Women Achievers

‘பாடகி’ என்ற அந்தஸ்து ஆசிர்வாதமே!

By  | 

– இளம் பாடகி ‘Ray’ ஷலோமி

1: வணக்கம் ஷலோமி! உங்களைப் பற்றிய சுய அறிமுகத்தோடு நேர்காணலை ஆரம்பிக்கலாமே…
அறிமுகப்படுத்த வேண்டுமென்றால், பெரிதாக ஒன்றுமில்லை. நான் ஷலோமி. இப்படி சொல்வதை விட  ‘ரே (Ray)| என்று சொன்னால் தான் அனேகருக்குத் தெரியும். Passion, Profession என இரு வேறு துறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன்.

2: சலோமி ஒரு பாடகி… இந்த அடையாளத்தை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
அது ஓர் ஆசிர்வாதம். ‘பாடக்கூடியவர்’ என்பதற்கும் ‘பாடகி’ என்பதற்கும் இடையே ஓர் அழகிய நீண்ட பாதை. அதில் கூட நடந்தவர்கள் சிலர், தடுத்தவர்கள் பலர். அவற்றையெல்லாம் கடந்து ~பாடகி| என்ற அந்தஸ்து ஆசிர்வாதம் என்றுதானே கூறவேண்டும்.

3: சலோமியை ஒரு பாடகியாக அடையாளம் கண்டது யார்? எப்போது?
யார் என்ற கேள்விக்கு விடையாக நால்வரை குறிப்பிடவேண்டும். அம்மா, அப்பா, என் ஆசிரியைகள் திருமதி நிர்மலா அவர்கள் மற்றும் திருமதி சுதர்ஷனி அவர்கள்.

எப்போது என்றால், அனேக சம்பவங்கள் உண்டு. அதில் முதல் சம்பவம் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், நான் பாடுவேன், நான் பாடுவது சரி என எனக்கு தெரியவந்தது அப்போதுதான்.

பாடசாலை கலைவிழாவின்போது தேசிய கீதம் பாட சிறு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. அப்போது மேற்குறிப்பிட்ட நிர்மலா எனும் ஆசிரியை, எனக்கு மேசையில் தாளம் போடும் பழக்கம் இருப்பது தெரிந்ததால் ‘Timing’  அறிவு இருக்கும் என்பதன் அடிப்படையில், “கூட்டமாக தானே பாடப்போகிறாய், பயப்படாமல் பாடிக்காட்டு” என கூறவும், நான் பாடிக்காட்டினேன். அப்படியாகத்தான் ஆரம்பித்தது. அதன் பின் எல்லா விழாக்களிலும் என் தனிப்பாடல் இருந்தது.

4: சமூக வலைத்தளங்களிலும் உங்கள் பாடலுக்கு ரசிகர்கள் அதிகரித்த வண்ணம் இருப்பதை அவதானிக்கிறோம்… எப்படி சாத்தியப்பட்டது?
அதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால், இசை வழியே அனேக அன்பையும் பெரியவர்களின் ஆசியையும் சம்பாதித்துள்ளேன்.

5: முறையாக சங்கீதம் கற்றுள்ளீர்களா?
கற்றதில்லை.

6: எப்போதிலிருந்து உங்களுக்கு பாடக்கூடிய ஆற்றல் உள்ளதை உணர்ந்தீர்கள்?
சிறுவயது முதலே உணரக்கிடைத்தது.

7: இவ்வளவு காலம் முறையாக கற்றுக்கொள்ளாமல், கேள்வி ஞானத்தில் பாடினீர்கள். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் முறையாக சங்கீதம் கற்கவேண்டிய சூழல் இருப்பதை உணர்கிறீர்களா?
சங்கீதம் கற்றல் அவசியமானதுதான். ஆனால், ‘முறையாக’ என்ற வார்த்தை எதனடிப்படையில் முன்வைக்கப்படுகிறது என்று தெரியவில்லை. வகுப்புக்கு சென்று கற்றலை குறித்து நிற்குமாயின், அதை நான் மறுக்கவில்லை. ஆயினும் கற்றுக்கொள்ள வகுப்பு அவசியமல்ல. சரியாக கற்க விருப்பமும் உணர்வும் இருந்தாலே போதுமானது என்பது என் கருத்து.

8: எந்த தென்னிந்திய பாடகரின் பாடல்கள் உங்கள் குரலோடு ஒத்துப்போகிறது உங்களுக்கு?
எனக்கு தனிப்பட்ட முறையில் இப்படி யாருடனும் ஒத்துப்போவதாய் தோன்றியதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை கூறுவார்கள். அனேகர் கூறியது ‘ஸ்ரேயா கோஷல்’ அவர்களை. காரணம், எனக்கு high pitch இலகுவாக பாடலாம் என்பதற்காக.

9: ஏதேனும் இசைக்குழுக்களுடன் இணைந்து பாடியிருக்கிறீர்களா?
ஆம். ஆரம்பத்தில் ஒரு வானொலி அலைவரிசையில் பாடிக்கொண்டிருந்தேன். பின்னாளில் ஓர் இடைவெளிக்குப் பிறகு குழுவாய் இணைந்து செயற்படுவது ‘ரேடியோ பழசு’ எனும் இசைக்குழுவில்.

10: ஏதேனும் அல்பங்களில் பாடிய அனுபவம்?
வாய்ப்புக்கள் வந்தன. ஆயினும், பாடக்கூடிய சாத்தியங்கள் என் தரப்பில் இருக்கவில்லை. இப்போது சில பாடல் வெளியீடுகளுக்கான ஆலோசனைகள் இடம்பெற்று வருகின்றன. உறுதியானதும் அறிவிக்கப்படும்.

11: தனியாக உங்கள் பாடல்களை அல்பம் ஏதேனிலும் வெளியிடும் யோசனை உண்டா?
யோசனையுண்டு. அதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படும்.

12: நம் நாட்டைப் பொறுத்தமட்டில் பாடல்கள் பாடினால் பொழுதுபோக்காக கேட்பார்கள். அதைத் தவிர, இந்த துறையில் வருமானம் வரக்கூடிய அல்லது ஜீவனோபாயத்தை கொண்டு செல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளனவா?
வாய்ப்புக்கள் உண்டு. ஆனாலும், சில காலம் செல்லும். ஏனென்றால், பிறநாட்டுக் கலைப்படைப்பு மீதான நாட்டம் தவறல்ல. யாவும் கலையே. ஆனாலும், நம் நாட்டுப்படைப்பின் தார்ப்பரியம் புரியாதவாறு நாம் மூழ்கிப்போயிருப்பதுதான் வருத்தமளிக்கும் விடயம். அதுவே நம் நாட்டு கலைஞர்கள் கலை வழியே ஜீவனோபாயத்தை கொண்டு நடத்த சவாலாக அமைந்திருக்கிறது. இது சவாலேயன்றி சாத்தியமல்லாத விடயமில்லை. சீக்கிரமே யாவும் மாறும் என நம்புகிறேன்.

13: சொந்தமாக வரிகள் எழுதி, நீங்களாக பாடல் உருவாக்கிய அனுபவம் உள்ளதா? அதற்கு முயற்சி செய்துள்ளீர்களா?
அந்த அனுபவமும் உண்டு. மற்றும் இரு பாடல்களுக்கு வரிகள் எழுதியிருந்தேன். ஒரு பாடல் சில காரணங்களால் வெளிவரவில்லை. மற்றையது, ஜீவானந்தன் ராம் அண்ணா இசையில், சுதர்ஷன் அண்ணா மற்றும் அதிதி பாடி வெளிவந்த ‘தனியாய்’ பாடல்.

மேலும், சில பாடல்கள் எழுதியுள்ளேன். இசையமைப்பாளர்கள் நிறைவு செய்ததும் வெளிவரும்.

14: இலங்கையில் நடைபெறும் வானொலி மற்றும் தொலைக்காட்சி பாடகர் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய அனுபவங்கள் உண்டா?
போட்டி என்றில்லை. வானொலி இசை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறேன்.

15: பாடல் வாய்ப்பு தேடி அலைந்த அனுபவங்கள் உண்டா?
வாய்ப்புக்கள் என்னைத் தேடி வந்தனவேயன்றி நான் தேடிப்போன சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை. ஆனால், அந்த உணர்வும் மிக அழகானது என அறிவேன். காரணம், எனக்கு வந்த நிறைய வாய்ப்புகளை நான் சில காரணங்களால் நிராகரிக்க நேர்ந்தது. அந்த வகையில் வாய்ப்பு தேடிப் பெற்று சாதித்துக் காட்டுவது ஒன்றுதான் ருசி. சிலரிடம் பார்த்திருக்கிறேன். அவர்கள் குறித்து இந்நேரம் பெருமை கொள்கிறேன்.

16: உங்கள் குடும்பத்தினர் நீங்கள் இந்த துறையில் இயங்குவதற்கு எவ்விதம் உறுதுணையாக இருக்கின்றனர் அல்லது எதிர்வினையாக இருக்கின்றனர்?
குடும்பம் எப்போதுமே எனக்கு உறுதுணையாக இருக்கிறது. மாறாக அதற்கு அதிகமாகவே சுற்றுச்சூழல் எதிரான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியது. நான் முன்கூறியது போல, தொழில் புரிகிறேன். அங்கிருந்து அப்படியே குழு பாடற்பயிற்சிக்கு சென்றுவிடுவேன். சில நாட்கள் அதிகாலை 2, 3 மணிக்கு வீட்டுக்கு வந்த நாட்களும் உண்டு. யார் இதைக் குறித்து என்னதான் சொன்னாலும், நான் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் சிரித்த முகத்துடனே கதவை திறக்கும் அம்மாவின் அந்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் எல்லாவற்றுக்கும் மேல், கடவுளின் ஆசிர்வாதத்துக்கும் முன்னால் விமர்சனக்கதைகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

17: உங்களை போன்ற இளையவர்கள் வாய்ப்புகளைத் தேடி அலைந்த காலம் கடந்து, இப்போது திறமைகளை தானாக வெளிக்காட்டும் தளம் அதிகம் காணப்படுகின்றன… அவற்றை சரியாக பயன்படுத்துகிறார்களா?
நீங்கள் கூறியது போல வாய்ப்புகளை  அமைத்துக்கொள்ள நல்ல பல வழிகள் இப்போது உண்டு. சந்தோஷமான விடயம் என்னவென்றால், நான் பார்த்தவரை பலர் இதை சாமர்த்தியமாக கையாளுகிறார்கள். இசை, நடனம், கவிதை என பல… இத்தோடு திரைத்துறையில் ஆர்வமுள்ளவர்களும் அதிகம். அதை வெளிக்கொண்டு வருதல் பாராட்டுக்குரியது. ஏனையோரும் அவ்வண்ணமே திறமைகளை வெளிக்காட்டவேண்டும். அதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் அவர்களுக்கு அமையவேண்டும்.

18: சமூக வலைத்தளங்களில் உங்கள் பாடல்களை பதிவேற்றும்போது பார்வையாளர்களிடம் இருந்து கிடைக்கின்ற பிரதிபலிப்புகள் எவ்வாறு உள்ளன?
மிகவும் அழகான, அன்பான பின்னூட்டல்கள் கிடைக்கின்றன. அவை யாவும், நான் இன்னும் பொறுப்பாக செயற்படவேண்டும் என்ற எண்ணத்தையே எனக்கு கொடுக்கின்றன. யாவருக்கும் இந்நேரம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

19: உங்களிடம் இருக்கும் தனித்துவமான, அதேவேளை ரசிகர்களை அதிகம் கவரக்கூடிய திறமை என்பது ரசிகர்கள் விரும்பி கேட்கும் பாடல்களை பாடி பதிவிடுவது… இதில் இருக்கும் சந்தோஷம், சிரமங்கள்...
இந்த கேள்விக்கு நன்றி!

சொல்லுக்குள் அடக்கி விளக்கம் கொடுக்க முடியாதளவு சந்தோஷம் எனக்குண்டு. ஒருவர் விரும்பிக் கேட்பதை பாடி பதிவிடுவதில் ஒரு திருப்தியுண்டு.

சிரமம் என்று எனக்கிருப்பது, நேரமின்மை. மேலும், சில வேலைகளில் ஈடுபடுவதால் எனக்கு பதிவிடுவதில் ஒரு சிறிய சிரமம் உண்டு. மற்றையது, எனக்கு சில பாடல்கள் மிகவும் பிடிக்கும். அதன் மேல் ஒருவகை மரியாதை உண்டு. அதை எந்தவொரு பின்னணி இசையுமில்லாமல் பாடுவதில் எனக்கு அதிக உடன்பாடில்லை. ‘Karaoke’ல் ஈடுபாடு இல்லாததால் நான் பொதுவாக பதிவேற்றும் பாடல்கள் எந்தவொரு பின்னணி இசையையும் கொண்டிருக்காது. அந்த வரிசையில் யாரேனும் அவ்வகை பாடல்களை கேட்டால் சற்று சிரமத்தை உணர்வதுண்டு. ஆனால், நேரம் போதாமல் தாமதித்தாலும், அதை புரிந்துகொள்கிறார்கள் என்பது அழகு.

20: ஒரு துறை சார்ந்த தொழிலில் ஈடுபட்டுக்கொண்டே தனக்குப் பிடித்த துறையிலும் இயங்குகிறீர்கள். இது வரவேற்கத் தக்க முன்மாதிரியான விடயமாகும். உங்களை போன்ற திறமைசாலிகள், தான் சார்ந்த துறையை மட்டும் நம்பியிருக்காது, பிழைப்புக்கான வழியை தேடிக்கொள்வதும் ஏன் அவசியமாகிறது?
சரியான வழியில் நேர்மையாக உழைப்பது என்பதை தாண்டி, ஒரே தொழில்தான் இருக்க வேண்டுமென்று இல்லை. கலைஞர்கள் வேறு துறைசார் தொழில்களில் ஈடுபடுவது, அவர்களை எந்த வழியிலும் கலைஞர் எனும் அந்தஸ்திலிருந்து இறக்கிவிடாது. மற்றும் நம் நாட்டில் கலைவழியான வருமானத்தில் சில மாற்றங்கள் நிகழும் வரை இது அவசியமான ஒன்றாகவும் இருக்கிறது.

21: உங்கள் பாடும் திறமைக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டாக நீங்கள் நினைப்பது?
சில வருடங்களுக்கு முன் ஒருவர் மூலமாக S. P பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள் பாராட்டியதாக தகவல் வந்தடைந்தது. அது இன்றுவரை பெரிதான ஒன்று.

22: அல்பம் அல்லது மேடை நிகழ்ச்சிகளில் பாட ஆர்வமாக இருக்கிறீர்களா? கொழும்பு தவிர்ந்த வெளி மாவட்டங்களுக்கு பயணம் செய்து பாடும் வாய்ப்பு கிடைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
மேடை நிகழ்ச்சிகளிலும் பாடியதுண்டு. வெளி மாவட்டங்களிலும் பாடியதுண்டு.

23: ஒரு பாடகியாக உங்களிடம் உங்களுக்கு பிடித்த விடயம். ஒரு ரசிகையாக உங்கள் பாடல்களில் பிடிக்காத அல்லது மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைக்கும் விடயம்?
பிடித்த விடயம், பாடலை கட்டுக்குள் அடக்காமல் அதே இசையில், அதே வரிகளை வித்தியாசமாக பாடுவது.

வளர்த்துக்கொள்ள விரும்புவதில் ஒன்று, நான் பாடல் அதிகமாக கேட்பதில்லை. அது என்னால் என் மீதான ஒரு குற்றச்சாட்டு. மற்றும் பல பயிற்சிகள் செய்து இன்னுமே கற்றுக்கொள்ள வேண்டும்.

24: உங்களது எதிர்கால லட்சியம்?
இசைவழியே இருக்கும் ஒரு லட்சியம் என்றால், கலைத்துறையில் பேசப்படும் நாடாக இலங்கை மாறுமிடத்து, அதன் காரணங்களில் என் பங்களிப்பும் இருக்கவேண்டும்.

25: உங்களைப் போன்ற சக இளம் திறமைசாலிகள் குறிப்பாக களம் கிடைக்காமல், வாய்ப்பு கிடைக்காமல் இலைமறை காயாக இருப்போருக்கு சக நண்பியாக உங்களது ஆலோசனைகள் என்னவாக இருக்கும்?
திறமை என்பது மறைத்து வைப்பதற்காக கொடுக்கப்பட்ட ஒன்றல்ல. தயவுசெய்து வெளிக்கொண்டு வாருங்கள். வாய்ப்புக்கள் கிடைக்க வழியமைத்துக்கொள்ள வேண்டியது  நம்முடைய பொறுப்பு. நம் கடமையை நாம் சரிவர செய்தால் பலன் எப்படியும் வந்து சேரும்.

26: இதுவரை நீங்கள் பாடல் போட்டிகளில் பங்கேற்றுள்ளீர்களா? என்னென்ன போட்டிகளில் பங்கேற்றுள்ளீர்கள்? அதன் அனுபவம், பெறுபேறுகள் பற்றியும் கூறுங்கள்…
பங்கேற்ற போட்டிகள் என்று பார்த்தால், இலங்கை பாடசாலைகள் மத்தியில் நடந்த ‘Voice of Ramadian’ என்ற போட்டி மட்டுமே. அது செய்தி வாசிப்பு, நிகழ்ச்சித் தொகுப்பு, கவிதை என ஒவ்வொரு சுற்றுப் போட்டியாக சென்று, பின் இசைச்சுற்று, கர்நாடக இசை, மேலைத்தேய இசை என பல பிரிவுகளின் சுற்றுக்களை கொண்ட ஒரு போட்டி.

அதில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொள்ள கிடைத்தது.

பின் பங்கேற்க கிடைத்த யாவுமே நிகழ்வுகளாகவே கிடைக்கப்பெற்றன. அது மிகவும் அரிது என்பதால் தழுவிக்கொண்டு இன்று வரையிலும் நிகழ்ச்சிகள் செய்துகொண்டிருக்கிறேன்.

நன்றி!

-ப. கனகேஸ்வரன்(கேஜி)

You must be logged in to post a comment Login