General

வாய்விட்டுப் பேசுங்கள் மனதார பாராட்டுங்கள்!

By  | 

இன்றைய காலகட்டத்தில் நாம் எல்லோரும் நல்ல வார்த்தைகளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறோம் என்றால் நம்புவீர்களா?
நீங்கள் எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும் கூட, பிறரிடம் இருந்து வரும் ஒரு சிறிய பாராட்டுகூட உங்களை ஒரு நொடியாவது சிறு ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?
பிறந்த குழந்தை வளர்வது சுவாசத்தாலும் உணவினாலும் மட்டும் தானா? இல்லவேயில்லை. அவை தாயின் ஸ்பரிசம் தரும் வெப்பத்தினாலும் தான் வளர்கிறது என்பது உளவியலாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு வெளியிட்ட செய்தி. உணவை விட ஆதரவும் பாராட்டும் தான் பிள்ளைகளை வளர்க்கிறது.
தாயிடமிருந்து தனிமைப்படும் விலங்குகளின் குட்டிகள், தாயின் தொடுதல் இல்லாததனால் குறைந்த ஆயுளுடன் இறந்துபோகின்றன.
பேச்சுத்திறன் வளரும் வரை, வார்த்தைகள் எமக்கு தருகின்ற நம்பிக்கையும் பாராட்டுக்களும் தொடுதல் மூலமாகவே நிகழ்கிறது. வளர்ந்த பின்னர், வார்த்தைகள் அவற்றை செய்துவிடுகின்றன. ஆனால், எவ்வளவு வளர்ந்தும் ஆயிரம் வார்த்தைகள் தரும் கூட்டுசக்தியை ஒரு தொடுதல் தந்துவிடும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.


தொடுதலுடன் இசைந்து வெளிவருகின்ற வார்தைகள் விருப்பத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
விரல் பிடித்து அழைத்துச் செல்லும் தந்தை பாதி ஆசிரியர் ஆகிறார். மடியில் போட்டு முதுகை நீவிக்கொடுக்கும் தாய் பாதுகாப்பு உணர்வை கொடுக்கிறாள். கை போட்டு ரகசியம் சொல்லும் சகோதரன் உலகை காண்பிக்கிறான். கதை சொல்லித்தரும் பாட்டி கற்பனை உணர்வை வளர்த்துவிடுகிறாள்.
தோள் கொடுக்கும் நண்பன் நம்பிக்கையை தருகிறான். கரம் பிடிக்கும் மனைவி ஆசையை தெளிக்கிறாள். முதுகில் ஏறும் பிள்ளைகள் பொறுப்பை உணர்த்திவிடுகின்றனர்.
இப்படியாக எம் வாழ்க்கையின் ஒவ்வொரு படிகளும் உடல்மொழி சொல்லாததை வாய்மொழி சொல்வது கடினம் என்பதை உணர்த்திவிடுகின்றன.
நாம் வளர்கையில் தொடுமொழி குறைந்து வாய்மொழியின் ஆதிக்கம் பெருகி வார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றுவிட்டன. வார்த்தைகள் மூலமாகவே பெரும்பாலான செய்திகள் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு போக்குவரத்து செய்கின்றன.
இவ்வியந்திரமயமான உலகில், இன்று உறவுகளும் இயந்திரமயமாகிவிட்டன. தேவைகள் கருதி மாத்திரமே வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.
முன்னோர் காலத்தில் குடும்பத்தினர்கள் எல்லாம் சேர்ந்து வீட்டு வாசலில் பேசிக்கொள்வது வழமை. இப்போது எல்லாம் வீட்டின் முற்றத்தில் வாசலை காண்பதே அரிதாக உள்ளது. எச்சில் துப்பகூட மண்ணை தேடும் காலமாக மாறிவிட்டது.
இதனால் பிரச்சினை என்றால் பேசுகிறோம்… காரியம் என்றால் பேசுகிறோம்… அன்புக்கும் நட்புக்கும் பேசுபவர்கள் எத்தனை பேர்?
கூடிப்பேசத்தான் முடியவில்லை. தொலைப்பேசி ஊடாக பேசுவதும் கூட அரிதான ஒன்றாகத்தான் இருக்கிறது. இதற்கிடையில், மனதார பாராட்டுதல் என்பதை யோசித்துக்கூட பார்க்க தேவையில்லை.
ஒருவர் பாராட்டினாலே ‘இவர் எதற்காக பாராட்டுகிறார்? இவருக்கு என்ன வேண்டும்?” என்றெல்லாம் சந்தேகம் ஒருபக்கம்.
எதையும் எதிர்பாராமல் ஒருவருக்கு உதவியோ அல்லது மனதார பாராட்டுவதோ ஒரு தனிமனிதனின் மனவளத்தையும் ஆளுமையையும் காட்டுகிறது. அதுவொரு பரிணாம வளர்ச்சி என்றுகூட சொல்லலாம். அதினால் தான் பலருக்கு மனதார பாராட்டும் மனவிசாலம் காணப்படுவதில்லை.
இருந்தும், நாம் அனைவரம் பிறரின் பாராட்டுக்காக ஏங்குகிறோம்.
எங்கிருந்து பாராட்டு வரும்? நாம் கொடுத்தால் தானே நமக்கு வரும்?
சமூக வலைத்தளங்களில் பல புத்தாக்கங்கள் தொடர்பான செய்திகளை பார்க்கிறோம். சாதாரணமாக அச்செய்திகளை எல்லாம் ஒரு காட்சிப்பொருளாக பார்த்துவிட்டு கடந்துபோகிறோம். ஒரு காலத்தில் நாம் ஏதும் செய்தியை போட்டுவிட்டு, அதற்கான பாராட்டுகளுக்கு ஏங்குகிறோம். சமூகத்தையும் கடிந்துகொள்கிறோம்.
நல்ல சாப்பாடு என்றால் வார்த்தை எதுவும் பேசாமல் மிச்சம் வைக்காமல் சாப்பிடுகிறோம். அவர்களில் யாரும் சமைப்பவரை பாராட்டுகின்றனரா என்றால் அதுவும் எள்ளளவுதான். மாறாக, சாப்பாட்டில் உப்பு கொஞ்சம் அதிகமானால், சாப்பிட்டு முடித்த கையோடு சமையல் செய்தவரையும் சேர்த்து கழுவிவிட்டு செல்கிறோம்.
ஒரு நாளில் நாம் எத்தனை பாராட்டுகளை வாங்குகிறோமோ, அவ்வளவு நல்ல சேவை செய்கிறோம் என்று பொருள்படும். அதனையே திருப்பிப் போட்டுப் பாருங்கள்.
ஒரு நாளில் எத்தனை பேரை பாராட்டுகிறீர்களோ, அவ்வளவு உன்னதமான வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என பொருள்படுகிறது.
நம் வாழ்க்கையை மெலிதாக தொட்டுச் செல்லும் மனிதர்கள் செய்யும் சிறிய சிறிய காரியங்களை பாராட்டுங்கள். அவர்களின் அந்நாள் சிறப்பாக இருக்கும். உங்களுடன் வாழும் உறவுகளின் திறமைகளையும், நல்ல பண்புகளையும் பாராட்டுங்கள். அது அவர்களின் வாழ்க்கையையே பிரகாசிக்கச் செய்யும்.
வீட்டுக்குள் தேவைக்கு அதிகமான பாராட்டுக்கள் அவசியம்தானா என்று வீணாக வாதாடுவார்கள்.
பாராட்டுக்கள் அதிகமானால் பாதகமில்லை. குறைவதானால் தான் பாதகம்.
முடியாதவரிடம் முடியும் என சொல்லி சற்று அதிகமாக பாராட்டினால் தவறில்லை. ஆனால், முடியும் என்பவரையும் பாராட்டாமல் விடும்போது பலர் தங்கள் திறமைகள் மேல் நம்பிக்கை வைக்க தவறுகின்றார்கள்.
பெரும் குடும்பத்தில் வாழும் சூழலில் பெரிய பாராட்டுக்கள் அவசியப்படுவதில்லை. அடிக்கடி ஒருவரால் கூட பாராட்டு வந்த வண்ணமே இருக்கும். அந்த சூழல் இப்போது எங்கே உள்ளது? இப்போதைய குடும்பங்கள் எல்லாம் அதிகபட்சம் ஐந்து பேருடன் மட்டுப்படுத்தப்பட்டது. ஒருவரை பாராட்ட வேண்டும் என தோன்றிவிட்டால், அவரிடம் பாராட்டக்கூடிய பண்புகளை தேட ஆரம்பிப்பீர்கள். அது நல்ல உறவுச்சங்கிலிக்கான விதைகளை தூவுகின்றன.
ஒருவரை பாராட்ட நினைத்தும் பிறகு செய்யலாம் என ஒத்திப்போடுபவர்கள் பலர் இருப்பார்கள். ஒருவரை பாராட்ட நினைத்தால் அந்த கணமே செய்துவிடுங்கள். உறவுகளில் விமர்சனங்களையும் குறை சொல்வதையும் தள்ளிப்போடுங்கள்.
பாராட்டு என்பது ஒரு வியாபாரத்தின் மூலதனம் போன்றது. அது பன்மடங்கு பெருகி உங்களிடமே ஒருநாள் திரும்பி வந்து சேரும் என்பது உறுதி.

ஏ.எல். இம்தாத் அஹமட்,
சாய்ந்தமருது.

You must be logged in to post a comment Login