Covid 19

மோனோ குளோனல் எதிர்ப்பு சக்தி கலவை தடுப்பூசிக்கு மாற்றாகுமா?

By  | 

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு கடந்தாண்டு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டபோது கொடுக்கப்பட்ட மோனோ கிளோனல் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கலவை அவரது உடலில் இருந்து கொரோனா வைரஸை உடனடியாக வெளியேற்றியது.

ஆனால் இந்த எதிர்ப்பு சக்தி கலவையை அவ்வளவு சுலபத்தில் அனைவராலும் பெற இயலாது. அப்போது இந்த சிகிச்சை அளிக்க ஒரு அமெரிக்கருக்கு 20 ஆயிரம் டொலர் செலவாகும். இதனால் அமெரிக்க நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களால் இந்த சிகிச்சை பெற முடியாது என்று அப்போதைய டிரம்பின் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் விமர்சித்திருந்தார்.

வழக்கமாக எம்-ஆர்என்ஏ தடுப்பு மருந்து ஊசிகள் 2 டோஸ் செலுத்தப்பட்டு நுரையீரலில் உள்ள வைரஸ் அழிக்கப்படும். இந்த எதிர்ப்பு சக்தி கலவையை அளித்து வைரஸ் தாக்கிய நோயாளியை குணப்படுத்த முடியுமா என ஹைதராபாத்தைச் சேர்ந்த ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட்ரோ என்ராலஜி அமைப்பு சோதனை செய்து பார்த்தது.

இந்த மருந்துக் கலவை அளிக்கப்பட்ட 40 கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகள் உடனடியாக குணமாகி உள்ளதாக இந்த அமைப்பின் தலைவர் டாக்டர் நாகேஷ்வர ரெட்டி தற்போது தகவல் அளித்துள்ளார். இந்தியாவில் இந்த சிகிச்சையைப் பெற ஒருவர் 70 ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியது அவசியம்.

எனவே இந்த சிகிச்சையை அனைவராலும் பெறமுடியுமா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதே சமயத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸ் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் உடலில் இந்த நோய் எதிர்ப்பு சக்தி கலவையை செலுத்த முடியாது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்போது இதனை செலுத்தினால் அதுவே உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கோவாக்ஸின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பு மருந்து ஊசிகள் செலுத்தப்படும் நிலையில் இந்த மோனோகிளோனல் ஆன்டிபாடி காக்டைல் நோய் எதிர்ப்பு சக்தியை செலுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

You must be logged in to post a comment Login