Articles

வதந்திகளும் வாழ்க்கை பக்கங்களும்

By  | 

புரளிகள் பேசுவதற்கு நாம் எவரும் சிறிதேனும் தயங்குவதே இல்லை. ஒருவரைப் பற்றியோ, ஒரு சில விடயங்களைப் பற்றியோ எழுந்தமானமாக புரளிகளை பகிர்ந்துகொண்டே இருக்கின்றோம்.

அதிலும் குறிப்பாக இந்த சமூகத்தில் உண்மைகள் பரவும் வேகத்தைக் காட்டிலும், ஒரு நல்ல பயனுள்ள தகவல் பரவும் வேகத்தைக் காட்டிலும், தவறான ஆனால், சுவை மிகுந்த புரளிகள் மிக மிக வேகமாகப் பரவுகின்றன. அதனால் ஏற்படும் பிற தாக்கங்கள் குறித்து எவரும் சிந்திப்பதில்லை. சிறியவர் முதல் பெரியவர் வரை வீடு தொடங்கி பாடசாலை, பணியிடம் என எல்லா இடங்களிலும் போலிச் செய்திகளும் வீண் வதந்திகளும் பரவி கிடக்கிறது என்றால் மறுப்பில்லை.

இவ்வாறு பரப்பப்படும் வதந்திகள் ‘குழிவாக்கல்’ எனும் பெயரிலும் அழைக்கப்படுகின்றன. சுருங்கக்கூறின், வதந்தி என்பது வீண்பேச்சு. இது ஓர் அமைதியான வன்தாக்கல். மற்றவர்களை தனிமைப்படுத்தும் வன்மம் நிறைந்த துன்புறுத்தல்களை மறைமுகமாகத் தெளிக்கும் வல்லமை மிகுந்த ஆபத்தான செயல்.

புரளிகள், வதந்திகள் என்று அடுத்தவர்களை சுட்டிக்காட்டும்போது விரல்கள் ஒருபோதும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க முனைவது இல்லை. ஒரு தனிநபர் குறித்த தவறான புரிதலால் அவர் தொடர்பான சமூகப் பார்வைகள் சிதைந்துவிடும் என்பதை பற்றி ஏன் நாம் சிந்திப்பதில்லை?

குறிப்பாக நோக்கினால், ஒரு பாடசாலை மாணவன் துடுதுடுப்பானவனாகவும், விளையாட்டு மற்றும் மைதான செயற்பாடுகளில் மிகவும் ஆர்வம் உள்ளவராகவும், நூற்கல்வி மற்றும் வகுப்பறை செயற்பாடுகளில் ஈடுபாடு அற்றவனாகவும் இருக்கும் அதேவேளை முற்கோபமும் இருக்குமிடத்து, அவன் பிறழ்வான நடத்தை கோலங்களை கொண்டவனாக பெரிதும் சித்திரிக்கப்பட வாய்ப்புகள் உண்டு.

அவனது தனிப்பட்ட நிலைப்பாடுகள், திறமைகள், தனிப்பட்ட ஆளுமை மற்றும் உண்மைத்தன்மைகள் குறித்து யாரும் கவனிப்பதே இல்லை. காலப்போக்கில் அம்மாணவன் எத்தகைய நிலையில் இருந்தாலும், ஏற்கனவே பரவிய வதந்தி போக்குகள் ஏதோ ஒரு வகையில் அவனது நகர்வில் தாக்கம் செலுத்தும்.

இவை தவிர பணிக்குச் செல்லும் பெண்கள், அதிலும் பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தொடர்பான வதந்திகள், பணி உயர்வு பெற்று முன்னேறும் உத்தியோகத்தர்கள், சமூகத்தில் ஏதோ ஒரு வகையில் சாதனையை நோக்கி பயணிப்போர்  என்று அனைவரையும் புரளிகளால் தாக்கும் பழக்கம் எம் சமூகத்தினருக்கொன்றும் புதிதல்லவே.

‘காய்க்கின்ற மரங்கள்தான் கல்லடி படும்’ என்று கூறுவதை போலவே வாழ்க்கை பயணத்தில் நம்மை காட்டிலும் அழகிலோ அறிவிலோ செல்வத்திலோ செல்வாக்கிலோ நடத்தைக் கோலங்களிலோ கல்வியிலோ உயர்வை நோக்கி நகரும் பலரது வளர்ச்சியை ஏற்க மறுத்த எம் இதயங்களின் இயலாமை விம்மல்களே வதந்திகளாகவும் பொய்ப்புரளிகளாகவும் வெடிக்கின்றன.

பெண்கள் மட்டும்தான் புரளிகள் பேசுகின்றார்களா? நிச்சயமாக இல்லை. ஆண்களும் வதந்திப் பேச்சுக்களை பேசுகின்றனர் என்பதே இதில் கூடுதல் சுவாரஸ்யம். ஆணும் சரி, பெண்ணும் சரி, வதந்திகளை பரப்புகையில், அதன் பின்விளைவுகளை பரவச் செய்யும் செய்தி குறித்த உண்மை நிலைப்பாட்டையும் அறிய முற்படுவதில்லை. ஒருவரை தாழ்த்தி சித்திரிக்க வேண்டும் என்ற நோக்குடனும், சுவாரஸ்யம் மிக்க பொழுதுபோக்காக இன்னொருவரை விட தம்மை உயர்வாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடனும் நாம் பகிரங்கமாக பரவச் செய்யும் புரளிகள் மிகவும் ஆபத்தானவை.

புரளிகள் செயல் சார்ந்ததாகவோ நடத்தை கோலங்கள் சார்ந்ததாகவோ ஒருவருடைய முயற்சி சார்ந்ததாகவோ தொழில் மற்றும் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாகவோ பரவச் செய்தல் பாதக விளைவை தரும். அத்தோடு  நற்செயலை மிகைப்படுத்தி திரிபுகளோடு வெளியிடப்படும் கருத்துக்கள் பெறுமதி அற்றவை என்பதோடு மட்டும் அல்லாமல், பெருமதிப்பையும் இழக்கச்செய்ய வல்லது. அதேவேளை குறிப்பிட்ட விடயம் தொடர்பான எதிர்மறை வதந்திகள் ஒருவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போடக்கூடிய அளவுக்கு ஆபத்தானவை என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும்.

இன்னும் விரிவாக கூறினால், நாம் புரளிகள் பேசுகின்ற அளவுக்கு உண்மைகளை பேசுவதே இல்லை. பலர் தெரிந்தே புரளிகள் பேசுகின்றனர். அதேவேளை பெரும்பாலானோர், அவை வதந்திகள் என்பதை அறியாமலேயே பலதரப்பட்ட இடங்களில் பரவச் செய்கின்றனர்.

இவ்வாறான தவறான செய்திகள் பல கோணங்களில் பரவிய பின்னர் அதன் உண்மைத்தன்மைகள் புலப்பட்டாலும் கூட, ஏற்கனவே பரவிய போலிகளை அடியோடு அழிக்க இயல்வதில்லை. இன்னும் இது தொடர்பில் நோக்கினால், இன்றளவில் சமூக வலைத்தளங்களின் செல்வாக்கு ஒவ்வொருவருடைய தனிப்பட்ட மனித வாழ்வியலில் பெரிதும் தாக்கம் செலுத்துகிறது.

சமூக வலைத்தளங்கள் புரளிகளை மேலும் வலுப்படுத்தி மக்களிடையே பகிர்கின்றன. அரசியல் சார்ந்தோ, பொருளாதாரம் தொடர்பிலோ மருத்துவம், சுகாதாரம், அழகியல், சினிமா, பிரபலமானவர்கள், சாதாரண குடிமக்கள், மாணவர்கள் என பாகுபாடு இல்லாமல் பலதை சார்ந்தோ கணக்கற்று பகிரப்படுகின்றன. பல புரளிகள் பல்வேறுபட்ட வடிவங்களில் ஒற்றை விரல் நொடியில் பகிரப்படுகின்றன. முகநூல் மற்றும் ஏனைய இணையதளங்களின் ஊடாக போலி தலைப்புகளுடன் பகிரப்படும் பல செய்திகளை நாம் காணமுடியும்.

இவ்வாறான சுவாரஸ்யம் மிக்க தலைப்புகளில் வரும் போலிச் செய்திகளையே பாவனையாளர்கள் அதிகம் தேடிச் செல்வதாகவும் உள்ளது.

ஒரு விடயம் மென்மேலும் திரிக்கப்பட்டு பகிரப்படுகிறது. இதனால் குறித்த தகவல் தொடர்பான உண்மைத் தன்மைகள் நசுக்கப்படுவது மட்டுமல்லாமல், போலி செய்திகளின் தாக்கம் தனி நபரையோ ஒரு நிறுவனத்தையோ, இவ்வளவு ஏன்! குறித்த இன, மத ரீதியாகவோ பாரியளவு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல், சமூகம் மற்றும் ஏனைய மக்கள் மத்தியில் அது பற்றிய தவறான ஒரு விம்பம் பதியப்பட்டுவிடுகிறது.

இவை மட்டுமன்றி, இன்றைய காலகட்டத்தில் வதந்திகளை நாடுவதிலும், அதனை பகிர்வதிலும் மக்கள் பெரிதும் நாட்டம் செலுத்துகின்றார்கள்.

எம்மால் ஒரு செயலை செய்ய முடியாதபோது எதிர்பார்த்த வரவேற்பு, பாராட்டுக்கள், புகழ், செல்வம், அழகு, நாட்டம் போன்றவற்றை பெற இயலாதபோது இயலாமையின் அழுத்தத்தால் சுற்றி இருப்பவர்களையோ ஒரு நிறுவனத்தையோ எதிர்மறை கருத்துக்கள் மற்றும் வதந்திகளை பரப்பி தாக்க முயல்கின்றோம்.

ஆக, “ஒருவரை பற்றிய வதந்தியையோ எதிர்மறையான கருத்துக்களையோ ஒருபோதும் வெளிவிடாதீர்கள். அது மற்றவருடைய பெயரை சிதைப்பதோடு மட்டும் நின்றுவிடாது. நம்முடைய மரியாதையையும் குறைக்கும்” என்கின்றார், அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர் பிரையன் கோஸ்லாவ்.

எதிர்மறையான விமர்சனங்களோ கருத்துக்களோ ஒருவரை என்னவெல்லாம் செய்யும் என்பதை நாம் சிந்தித்து செயற்பட வேண்டும். இவ்வாறான கருத்துக்களால் பாதிக்கப்படும் நபருடைய நிலை, அவஸ்தையை எதிர்கொள்ளும் திறன் குறித்து இனியேனும் சிந்தித்தல் நன்று.

எனவே, ஒருவருடைய வாழ்க்கையை மற்றும் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை பாதிக்கும் ஆற்றல் கொண்ட வதந்திகள் திருடலை விட கொடியது என்றிருப்போம்.

வதந்திகள் திருடக்கூடியவை. அத்தோடு உண்மை புலப்படும்போது திரும்பப் பெற இயலாதவை. நாம் வெளியிடும் கருத்துக்களை கருத்தாழம் மற்றும் உண்மைத்தன்மை அறிந்தே வெளியிடல் நன்று.

வார்த்தைகளோடு வாழ்வை சரிசெய்து, மகத்துவ மானிடராய் மிளிர்ந்திடுவோம்.

டினோஜா நவரட்ணராஜா,
காரைநகர்.

You must be logged in to post a comment Login