Love

By  | 

கேள்வி:
என் வயது 23. பிஎச்.டி., படிக்கிறேன். Msc படிக்கும்போதிருந்தே ஒருவரை விரும்புகிறேன். அவரும் என் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளார். அவரும் நானும் வேறு வேறு ஜாதி. அவர் எட்டாம் வகுப்பு வரையே படித்துள்ளார். கேபிள் டிவி உரிமையாளராகவும் மரக்கடையும் வைத்துள்ளார்.

அவரை மணந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். அவரது வீட்டில் எங்கள் திருமணத்துக்கு அனைவரும் ஒப்புதல் தந்துள்ளனர். ஆனால், என் வீட்டில் அப்பா, அம்மா இருவரும் “அவனை மணப்பதற்கு பதிலாக செத்துவிடு…” என்கின்றனர். எனக்கு என் பெற்றோரும் வேண்டும், அவரும் முக்கியம். காதலிப்பது வாழத்தானே! ஏன் இப்படி எதிர்க்கின்றனர்?

வேறு எவரையும் கணவராக ஏற்றுக்கொள்ள என் மனம் இடம் தரவில்லை. அவரையே நினைத்து, வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அவர் தரும் குங்குமத்தையே நெற்றியில் இட்டுக்கொள்கிறேன். அவரை மறக்க சொல்லி வற்புறுத்துவதுடன், “தற்கொலை செய்து கொள்வோம்…” என பெற்றோர் மிரட்டுகின்றனர். என் தந்தையிடம், அவர் பல முறை பேசியும் பயன் இல்லை. ஃபோனில் கூட யாருடனும் பேசக்கூடாது… வெளியே செல்லக்கூடாது என்று என்னை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர். இரண்டு வருடங்களாக, இந்த துன்பம் தொடர்கிறது.

அவருக்கு போதிய வருமானம் உள்ளது. “இன்னும் ஒரு வருடம் காத்திருப்போம். அதன் பின் முடிவு எடுப்போம்…” என்று கூறியுள்ளார். பெற்றோரை மீற எண்ணமில்லை. நான் என்ன செய்யவேண்டும்?

அவருடன் தனியே இருந்த சந்தர்ப்பங்களில் கட்டுப்பாடாகவே இருந்துள்ளார். என் மீது அவரது சுண்டுவிரல் கூட பட்டதில்லை.

எனக்கொரு நல்ல ஆலோசனை கூறுங்கள். நான் செய்வதறியாது தவிக்கிறேன். பல பேருக்கு வழிகாட்டும் தாங்கள், எனக்கும் ஒரு வழி சொல்லுங்கள். மனக் குழப்பத்தில் இருக்கும் இருக்கிறேன் நான்…

பதில்:
ஒரு குறிப்பிட்ட துறையில் ஆராய்ச்சி படிப்பு முடித்து, முனைவர் பட்டம் பெறுவதுதான் ஒரு பல்கலைக்கழகத்தின் அதிக பட்ச படிப்பு.

அந்த முனைவர் பட்டம் பெற முயலும் நீ, “எல்லாம் எனக்கு தெரியும்” என்று நினைக்காமல், பிரச்சினையை மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்து, நல்ல முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்த, உன் எண்ணத்தை பாராட்டுகிறேன்.

“அவரை மணந்தால், மகிழ்ச்சியாக இருப்பேன். அவரது வீட்டில் அனைவரும் ஒப்புதல் தந்துள்ளனர். தேவைக்கு அதிகமாகவே வருமானம் உள்ளது. அவர் மிகமிக நல்லவர். பலமுறை தனியே இருந்தும், எந்த தவறான எண்ணமும் அவருக்கு வந்தது இல்லை…” என்று அவரை பற்றி, கடிதம் முழுவதும் பெருமையாக எழுதியிருக்கிறாய்.

நன்கு படித்து, முனைவர் பட்டம் பெற முயற்சி செய்யும் 23 வயது இளம்பெண், முத்து முத்தான கையெழுத்துக்கு சொந்தமான, பெற்றோருக்கு பணிந்து நடக்கும் புத்திசாலியான பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்?

“அவனை மணப்பதற்கு பதில் செத்துவிடு…” என்று உன் பெற்றோர் ஏன் சொல்கின்றனர் என்று ஒரு நிமிடம் யோசனை செய்து பார்… படிப்போ எட்டாம் வகுப்பு. வேறு ஜாதி. சொந்த தொழில்… ஒரு காலம் லாபமும் வரும், நஷ்டமும் வரலாம். இதனால்தான் உன் பார்வையில், ஹீரோவாக தெரியும் உன்னவர், உன் பெற்றோர் பார்வையில், உனக்கு பொருத்தமற்றவராக தெரிகிறார். உன் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்பதில் அவர்களுக்கும் ஆசை இருக்குமல்லவா?

“அவரை கணவராக ஏற்று, இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அவர் தரும் குங்குமத்தையே தினமும் வைத்துக்கொள்கிறேன்…” என்கிறாயே… இச்செயல், உன் பெற்றோருக்கு அவமானத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தாதா? இதனால் கூட, அவர்களும் உணர்ச்சிவசப்பட்டு, உன்னை எப்படியும், அவரிடம் இருந்து பிரித்து விடவேண்டும் என்று நினைத்து துன்பப்படுத்தலாம் அல்லவா?

நீ என்னதான், உன்னவரைப் பற்றி, இப்போது பொசிட்டிவ்வாக பேசினாலும், திருமணத்துக்கு பின், உன் வாழ்க்கை, நீ எதிர்பார்த்த மாதிரியே இருக்கும் என்பது என்ன நிச்சயம்? இந்த பயம், உன் பெற்றோருக்கும் ஏற்பட்டு, உன்னை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயலலாம் அல்லவா?

அவர்கள், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் முறை, கடுமையாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு உன் மேல் உள்ள அன்பினால் ஏற்படும் பயத்தை, தவறு என்று சொல்ல முடியாதல்லவா?

அவர்கள் உன்னைப் போல அதிகம் படிக்காதவர்கள். வாழ்ந்த சூழ்நிலை, வாழ்க்கை அனுபவம் வேறு. அவர்களின் மனநிலையை, பட்டப்படிப்பு படித்த நீதான் புரிந்து, நடந்து கொள்ளவேண்டும்.

“ஒரு வருடம் காத்திருப்போம். இல்லை எனில், நாமே முடிவெடுப்போம்…” என்று உன்னவர் கூறுவதாக எழுதியிருக்கிறாய். நீங்களாக முடிவெடுப்பது என்பது உங்களுக்கு சாதகமாகத்தானே இருக்கும். அவ்வாறு எடுத்த முடிவினால், திருமணமான பின், ஏதோ ஒரு காரணத்தால் சண்டை, சச்சரவுகள் போன்ற விளைவுகள் ஏற்பட்டால், நீ யாரிடம் சென்று உதவி பெறுவாய்?

“காதல் என்பது அமிலம் கலந்த அமிர்தம்” என்றார் ஒரு தத்துவஞானி. உன் காதலரை அடைய, உன் பெற்றோரிடம் எப்படி பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும் என நன்றாக யோசித்து திட்டமிடு.

மிகக் குறைவான காலத்தில் பழகிய உன்னவரை, இவ்வளவு புரிந்து வைத்திருக்கும் நீ, 23 ஆண்டுகள் உன்னுடன் இருக்கும், பெற்றோரை புரிந்துகொள்ள முடியாதா?

எனவே, சிறிது காலம் இடைவெளி விட்டு, அமைதியாக, உன் நியாயமான கோரிக்கைகளை, உணர்ச்சிகளுக்கு இடம் தராமல் சிந்தித்து, பெற்றோரிடம் பேசி முடிவெடு.

“காதலிப்பது வாழத்தானே!” என்று கேட்டிருக்கிறாய். ஆம் மகளே… காதலிப்பது, மற்றவர்களை துன்புறுத்தாமல் வாழ்வதற்குத் தான்!

உன் வாழ்வு, உன் எண்ணம் போல அமைய வாழ்த்துகள்!

You must be logged in to post a comment Login