Women Achievers

வரம்புகளை உடைப்பதே கவிதை!

By  | 

‘சபிக்கப்பட்ட பூ’, ‘ஈழவாடை’ கவிதை நூல்களை படைத்த எழுத்தாளர், பல்கலைக்கழக மாணவி டிலக்ஷனா வழங்கும் மித்திரன் வாரமலருக்கான நேர்காணல்…

1: வணக்கம் டிலக்ஷனா! உங்களைப் பற்றிய சுய அறிமுகத்தோடு நேர்காணலை ஆரம்பிக்கலாம்…

நான் டிலக்ஷனா செல்வராசா. கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி எனும் கிராமத்தைச் சேர்ந்தவள். ஆரம்பக்கல்வியை கிராஞ்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கற்று, உயர்தரத்தை அயலூர் பாடசாலையான வேரவில் இந்து மகா வித்தியாலயத்தில்  மேற்கொண்டேன். தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பி.ஏ சிறப்பு பட்டத்தை பூர்த்தி செய்துள்ளேன்.

 

2: பன்முக ஆளுமை கொண்ட உங்களை நீங்கள் இச்சமூகத்தில் யாராக அடையாளப்படுத்திக்கொள்வீர்கள்?

நான் எழுத்துலகில் பிரவேசிப்பதற்கு முன்னரும் பின்னரும் அதிகம் நேசிப்பது இலக்கிய வாசிப்பையே. இலக்கியங்களை அவற்றின் ஓட்டத்துக்கேற்ப வாசித்து, அவற்றின் உள்ளார்ந்த மூலம், நெளிவு சுழிவுகள், அவை இலக்கியத்துக்கு எவ்வாறு உயிரூட்டுகின்றன என்பவற்றை அறிவதில் செலவிடுகின்ற நேரமானது எழுதுகின்ற நேரத்தைவிட காத்திரமானது என நம்புகிறேன். அதனால் சமூகத்தில் என்னை ஓர் எழுத்தாளராக, இலக்கிய வாசிப்பாளராக அடையாளப்படுத்திக் கொள்வதையே பெரிதும் விரும்புகிறேன்.

3: உங்களுடைய முதலாவது கவிதை நூல் ‘சபிக்கப்பட்ட பூ’ பற்றி…

பத்திரிகைகளில் உதிரிகளாக எழுதிக்கொண்டிருந்த எனக்கு தனியான ஓர் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது கன்னிப் படைப்பான ‘சபிக்கப்பட்ட பூ’ கவிதை தொகுதியே. இது நான் எழுதத் தொடங்கிய  முதற்கட்டங்களில் எழுதிய கவிதைகளை உள்ளடக்கியது. பெண்ணியம், யுத்தம் தந்த வலிகள், மண் சார்ந்த எம் மனநிலைகள், காதல், நட்பு என பல்வேறு விடயங்களை இங்கு பேசியிருக்கிறேன்.

 

4: அந்த நூல் சமூகத்தில் செலுத்திய தாக்கம் பற்றி…

‘சபிக்கப்பட்ட பூ’ சமூகத்தில் செலுத்திய தாக்கமே என்னை மேலும் எழுதத் தூண்டியது எனலாம். இந்நூலைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எனக்கு கிடைத்தன. அவை பெரும்பாலும் எனக்கு நேர்மறையான சிந்தனைகளையே உருவாக்கின. நூல் வெளியீட்டுக்கு முன் “கட்டாயம் இதை நீ செய்யத்தான் வேண்டுமா? கொஞ்சம் யோசித்து செய்” என முகத்துக்கு நேரே கூறியவர்களே, என்னிடம் வந்து “தொடர்ந்து எழுது… அடுத்த தொகுப்பை இன்னும் சிறப்பாக கொடு” என கூறுமளவுக்கு இந்நூல் தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

5: முதலாவது கவிதை நூல் வெளியீட்டின்போது நீங்கள் பெற்ற அனுபவங்கள்…

அந்த அனுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை. அப்போது நான் பல்கலைக் கழகத்தில் இரண்டாம் வருடம் கற்றுக் கொண்டிருந்தேன். கையில் கவிதைகள் இருந்தன. ஆனால், அவற்றை வெளியீடு செய்வதற்கான நிதியோ, சரியான வழிப்படுத்தல்களோ இருக்கவில்லை. இந்நிலையில் படைப்பாளிகள் உலகத்தினரே வெளியீட்டுக்கு கை கொடுத்தனர். நூலுக்கான அட்டைப்படம் வரைவது முதற்கொண்டு அச்சுக்கோர்த்தல் வரை அந்த படைப்பாளிகளே உதவினர். அச்சுக்கோர்த்த நூல்களை கிடப்பிலே போடாமல் அதே வேகத்துடன் வெளியிட்டேன்.

 

6: கவிதை குறித்த உங்களது வரையறை?

வரையறையற்றது, வரம்புகளை உடைப்பதே கவிதையின் சிறப்பம்சம் என்பேன். ஒரு கவிதை எப்பொழுது கட்டுக்களை தகர்த்துக்கொண்டு முகிழ்கிறதோ, அப்பொழுதே அது பூரணத்துவம் பெறுகிறது. ஒரு சிறந்த கவிதை அதை வாசிக்கின்ற வாசகனை தன்னுள் முழுமையாக ஈர்த்துக்கொள்ள வேண்டும். சகிர்தயத் தன்மையை வாசகனிடம் உருவாக்குகின்ற கவிதைகள் உயிருள்ள கவிதைகளாகின்றன. அதன் கருப்பொருள் எப்போதும் சூக்குமமாய் இருத்தல் வேண்டும். ஏனெனில், வெளிப்படையானவற்றிலும் சூக்குமங்களை அறிதலே மனித மனத்தின் இயல்பு. ஆகவே, கவிதையின் சூக்குமமே வாசகனை கவிதையின்பால் இலகுவாக ஈர்த்துக் கொள்ளும். வேதாந்தியின் கைகளுக்கு சிக்காத அத்வைதம் போல் கரு எப்பொழுதும் சூக்குமமாய் இருக்கவேண்டும் என்பேன். அதே நேரம் கவிதை மொழியை தன்  உயிரோட்டத்துக்கேற்ப வளைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

7: நீங்கள் ஒரு புதுக்கவிதை எழுத்தாளர். மரபுக்கவிதைகளை வாசிப்பீர்களா?

ஆம். புதுக்கவிதைகளை எழுதுகின்ற எனது இலக்கிய வாசிப்புக்குள் மரபுக்கவிதைகளையும் அடக்கியிருக்கிறேன். அத்துடன் எனது பல்கலைக்கழக பாடப்பரப்பில் ஒன்றாக மரபுக்கவிதைகளும் அமைந்திருக்கின்றன.

அந்த வகையில் பாரதியின் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, கண்ணதாசனின் இயேசு காவியம், மாங்கனி, ஆட்டனத்தி ஆதிமந்தி, சுரதாவின் சிரிப்பின் நிழல், தேன்மழை, துறைமுகம் போன்றவற்றையும் வாணிதாசன், பாரதிதாசன், பாரதி, சுத்தானந்த பாரதி, அழ.வள்ளியப்பா, அ.குமாரசாமி புலவர், சி.கணேசையர், அப்துல் காதிர் புலவர், மயில்வாகனப் புலவர் போன்றவர்களது மரபுக்கவிதைகளையும் படித்துள்ளேன்.

 

8: மரபுக்கவிதை, புதுக்கவிதை குறித்த உங்கள் நிலைப்பாடு…

தாம் எடுத்துக்கொண்ட கருப்பொருளை வித்துவத்தோடு வெளிப்படுத்த முனைபவை மரபுக்கவிதைகள். கற்றறிந்தவர்களுக்கு மாத்திரமே அவை தமது கதவுகளைத் திறக்கின்றன. உணர்வுகள், சூழல் என்பவற்றுக்கு அப்பால் அவை இலக்கணங்களுக்கு அமையவே எழுதப்படுகின்றன. சாதாரண மக்களுக்கு மரபுக்கவிதைகள் தாழ் திறக்க மறுப்பவையாகவே உள்ளன.

புதுக்கவிதைகள் இவற்றிலிருந்து இறங்கி வந்து “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது…” எனக் கூறுவது போல சாதாரண மக்களுக்கும் தாழ் திறக்கின்றன. அவை மண்ணை, மலையை, மரத்தை, உலகை, உலகின் உயிர்ப்பை, அதன் அவசியத்தை, உலகுக்கும் மனிதனுக்கும் இடையிலான பிணைப்பை, அப்பிணைப்பு தொங்கிக்கொண்டிருக்கும் இழையை இவ்வாறு யதார்த்தத்தை காட்டுகின்றன. அவற்றை சாதாரண மொழிவழக்கில் கூறுவதே புதுக்கவிதையின் சிறப்பாகும்.

 

9: உங்கள் கவிதைகளின் பிரதான பேசுபொருள் எது?

எனது கவிதைகளில் பல்வேறு பொருண்மைகளை காணமுடியும். அவற்றுள்ளும் அதிக கவிதைகள் பெண்ணியம் சார்ந்ததாகவும், எம் இனத்தின் வலிகளை சொல்வதாகவும் இருக்கின்றன. எனக்கான சூழல் இப்பொருண்மைகளையே அதிகம் தந்தமையால் நான் அவற்றை அதிகம் கையாண்டுள்ளேன்.

 

10: உங்களது முதலாவது கவிதை நினைவிருக்கிறதா?

ஆம் நினைவிருக்கிறது.

அக்கவிதையையே நான் எனது முதலாவது தொகுப்பின் முதலாவது கவிதையாக அமைத்துள்ளேன். எனது வாழ்வில் என் எல்லா வெற்றிகளுக்கும் சொந்தக்காரியாக என் அம்மம்மா திகழ்கிறார். அது போல என் வெற்றி – தோல்விகளில் தோள் கொடுப்பவரும் அவரே. அவ்வகையில் ‘அம்மம்மா ஓர் அத்தியாயம்’ என்பதே எனது முதலாவது கவிதை.

 

11: கவிதைத்துறையில் உங்கள் ஆர்வம் எப்போதிலிருந்து?

ஆரம்பத்தில் கட்டுரைகள் எழுதுவதிலும், விவாதக்களங்களிலுமே கவனம் செலுத்தி வந்தேன். அப்போதெல்லாம் என்னாலும் கவிதை எழுதமுடியும் என்பதை நான் உணரவில்லை. பல்கலைக்கழகம் சென்ற பின் தேவைகளின் பொருட்டு வேறு வழியின்றி, எழுதிய சந்தர்ப்பங்களில் நண்பர்கள் ‘உன்னால் முடியும், எழுது’ என ஊக்குவித்தனர். அப்போதிருந்துதான் நான் எழுதத் தொடங்கினேன்.

 

12: உங்களது வாசிப்பு அனுபவங்கள் எப்படி?

எழுதுவதிலும் வாசிப்பதே எனக்கு பிடித்தமானது. பாடசாலைக் காலத்திலேயே அதிகம் வாசிக்க தொடங்கிவிட்டேன். இருப்பினும், வாசிப்பதற்கான முழுவசதியும் அப்பொழுது எனக்கு கிட்டவில்லை. ஏனெனில், எனது ஊர் ஒரு கிராமம். இங்கு நூலக வசதிகளும் குறைவு. பல்கலைக்கழகம் சென்ற பின் வாசிப்பதற்கான வெளி பரந்து விரிந்திருந்தது. நூலக வசதிகளுடன் நான் தெரிவு செய்த பாடத்தின் காரணமாகவும் இந்த வெளி எனக்கு பரந்து கை கொடுத்தது எனலாம்.

13: உங்களது இரண்டாவது கவிதை நூல் ஈழவாடை பற்றி…

ஈழவாடை அதிகம் மண் சார்ந்த செய்திகளையும், யுத்த வடுக்களையும் கூறுவதுடன், சமூகம் சார்ந்த விடயங்களையும் காதலையும் சேர்த்து பேசியுள்ளது.

 

14: உங்களுக்குப் பிடித்த இலங்கை, இந்திய கவிஞர்கள்…

தமிழக கவிஞர்களில் அப்துல் ரகுமான், வாலி, மீரா, பிச்சமூர்த்தி, மேத்தா, சிற்பி, அறிவுமதி, வைரமுத்து… ஈழத்தில் பிரமிள், சேரன், அகிலன், அஸ்வகோஸ், தீபச்செல்வன், றஷ்மி ஆகியோரின் எழுத்துக்களை நான் அதிகம் விரும்பி படிக்கிறேன்.

 

15: உங்களது அடுத்த வெளியீடு என்ன, எப்போது?

நிச்சயமாக… அதுவும் ஒரு கவிதை தொகுதியாகவே அமையும். அது வெளியாக கொஞ்ச காலம் எடுக்கலாம் என எண்ணுகிறேன்.

 

16: ஈழத்து கவிதைகளின் பிரதான பேசுபொருள் இன்னமும் அனேகமாக யுத்தம் சார்ந்ததாகவும் அதன் வடுக்கள் தொடர்பாகவுமே உள்ளது. இதை வரவேற்கிறீர்களா அல்லது இது மாறவேண்டும் என நினைக்கிறீர்களா?

இந்த விடயத்தை நான் எப்பொழுதும் வரவேற்பவளாகவே இருப்பேன். ஏனெனில், நம் இனம் எதிர்கொண்ட அவலங்களை அப்படியே எடுத்தெறிந்துவிட்டு நம்மால் வாழ்ந்துவிட முடியாது, வாழவும் கூடாது. நம் வலியை போக்குகின்ற வடிகாலாக நாம் நமது எழுத்துக்களை கையாள்வது ஆரோக்கியமானது. எம் எதிர்கால சந்ததியினர் எம் வரலாற்றை அறியாமல் கடந்து செல்வது கவலைக்குரியது. அவர்கள் எம்மினம் பட்ட வலியை அறிந்து கொள்வதற்கு இன்றைய எழுத்துக்கள் நிச்சயம் கை கொடுக்கும். ஆகவே, அதற்காக ஈழத்து கவிதைகளின் பேசுபொருள் யுத்தம் சார்ந்தும், அதன் வடுக்கள் சார்ந்தும் அமைதல் அவசியம் என்றே எண்ணுகிறேன்.

 

17: உங்களைப் போன்ற இளம் எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு தம்மை ஈழத்தின் மூத்த இலக்கியவாதிகளாக, கவிஞர்களாக அடையாளப் படுத்திக்கொள்வோர் என்ன மாதிரியான வரவேற்பை அல்லது வழிகாட்டலை கொடுக்கிறார்கள்?

என்னைப் பொறுத்தவரை, இளம் எழுத்தாளர்களுக்கு மூத்த எழுத்தாளர்கள் பல களங்களை உருவாக்கிக் கொடுக்கின்றனர்.  சிலர் இங்கு விதிவிலக்காக உள்ளபோதும், பெரும்பாலான மூத்த எழுத்தாளர்கள் எம்மைப் போன்றோரை குழுமங்கள் மூலம் ஒன்றிணைப்பதிலும், களங்களை ஏற்படுத்திக் கொடுப்பதிலும், வளர்கின்றபோது தட்டிக் கொடுப்பதிலும் சிறப்பாக பங்காற்றுகின்றனர் எனலாம்.

18: ஈழத்து எழுத்துலகில் பெண்களின் பங்களிப்பு எந்தளவில் உள்ளது? பெண் எழுத்தாளர்களுக்கான வரவேற்பும் அவர்களுக்கான களமும்…

ஒட்டுமொத்தமாக நோக்குகின்றபோது தற்காலத்தில் பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பதை உணர்ந்து கொள்ளமுடிகிறது. சமூகத்தில் பெண் எழுத்துக்களுக்கான வரவேற்பும் ரசனையும் கூட அதிகமுண்டு. பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், பலதரப்பட்ட மேடைகள் பெண் எழுத்துக்களை காவிச்செல்ல தயாராக இருக்கின்றன. பெண் எழுத்தாளர்கள் செய்ய வேண்டியது, அவர்களுக்கான சரியான களத்தை கண்டறிவதே.

 

19: எவ்வளவோ எழுதினாலும் நூல்களாக வெளியிடுவதில் உள்ள சிரமங்களாக நீங்கள் எதிர்கொண்டவை?

பல சிரமங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. போதிய நிதி வசதியில்லை. பல கவிஞர்கள் இன்னும் உதிரிகளாகவே எழுதி வருகின்றனர். அத்துடன் அட்டைப்படம் முதல் அச்சுக்கோர்த்து புத்தகமாக வீட்டுக்கு கொண்டுவருவது வரை பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இவற்றை விட நாம் ஒன்றை செய்யும்போது ‘இது உனக்கு தேவையா’ என்ற கேள்வியோடு முட்டுக்கட்டை போடுவதற்கென்றே எப்பொழுதும் ஒரு கூட்டம் இருக்கும். அதை தாண்டி வரவேண்டிய நிலையும் இன்று பல கவிஞர்களுக்கு உண்டு.

 

20: வெளியிடுகிற நூல்களை வாங்கி வாசிக்கும் வாசகர்கள் இலங்கை தமிழ் சமூகத்தில் மிகக் குறைவாக உள்ளனரே…

ஆம். தற்காலத்தில் இலங்கை தமிழ் சமூகத்தில் வாசிப்பு பழக்கம் குறைந்து வருவதனை அவதானிக்க முடிகிறது. மூத்தவர்கள் இன்றும் வாசிப்பில் அதிகம் ஈடுபடுகின்றனர். ஆனால், இளையவர்கள் மத்தியில் இது குறைந்து வருகிறது. இதற்கு இப்பொழுது அனைவரின் கைகளிலும் இருக்கக்கூடிய தொலைப்பேசி, இரவுப் பொழுதுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்ற தொலைக்காட்சித் தொடர்கள் என்பன குறிப்பிடத்தக்க காரணங்களாகின்றன. பாடசாலை மாணவர்களை பொறுத்தவரை, அவர்களுக்கு கற்றல் சுமை அதிகம். இதுவும் அவர்களை வாசிப்பில் சலிப்பை ஏற்படுத்துகிறது என எண்ணுகிறேன்.

 

21: இலங்கை எழுத்தாளர்களின் நூல்களுக்கு   பெரியளவில் வரவேற்பு கிடைப்பதாக தெரியவில்லையே. இதற்கான காரணம் படைப்புகள் தரமானதாக இல்லையா அல்லது வாசகர்களின் தெளிவின்மை மற்றும் அலட்சியப்போக்கா?

தரமான படைப்புக்கள் இல்லை என்று சொல்லிவிட முடியாது. வாசகர்கள் மத்தியில் தமிழக எழுத்தாளர்களே சிறப்பாக எழுதுகின்றனர் என்கின்ற ஒரு சிந்தனை இருக்கிறது. இங்கு தமிழக எழுத்தாளர்கள் சிறப்பாக எழுதுகின்றனர் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், ஈழத்து எழுத்தாளர்களும் தரமான படைப்புக்களை வெளிக்கொண்டுவருகின்றனர். இருந்தபோதிலும் ஏற்கனவே ஈழத்து வாசகர்களிடத்தில் இருக்கின்ற எண்ண அலை அதனை ஏற்றுக் கொள்வதில்லை என்றே எண்ணுகிறேன்.

22: உங்கள் கவிதைகள் ஈழத்து பெண்களின் இன்றைய வாழ்வியல் குறித்து அப்பட்டமானதாகவும் யாரையும் சமரசம் செய்யாத எழுத்துக்களாகவும் உள்ளதை அவதானிக்கிறேன். அது எப்படி சாத்தியப்படுகிறது?

நான் ஒரு தன்னிச்சையாக செயற்படும் எழுத்தாளர். ஆகவே நான் என் எழுத்துக்களில் யாரையும் சமரசம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். வஞ்சிக்கப்பட்ட என் சமூகத்தை பிரதிபலிப்பதே என் கடமை. அதை சரிவரச் செய்வதற்கு நான் முயற்சிக்கிறேன். இங்கு நான் எனது குடும்பத்தினருக்கும், என் சார்ந்தவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். ஏனெனில், என் எழுத்தின் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என அவர்கள் எப்போதும் என்னை தூண்டியதில்லை. இதுவும் நான் பல விடயங்களை வெளிப்படையாக பேசுவதற்கு காரணமாகிறது எனலாம்.

 

23: சமூக வலைத்தளங்களில் எழுதுவது குறித்த உங்கள் பார்வை…

சமூக வலைத்தளங்களில் எழுதுவது ஆரோக்கியமானதே. ஏனெனில், இன்றும் பல கவிஞர்கள் தமக்கான களத்தை அடைய முடியாதவர்களாகவும், வெளியீடுகளுக்கான வசதிகள், வழிப்படுத்தல்கள் கிட்டாதவர்களாகவும் காணப்படுகின்றனர். எனவே, அவ்வாறான கவிஞர்களை சமூகத்துக்கு அடையாளப்படுத்தவும், அவர்களை ஊக்குவிக்கவும் வலைத்தளங்கள் உதவுகின்றன என கருதுகிறேன்.

 

24: இன்று பலர் தன்னை பிரபலப்படுத்திக்கொள்வதற்கான ஓர் உத்தியாக மட்டுமே எழுத்தை பயன்படுத்துவதை அவதானிக்கிறோம். அவர்கள் ஒன்றிரண்டு ஆக்கங்களோடு தமக்கான அங்கீகாரம் கிடைத்துவிடவேண்டும் என நினைக்கிறார்கள். இது எழுத்துத்துறைக்கு ஆரோக்கியமற்ற செயல் அல்லவா! அது குறித்து…

ஆம். எழுத்து என்பது எம் சமூகத்துக்காக கொடுக்கப்படுகின்ற ஒரு குரலாகவே உள்ளது. அவ்வாறிருக்கையில், அதனை விட்டுவிடுவது எம் சமூகத்துக்கு நாம் செய்கின்ற துரோகமாகவே இருக்கும். ஆகவே, எழுதுபவர்கள் தமக்காக, தம் புகழுக்காக எழுதிவிட்டு காணாமல் போவதை விடுத்து, தம் சமூகத்தின் குரலாக தொடர்ந்து ஒலிக்கவேண்டும் என்பதே என் எண்ணம்.

 

25: பல்கலைக்கழக சூழலில் இன்று கவிதைகளுக்கு ஈழத்து படைப்புகளுக்கு எவ்வாறான வரவேற்புகள் இருக்கின்றன?

பல்கலைக்கழக சூழலை பொறுத்தவரை, இளம் எழுத்தாளர்களுக்கு அதிலும் ஈழத்து எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கின்றது. சில துறை சார்ந்தவர்கள் கவிதைகளை தொகுதியாக்கி வெளியிடுவதில் கூட தம் துறைசார் கவிஞர்களுக்கு கைகொடுப்பதனை காணமுடிகிறது.

-ப. கனகேஸ்வரன்(கேஜி)

You must be logged in to post a comment Login