கொரோனா

கொரோவுக்கு பின்னரும் கவனம் தேவை!

By  | 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீள்பவர்கள், நோயிலிருந்து மீண்ட பிறகு நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்வியலுக்கான வழிமுறைகளை பின் தொடரும் அதே நேரத்தில், நோயின் தொடர்ச்சியாக பின்வரும் மாதங்களில் ஏற்படவிருக்கும் உடல்சார்ந்த பக்கவிளைவுகளை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டுமென நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் நடத்திய சமீபத்திய ஆய்வில், நோய் குணமாகிய பின், சில மாதங்கள் கழித்து நோய் சார்ந்த மற்றும் புதிதாக சில அறிகுறிகள் தெரியவந்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அதில் மூச்சுத்திணறல், உடல் சோர்வு, தசை பிடிப்பு, இருமல், இதய துடிப்பு சீரற்று இருப்பது, மன அழுத்தம், சிறுநீரக பிரச்சினை போன்றவைகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

நோயிலிருந்து குணமாகி ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்குப் பின் மிக அதிகமாக முடி உதிர்வு ஏற்படுவது, இதய அழற்சி, நெஞ்சு வலி, வயிற்றுப்போக்கு, அதிகமாக மறதி ஏற்படுவது, சுவை அறிய முடியாமல் திணறுவது, வாசனை தெரியாமல் அவதிப்படுவது போன்றவற்றில் சில அதிகம் பேருக்கு ஏற்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இப்படி கொரோனாவிலிருந்து மீண்டபிறகும் தொடர் பாதிப்புகளால் அவதிப்படுபவர்களை நீண்ட கால பாதிப்பாளர்கள் என மருத்துவர்கள் குறிப்பிடுவதோடு, இவ்வகை பாதிப்பை, நீண்ட கொரோனா பாதிப்பு (லோங் கோவிட்) என்கிறார்கள். நோய் குணமான பிறகும் ஏற்படும் பாதிப்புகளில், இதற்கு முன் சார்ஸ், பன்றிக்காய்ச்சல், எபோலா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருந்தன. இந்த கொரோனா நீண்ட கால பாதிப்பாளர்களுக்கு, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பாதிப்புகள் ஏற்படாது என்றாலும், இவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வை முன்னெடுப்பது, மிகவும் சவாலாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஆபத்தை தவிர்க்க, கொரோனாவிலிருந்து மீளும் நபர்கள், வரும் வருடங்களில் எந்தவொரு அறிகுறியையும் உதாசீனப்படுத்தாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். முடிந்தவரை சத்தான உணவு- மது, புகை இல்லாமல், தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு  ஆரோக்கியமான வாழ்வியலை மேற்கொள்ளுமாறும் இவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. இந்த பெருந்தொற்று, நோயின் போதும், நோய்த் தாக்கம் குறைந்த பின்னரும் ஏற்படுத்தும் மிக முக்கியமான பாதிப்பு ‘மன அழுத்தம்’தான் என சொல்லும் ஆய்வாளர்கள், நீண்ட கொரோனா பாதிப்பு இருப்பவர்களுக்கு மன நலன் சார்ந்த பிரச்சினை அதிகம் ஏற்படலாம் என கணிக்கின்றனர்.

ஆகவே அவர்கள் தங்கள் மனநலனில் கூடுதல் அக்கறை காட்ட அறிவுறுத்துகின்றனர். அரசும், தங்கள் மக்களின் உடல்நலனுக்கு மேற்கொள்ளும் முயற்சிகளை போலவே, மனநலன் மேம்பாட்டுக்கும் முன்னெடுப்புகள் எடுக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர். நீண்ட கால கொரோனா பாதிப்பில், குழந்தைகள் அதிகப்படியாக பாதிக்கப்படுவதாக, சமீபத்திய சில ஆய்வுகள் சொல்கிறது. பிரிட்டனில் கடந்த ஆண்டு செய்யப்பட்ட ஆய்வொன்றில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த 500 குழந்தைகளின் உடல்நலன் கண்காணிக்கப்பட்டது.

சிகிச்சையிலிருந்து வீடு திரும்பிய அவர்கள், தற்போது சமீபத்தில் மீண்டும் பரிசோதிக்கப்பட்டபோது, அவர்களில் குறைந்தபட்சம் 25% குழந்தைகளாவது நீண்ட கால கொரோனாவால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. இந்தக் குழந்தைகளுக்கு , உடல் சோர்வு, தூக்கம் சார்ந்த சிக்கல்கள், உணர்ச்சியின்மை போன்ற பிரச்சினைகள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் இவ்வகை பாதிப்புகள் குறித்து கடந்த பெப்ரவரி மாதம் எச்சரித்த போது, “பத்தில் ஒருவருக்கு நீண்ட நாள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனா பதிப்பு ஏற்பட்டு 12 வாரங்களுக்கு பின்னிருந்து இப்படியான பாதிப்புகள் தொடங்கிவிடுகிறது. ஆகவே கொரோனா நோயாளிகளுக்கு, நோய்த்தொற்று காலத்தில் மட்டுமின்றி, நோயிலிருந்து மீண்ட பிறகும், உடல் நலன் சார்ந்த முக்கியத்துவத்திற்கு கவனம் செலுத்த வேண்டும் என்கிறது நிபுணர்கள் குழு.

You must be logged in to post a comment Login