘டெடி’ என்கிற தியோடர்!
அவனிடம் மட்டும் ஆசிரியை சுமதி நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது!


எந்தவொரு தவறான விடயத்துக்கும் அவனையே உதாரணம் காட்டினார். எந்த நல்ல விடயத்துக்கும் அவனை நிராகரித்தார்.
அவ்வாண்டுக்கான காலாண்டு பரீட்சை வந்தது. மாணவர் முன்னேற்ற அறிக்கைகள் வகுப்பாசிரியர்களிடமிருந்து தலைமை ஆசிரியரின் கையெழுத்துக்கு அனுப்பப்பட்டன.
ரிப்போர்ட்டுகளை பார்வையிட்டு கையொப்பமிட்டுக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர், ஆசிரியை சுமதியை அழைத்தார்.
அவர் வந்ததும், ‘முன்னேற்ற அறிக்கை என்பது ஒரு பிள்ளையின் முன்னேற்றத்தை அறிவிக்கவேண்டும். தன் பிள்ளைக்கும் ஓர் எதிர்காலம் உண்டென்ற நம்பிக்கையை பெற்றோருக்கு தரவேண்டும். நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது பெற்றோர் அவன் மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள்!’ என்று தியோடரின் முன்னேற்ற அறிக்கையை சுட்டிக்காட்டி கூறினார்.
ஆசிரியை சுமதியோ ‘என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. அவனைப் பற்றி எழுதுவதற்கு என்னிடம் ஒரு நல்ல விடயம்கூட இல்லை!’ என்றார்.
தலைமையாசிரியர் தியோடரின் கடந்த கால முன்னேற்ற அறிக்கைகளை சுமதியிடம் கொடுத்தார். ஒவ்வோர் ஆண்டாய் விரித்துப்படிக்கிறார் சுமதி.
மூன்றாம் வகுப்பு அறிக்கையில் ‘வகுப்பின் மிகத்திறமையான மாணவன் தியோடர்’ என இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
நான்காம் வகுப்பு அறிக்கை…
‘தியோடரின் தாய் புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளார். அதனால் தியோடர் மீது முன்னர்போல அவரால் கவனம் செலுத்தமுடியவில்லை. அதன் விளைவு அவனிடம் தெரிய ஆரம்பித்திருக்கிறது.’
ஐந்தாம் ஆண்டின் அறிக்கை…
‘தியோடரின் தாயார் இறந்துவிட்டார். அவன் மேல் அக்கறை காட்டும் உறவு தேவைப்படுகிறது. இல்லையேல், நாம் அந்தக் குழந்தையை இழந்துவிடுவோம்!’
கண்களில் கண்ணீருடன் சுமதி தலைமையாசிரியரைப் பார்த்து ‘என்ன செய்யவேண்டுமென எனக்கு தெரியும்” என்று உறுதியோடு கூறினார்.
அடுத்த திங்கள் காலை சுமதி வகுப்புக்கு சென்று பிள்ளைகளை பார்த்து வழக்கம்போல் ‘Love you all’ என்றார்.
இம்முறையும் தான் பொய் சொல்வது அவருக்குத் தெரியும். ஏனென்றால், தற்போது மற்ற குழந்தைகளை விட ‘டெடி’ எனும் தியோடர் மீது அவரது அன்பு அளவு கடந்திருந்தது.
தியோடருனான தன் அணுகுமுறையை மாற்றிக்கொள்வதென தீர்மானித்திருந்தார்.
ஒவ்வொரு நல்ல விடயத்துக்கும் தியோடர் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஒவ்வொரு தவறான உதாரணங்களின்போதும் அவன் பெயர் கவனமாய் தவிர்க்கப்பட்டது.
அவ்வாண்டின் பள்ளி இறுதிநாள் வந்தது.
எல்லா மாணவர்களும் தம் ஆசிரியருக்கென பரிசுகள் கொண்டுவந்தனர். அவற்றுள் ஒன்று மட்டும் பழைய செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது.
ஆசிரியை சுமதிக்கு, அது டெடியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமென உள்ளுணர்வு சொன்னது.
முதலில் அதையே பிரித்தார். பிரித்ததும், அதனுள் பாதி உபயோகித்த சென்ட் போத்தல் ஒன்றும், சில கற்கள் கழன்று விழுந்த பிரேஸ்லெட் ஒன்றும் இருந்தது.
அதை பார்த்து எல்லோரும் சிரித்தனர். ஒன்றுமே சொல்லாமல் ஆசிரியை சுமதி அந்த சென்ட்டை தன் மீது பூசிக்கொண்டார். பிரேஸ்லெட்டை தன் கையில் அணிந்துகொண்டார்.
மெல்லியதாய் ஒரு புன்னகையுடன் தியோடர் சொன்னான்.
‘இப்போது உங்களிடம் என் தாயின் வாசம் வருகிறது. இறக்கும் முன் அவர் இறுதியாய் வைத்திருந்த சென்ட் இதுதான். இந்த பிரேஸ்லெட்தான் பெட்டிக்குள் வைக்கும்முன் அவர் உடலிலிருந்து அகற்றப்பட்டது!’
ஓராண்டு கழிந்தது.
ஆசிரியை சுமதி மேசையில் ஒரு கடிதம் கிடந்தது.
‘நான் நிறைய ஆசிரியர்களை பார்த்திருக்கிறேன். ஆனால், நீங்கள்தான் சிறந்த ஆசிரியர்… அன்புடன் டெடி.’
ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் ஒரு கடிதம் கிடைத்தது. அதே வரிகளுடன்.
ஆண்டுகள் பல வேகமாய் உருண்டன. அவர்களுக்கிடையேயான தொடர்பு எப்படியோ அறுந்துபோனது. ஆசிரியை சுமதி ஓய்வுபெற்றிருந்தார்.
பல ஆண்டுகளின் பின்னர் அவருக்கு ஒரு கடிதம் வந்தது. கடிதம் டொக்டர் தியோடரிடமிருந்து…
‘திருமதி சுமதி,
நான் என் வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை பார்த்திருக்கிறேன். ஆனால், நீங்கள்தான் சிறந்த ஆசிரியர். நான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன். நீங்கள் வருகை தராத என் திருமணத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது….
நான் உங்கள் டெடி.
Dr. தியோடர்.’ என்றிருந்தது.
அத்துடன் போய்வர விமான டிக்கட்டுக்களும் இணைக்கப்பட்டிருந்தன.
ஆசிரியை சுமதிக்கு இருப்பு கொள்ளவில்லை. அவரிடம் அந்த சென்ட் போத்தல் தற்போது இல்லை. பிரேஸ்லெட் பாதுகாப்பாய் இருந்தது.
அதை அணிந்துகொண்டு திருமணத்துக்குப் புறப்பட்டார்.
அங்கு சென்று பின் இருக்கையொன்றில் அமர முற்பட்டபோது அங்கிருந்த ஊழியர்கள் அவரை எப்படியோ அடையாளம் கண்டுகொண்டு முன் வரிசையில் இருந்த இருக்கையொன்றை நோக்கி அழைத்துச் சென்றனர்.
அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் எழுதப்பட்டிருந்தது, ‘MOTHER’.
திருமணம் முடிந்தது.
தியோடர் தன் புது மனைவியிடம் ஆசிரியை சுமதியை அறிமுகம் செய்துவைத்தார்.
‘இவர் மட்டும் இல்லையென்றால், நான் இன்று இந்த இடத்தில் நிற்கமுடியாது…’ தியோடரின் கண்களில் கண்ணீர்.
ஆசிரியை சுமதி பெண்ணை பார்த்து சொன்னார்:
‘டெடி இல்லையென்றால், ஓர் ஆசிரியர் தன் மாணவர்களுக்கு முதலில் ஒரு தாயாய் இருக்கவேண்டும் என்பதை நான் அறிந்திருக்கவே முடியாது!’

You must be logged in to post a comment Login